மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பிரபல மலையாள நடிகர் திலகனின் மகள் குற்றம் சாட்டியுள்ளார்.
மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மலையாள திரையுலகில் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சினைகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நேற்று முன்தினம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. மலையாள திரையுலகில் நடிகைகள் 17 பிரச்சினைகளை எதிர்கொள்வதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது அங்கு பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மறைந்த பிரபல மலையாள நடிகர் திலகனின் மகள் சோனியா திலகன் கூறியிருப்பதாவது:
என் அப்பா திலகன், 2010-ம் ஆண்டு முதலே மலையாளத் திரையுலகில் நடக்கும் சில மோசமான சம்பவங்கள் தொடர்பாக வெளிப்படையாக பேசத் தொடங்கினார். மலையாள சினிமா 15 பேர் அடங்கிய ஒரு மாபியா கும்பலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அப்போதே அவர் கூறினார். அதை இப்போது ஹேமா கமிஷன் உறுதி செய்துள்ளது.
மலையாள திரையுலகில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து வெளிப்படையாக கூறியதால்தான் என்னுடைய தந்தையை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கி அவருக்கு சினிமா, டிவியில் நடிக்கவும் தடை விதித்தார்கள். என்னுடைய தந்தை இறந்த பின்னர் ஒரு மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் என்னை போனில் தொடர்பு கொண்டார். திலகனுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.
மேலும் சில முக்கிய விவரங்களை தெரிவிக்க வேண்டி இருப்பதால் தன்னுடைய அறைக்கு வருமாறு கூறினார். நான் அதற்கு மறுக்கவே போனில் சில ஆபாச தகவல்களையும் அவர் அனுப்பினார். அப்போதுதான் அவர் எதற்காக அறைக்கு அழைத்தார் என்பது எனக்கு புரிந்தது. அந்த சூப்பர் ஸ்டார் யார் என்பதை நேரம் வரும்போது கூறுவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கேரள அரசின் நடவடிக்கை என்ன?
ஹேமா கமிஷன் அறிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள பினராய் விஜயன், “மலையாள திரையுலகில் நடிகர்கள் வாங்கும் சம்பளத்துக்கும், நடிகைகள் வாங்கும் சம்பளத்துக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தொடர்பான பிரச்சினையில் கேரள அரசு தலையிடுவதாக இல்லை. இந்த விஷயத்தில் கேரள திரையுலக பிரமுகர்களே கலந்து பேசி ஒரு சுமுகமான முடிவைக் காணவேண்டும். பாலியல் ரீதியான பிரச்சினைகள் பற்றி ஹேமா கமிஷனில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது தொடர்பாக முறையான குற்றச்சாட்டு பதிவாகாத வரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது” என்றார்.