ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த அப்படத்தில் பாபி தியோல், திஷா பட்டாணி மற்றும் பலர் முக்கிய அக்கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, போஜ்புரி என மொத்தம் 35 மொழிகளில் “கங்குவா” படம் உலகெங்கிலும் வெளியாகவுள்ளது. படத்தில் மொத்தம் 10 வெவ்வேறு கெட்டப்பில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான உச்சகட்ட எதிர்பார்ப்பை கிளறியுள்ளது.
பாடலாசிரியர் விவேகா ஒரு சம்பவம் பற்றி பேசும்போது, “சமூகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திய பொறுப்பான திரைப்படங்களை தயாரிப்பது மட்டுமின்றி நல்ல கதை கொண்ட படங்களில் நடிப்பதன் மூலம் சூர்யா பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். திரைக்கு முன்னாள் மட்டுமின்றி திரைக்குப் பின்னாலும் சிறப்பான குணாதிசயங்களை கொண்டவர் நடிகர் சூர்யா. நாங்கள் மணப்பாடு (தூத்துக்குடி மாவட்டம்) என்ற இடத்தில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தோம். படப்பிடிப்பு முடிந்ததும், சூர்யா மைக்ரோஃபோனை எடுத்து, ஷூட்டிங் ஸ்பாட்டைச் சுற்றியுள்ள குப்பைகளை அகற்றும்படி குழுவினருக்கு அறிவுறுத்தினார். நம்மை நம்பி, அவர்கள் ஊரையே நமக்கு படம் எடுப்பதற்காகக் கொடுத்த உள்ளூர் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அவர் எல்லோரிடமும் கூறினார்,” என்று சூர்யா குறித்து புகழ்ந்து பேசினார்.
இதே நிகழ்ச்சியில் ஹீரோ சூர்யா பேசும்போது, கங்குவா போன்ற ஒரு பரிசோதனை முயற்சியை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தைரியமாக முன்னெடுத்துள்ளது பெரிய விஷயம்.170 நாட்களுக்கும் மேல் இந்த படத்தை எடுத்திருப்போம். ’கங்குவா’ படத்தில் அனைவரது உழைப்பும் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகி இருக்காது. வெற்றியின் ஒளிப்பதிவு நிச்சயம் இந்திய சினிமாவில் பெரிதாக பேசப்படும். சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் சொன்னால் நான் பத்தாவது மாடியில் இருந்து கூட குதிப்பேன். அந்த அளவுக்கு அவர் மீது நம்பிக்கை எனக்கிருக்கிறது. சண்டைக்குள் ஒரு கதை வைத்து அசத்திவிடுவார். படத்தின் ஆன்மா இசைதான்.அதை சரியாகக் கொடுத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோருமே சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். வழிபடக்கூடிய கடவுள் தீயாக, நெருப்பாக, குருதியாக இருந்தால் அந்த நில மக்கள் எப்படி இருப்பார்கள், அவர்கள் வழிபாடு என்ன என்ற விஷயங்களை இதில் கொண்டு வந்திருக்கிறோம்.