சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் கோலார் பகுதியில் வாழ்ந்து வந்த ஆதி தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை எப்படி நடத்தி வந்தார்கள்? விவாசாய பூமியாக இருந்த அந்த பகுதி எப்படி தங்கம் எடுக்கும் பூமியாக மாறியது ? என்பதை பிரமாண்டமாக ரத்தமும் சதையுமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பா. ரஞ்சித். இதற்காக கடுமையான உழைப்பை ரஞ்சித் மட்டுமல்லாமல் படத்தில் கடைசி வரிசையில் நிற்கும் நடிகர் வரை உழைத்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஹாலிவுட் பாணியில் தமிழர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தான் வாழும் பகுதி மக்களின் சுயமரியாதையையும், முன்னேற்றத்தையும் காத்து எப்படியாவது பொருளாதார தன்னிறைவு அடைய வேண்டும் என்று துடிப்பு உள்ள தங்கலான் முயலுகிறார். இதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும் அதற்குக் கிடைக்கும் பலனும் பரபரப்பான காட்சிகளாக திரையில் விரிகிறது.
விக்ரம் உயிரை கொடுத்து நடிக்கிறார். உடல்மொழி, பேசும் வசனம் என்று எல்லாவற்றிலும் வித்தியாசம். பண்ணை அடிமையாக்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்து குரல் கொடுக்கும்போதும், மனைவி பார்வதியிடம் கொஞ்சும்போது அப்படியொரு நடிப்பு. தங்களுக்கு சொந்தமாக நிலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் உதவியை நாடும் பிரிட்டிஷ் அதிகாரிக்கு உதவ நினைத்து ஏமாறும் இடத்தில் ஆக்ரோஷமும், இயலாமையும் நிறைந்த மண்ணில் வெற்று மேனியாக விழுந்து புரண்டு நடித்திருக்கும் விக்ரம் விருது பெறத்தகுதியானவர்.
ஹாலிவுட்டில் மெக்கனஸ் கோல்ட் திரைப்படம் போல படம் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தில் பார்வதி அட்டகாசப்படுத்தியிருக்கிறார். விக்ரம் தன்னை விட்டு பிரிந்து போவதை நினைத்து அழுது அடம் பிடிப்பதும், மேல் சட்டை அணிந்தவுடன் அடையும் மகிழ்ச்சியும் அழகு. இவர்கள் இருவரையும் நெருங்கும் மாளவிகா மோகனன் ஆரத்தி என்ற சூன்யக்காரியாக பயமுறுத்தியிருக்கிறார்.
யாரும் செய்யத்துணியாத பாத்திரத்தை பெண் அநாயசமாக செய்திருப்பது பாராட்டுக்குரியது.
படத்தில் ஒவ்வொரு பாத்திரமும் பாரட்டுக்குரியது. அவர்களின் உடை, மேக்கப் எல்லாம் கவனமாக செய்யப்பட்டிருப்பது படத்தில் நிஜ வாழ்க்கையை கண் முன் கொண்டு வந்து நிறுத்த உதவியிருக்கிறது. கதைக்களமாக காட்டும் இடங்களும் மிரட்டல். அடக்குமுறை செய்ய நினைக்கும் பிரிட்டிஷ் மற்றும் பண்ணையார்களின் ஆதிக்க மனோபாவத்தை காட்சிப்படுத்தியிருந்த விதம் சிறப்பு.
எவ்வளவோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் முதன் முறையாக வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு வந்திருக்கும் பா.ரஞ்சித் சினிமாவில் அடுத்தக் கட்டத்தைக் காட்டியிருக்கிறார்.
ஆரத்தியின் அறிமுகமும் பாம்புகளின் படையெடுப்பும் திகில், தங்கம் எடுக்க மலையை உடைக்கும் இடம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. பிரிட்டிஷ் அதிகாரிகளின் தாக்குதல் உச்சம் கொடுமை. இந்த காட்சிகளெல்லாம் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் தியேட்டருக்கு வர வழைக்கும் இடம்.
பா.ரஞ்சித்தின் கற்பனைக்கு காட்சி வடிவம் கொடுத்திருக்கும் ஏ.கிஷோர் குமார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இருவரும் முக்கியமானவர்கள்.
கதையை சொல்லும் விதத்தில் ரஞ்சித் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அவர் சொல்ல வந்த விஷயம் அடிமட்ட ரசிகர்களுக்கு போய் சேருவதில் சிக்கல் இருக்கிறது. குறிப்பாக வசனம் உச்சரிப்பில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக பேசியதில் என்ன பேசுகிறார்கள் என்பதே புரியவில்லை. இதை கவனித்திருக்கலாம். வழக்கமான சினிமாவாக எடுக்காமல் வித்தியாசம் காட்டியதற்காக பா.ரஞ்சித் பாராட்டலாம்.
புதிய முயற்சியை வரவேற்போம்.