நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதில் விஜய்யின் இளம் வயது கதாபாத்திரத்திற்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரியும், விஜய்யின் மற்றொரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக சினேகாவும் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளும், எதிர்ப்புகளுமாக இருக்கும் சூழலில் படம் வெளியாக இருக்கிறது.
உலகமெங்கும் 5000 திரைகளில் ரிலீஸ் ஆக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 1100 திரைகளில் திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிலும் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளதால், அங்கு இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ள கோகுலம் நிறுவனம் முதல் நாளில் மட்டும் கோட் திரைப்படம் கேரளாவில் 700 திரைகளில் சுமார் 4 ஆயிரம் ஷோ திரையிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த படத்தில் பல ஸ்பெஷலான விஷயங்கள் இடம் பெற்றிருக்கிறது. அதில் முக்கியமாக பார்க்கப்படுவது நடிகரும், தேமுதிக அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்தின் ஏஐ தோற்றம்தான்.
இதில் கேமியோ கதாப்பாத்திரத்திற்காக படக்குழுவினர் உபயோகித்திருக்கின்றனர். இதற்கான ஒப்புதலையும் அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து அவர்கள் பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில், கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் விஜயகாந்தைதான் தாங்கள் ஏஐ மூலம் உருவாகி இருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்தார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் ஆரம்ப நாட்களில் பல படங்களில் தனியாக நடித்து வந்தார். அந்தப்படங்கள் எல்லாம் படு தோல்வியை சந்தித்தன. இதனால் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சினிமாவை விட்டு வேறு வேலையில் ஈடுபட விஜய்யை நிர்பந்தித்தார். மகனை வைத்து சொந்தமாக எடுத்தப்படங்கள் எல்லாமே ப்ளாப் ஆன நிலையில் அடுத்து படம் எடுக்க வழி இல்லாமல் நிலை தடுமாறினார். இதனால்தான் விஜய்யை வேறு துறையில் ஈடுபடுத்த நினைத்தார். அன்று பரபரப்பாக இருந்த இயக்குனர் பாரதிராஜாவிடம் தனது மகனை வைத்து ஒரு படம் இயக்கித்தர கேட்டுக்கொண்டார். ஆனால் என் கதை அமைப்புக்கு உன் மகன் சரியாக இருக்க மாட்டான் என்று நிராகரித்தார் பாரதிராஜா.
இதனால் தனது ஆஸ்தான கதாநாயகனாக இருந்த விஜகாந்திடம் சென்று தனது மகனுக்காக ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க முடியுமா என்று கேட்டார். தன்னை வைத்து பல ஹிட் படங்களைக் கொடுத்த வெற்றி இயக்குனர் என்பதால் அவருக்காக விஜய் நடிக்கும் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க சம்மதித்தார். அப்படி உருவானதுதான் செந்தூரபாண்டி என்ற படம்.
இந்த படத்திற்குப் பிறகு விஜய்க்கு நல்ல நேரம் வேலை செய்ய ஆரம்பித்தது. அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் ஆனது. அப்படி தனக்கு சினிமாவில் ஒரு ப்ரேக் கிடைக்கக் காரணமான விஜயகாந்தை தனது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று விஜய் நினைத்திருந்தார். ஆனால் அவரின் திடீர் மறைவால் அந்த ஆசை நடக்கவில்லை. இந்த நிலையில்தான் வெங்கட்பிரபு சொன்ன டைம் ட்ராவல் கதையில் விஜயகாந்தை எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார் விஜய்.