அதானியைத் தொடர்ந்து இன்னொரு மகா கோடீஸ்வரர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
ஸ்ரீதர் வேம்பு. இந்தியாவின் 48வது பெரும் பணக்காரர். சொத்து மதிப்பு 5 லட்சம் கோடி என்கிறது ஃபோர்ப்ஸ்.
பணக்காரர், சோஹோ – Zoho – என்ற பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள சர்வதேச நிறுவனத்தை நடத்துகிறார் என்பதால் மட்டும் அவர் புகழப்படவில்லை. அதைத் தாண்டி அவரது செயல்கள் பல ஊடகங்களின் கவனத்தை கவர்ந்து, அவரை தொழில் உலகின் உன்னத நாயகனாக உயர்த்தி வைத்திருந்தன.
அமெரிக்காவில் கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த ஸ்ரீதர் வேம்பு அந்த வாழ்க்கையைத் துறந்து தென் தமிழ்நாட்டு தென்காசிக்கு வந்து, அங்கு ஐடி நிறுவனக் கிளையை அமைத்தபோதே பலரின் கவனத்தைக் கவர்ந்தார். கிராமப்புற இந்தியாவை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தென்காசி பகுதிக்கு வந்ததாக கூறினார். இயற்கை விவசாயம், இயற்கையோடு வாழ்தல், ஆடு, மாடு என்று பல கதைகளை சொன்னார். அத்தனையும் இளைய தலைமுறைக்கு ஆச்சரியமாக இருந்தது. பாஜகவின் – பிரதமர் மோடியின் – ஆதரவாளர் என்ற பிம்பத்துடன் கடந்த சில வருடங்களாக பலரின் ஆதர்ச நாயகனாக வலம் வந்தார்.
இப்போது ஸ்ரீதர் வேம்பு மீது அவர் மனைவி பிரமிளா சீனிவாசன் கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்திருக்கிறார். தன்னையும் ஆட்டிச மகனையும் கைவிட்டார் என்று.
பிரமீளாவின் குற்றச்சாட்டுகள் இவைதான். தன்னையும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட தன் மகனையும் அமெரிக்காவில் விட்டு விட்டு இந்தியாவுக்கு வந்துவிட்டார். தன் பெயரிலுள்ள நிறுவன பங்குகளை தன் சகோதரிக்கும் அவரது கணவருக்கும் மாற்றிக் கொடுத்துவிட்டார். இப்போது வொட்ஸப் மூலம் டைவர்ஸ் கேட்டிருக்கிறார். மூன்று வருடங்களாக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மகனைப் பார்க்கவில்லை. அமெரிக்காவின் மிகப் பிரபலமான ஃபோர்ப்ஸ் பத்திரிகை இந்த செய்தியை முதன் முதலில் வெளி உலகுக்கு கொண்டு வந்திருக்கிறது.
ஸ்ரீதர் வேம்புவுக்கும் பிரமிளாவுக்கும் திருமணமாகி முப்பது ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 23 வருடங்கள் அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தில்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
கலிஃபோர்னியா மாநிலத்தின் சொத்து சட்டப்படி மனைவிக்குத் தெரியாமல் கணவன் குடும்பச் சொத்துக்களை விற்கக் கூடாது. கைமாற்றி விடக் கூடாது. ஆனால் சோஹோ நிறுவனப் பங்குகளை தனது சகோதரிக்கு மாற்றியிருக்கிறார் என்பது முக்கியமான குற்றச்சாட்டு. ஏன் இப்படி மாற்றினார் என்பதற்கு ஒரு முக்கியமான காரணம் கூறப்படுகிறது. விவாகரத்து ஆனால் கணவர் பெயரில் இருக்கும் சொத்துக்களின் மதிப்பைப் பொறுத்து ஜீவனாம்சமும் பிற நிதி உதவிகளும் அதிகரிக்கும். விவாகரத்து நடந்தால் மனைவிக்கு சொத்துக்கள் போய்விடக் கூடாது என்பதால் முன்பே சொத்துக்களை சகோதரி குடும்பத்துக்கு மாற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்து இன்று ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார் ஸ்ரீதர் வேம்பு.
என் மகனின் ஆட்டிச பாதிப்பு எங்கள் வாழ்க்கையை பாதித்துவிட்டது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் கடுமையாக போராடினோம். பலவித சிகிச்சைகளை மேற்கொண்டோம். இன்று என் மகன் சித்துவுக்கு 24 வயதாகிறது. சிகிச்சைகள் பலனளிக்கவில்லை. அதனால் இந்திய கிராமப் பகுதியில் அவன் வாழ்ந்தால் அவனுக்கு நன்றாக இருக்கும், இங்கு உதவி செய்யும் மனிதர்கள் இருக்கிறார்கள், மற்றவர்கள் வாழ்க்கையைத் தூக்கிவிடும் முயற்சியில் ஈடுபடலாம் என்றேன். ஆனால் நான் என் மகனை கைவிட்டுவிட்டேன் என்று பிரமிளா நினைக்கிறார். எங்கள் திருமண வாழ்க்கை உடைந்ததற்கு இதுதான் காரணம். அது மட்டுமில்லாமல் என் சித்தப்பாவை அவள் நம்புகிறார். அவர் எங்களுடன் உறவில் இல்லாமல்தான் இருந்தார். ஆனால் கான்சர் நோய் பாதிக்கப்பட்ட அவரை கவனிக்க ஆள் இல்லாததால் எங்களுடன் சேர்த்துக் கொண்டோம். அவர்தான் என் மனைவியைத் தூண்டிவிடுகிறார். மற்றபடி சொத்துக்கள் மாற்றப்படவில்லை. பிரமிளாவையும் மகனையும் நான் கைவிடவில்லை. அவர்கள் இன்னும் கலிஃபோர்னியாவில் எனது வீட்டில் மிக வசதியான வாழ்க்கையைதான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வரிசையான ட்விட்டர் பதிவுகள் மூலம் தனது தரப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதர் வேம்பு.
ஆனால் ஸ்ரீதர் வேம்புவின் நிறுவனமான சோஹோ நிறுவன பங்குகள் சகோதரிக்கும் மற்றவர்களுக்கும் மாற்றப்பட்டிருப்பதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.
சோஹோ நிறுவனத்தை வேம்புதான் நடத்தினாலும் அதன் பெரும்பான்மை பங்குகளை வேம்புவின் சகோதரி ராதா 47.5 சதவீத பங்குகளையும் வேம்புவின் சகோதரர் சேகர் 35.2 சதவீத பங்குகளையும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் ராதாவின் கணவர் தண்டபானிக்கும் அதிக அளவின் சோஹோ பங்குகள் மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது.
வேம்புவின் சித்தப்பா சீனிவாசனும் வேம்புவின் மீது குற்றச்சாட்டுக்கள் வைத்திருக்கிறார்.
விவாகரத்துக்காக பணத்தை மாற்றியிருக்கிறார் வேம்பு. விவாகரத்து முடிந்ததும் பங்குகள் மீண்டும் வேம்புவிடமே வந்துவிடும் என்கிறார் அவர்.
சென்னை ஐஐடியில் படித்த ஸ்ரீதர் வேம்பு 1989ல் அமெரிக்கா சென்றார். 1993ல் பிரமீளாவைத் திருமணம் செய்துக் கொண்டார். பிரமீளாவும் அமெரிக்காவில் படித்தவர். கம்ப்யூட்டர் படிப்பில் டாக்டரேட் வாங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் ஸ்ரீதர் வேம்பு சில நிறுவனங்களில் பணி புரிந்துவிட்டு 1998ல் அமெரிக்கர் ஒருவருடன் இணைந்து கம்ப்யூட்டர் தொழிலில் இறங்கியிருக்கிறார். அதன்பிறகு சோஹோ தொடங்கியிருக்கிறார். மிகப் பெரிய வெற்றி. இன்று உலகக் கோடீஸ்வரர்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார். மிக முக்கியமாக இந்திய இளைஞர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு ஒரு வழிகாட்டி பிம்பம். அதில் ஒரு பெரிய சறுக்கல். அவருடைய ஒரு பிம்பம் மட்டுமே முன்னிறுத்தப்பட்டு வந்த சூழலில் மற்றொரு முகம் வெளி வந்திருக்கிறது.
’வேம்புவுக்கு வேறு பல பெரிய யோசனைகள் இருக்கிறது. பணத்தை அதிகமாக சம்பாதித்திருக்கிறார். அடுத்து அவருக்கு தேவை அதிகாரம். அதனால் அவர் அரசியலுக்குள் நுழையலாம்’ என்கிறார் வேம்புவின் சித்தப்பா சீனிவாசன்.
ஐபிஎஸ் வேலையைவிட்டு அரசியலுக்காக அண்ணாமலை கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தது போல் ஸ்ரீதர் வேம்புவும் அரசியலுக்காக தொழிலதிபர் பணியிலிருந்து விலகி அமெரிக்காவிலிருந்து 2020ல் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கலாம். இயற்கை, கிராமப்புறம், இளைஞர்கள், ஆடு, மாடு என்று பிம்பத்தை அணிந்திருக்கலாம். நிச்சயமாக சொல்ல முடியாது.