கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து சில மாதங்களாகிவிட்டன. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் அடுத்த படத்திற்கு சென்றுவிட்டார் சூர்யா. இந்நிலையில், கார்த்திக்சுப்புராஜ் படத்துக்கு ரெட்ரோ என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பிரத்யேக டீசரும் வெளியிடப்பட்டிருக்கிறது.
முதலில் இந்த படத்துக்கு ஜானி என்ற தலைப்பு பேசப்பட்டது. பின்னர் ரெட்ரோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘ரெட்ரோ’ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சூர்யாவின் 2 டி நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச்சும் இணைந்து தயாரிக்கின்றன.
அடுத்த ஆண்டு படம் ரிலீஸ் ஆக உள்ளது. அந்தமான் ,ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது.
கங்குவா திரைப்படம் வெற்றி பெறாத நிலையில் ரெட்ரோவை பெரிதும் நம்பியிருக்கிறார் சூர்யா. எமோஷனன், ஆக்ஷன் கலந்த ரெட்ரோவை வெற்றி பெற வைக்க கார்த்திக் சுப்புராஜூம் உழைக்கிறார். காரணம், அவருக்கு ஒரு பிரம்மாண்ட வெற்றி தேவைப்படுகிறது. லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யாவை வைத்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றி பெற்றதால், அதை தக்க வைக்க இன்னொரு வெற்றி தேவைப்படுகிறது.
அதேபோல் ஏனோ பூஜா ஹெக்டேவுக்கும் தமிழில் ஒரு ஹிட் படம் அமையவில்லை. அவரும் ரெட்ரோவை ரொம்பவே நம்பியிருக்கிறார். சூர்யாவுக்கு தியேட்டரில் ஒரு படம் வெற்றி பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆகவே பலரும் நம்பிக்கையுடன் காத்திருக்கும் படமாக ரெட்ரோ அமைகிறது. தமிழ் தவிர, தெலுங்கிலும் ரெட்ரோ வெளியாக வாய்ப்பு. அனேகமாக, அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகலாம்.
கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் கூட்டணி பல வெற்றி பாடல்களை கொடுத்து இருப்பதால், இந்த படத்தில் இசைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.