நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கும் காங்கிரஸ் இடம்பெற்ற I.N.D.I.A. கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 298 தொகுதிகளில் பாஜகவும், 228-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் I.N.D.I.A. கூட்டணியும் முன்னிலையில் இருக்கின்றன. தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தல் களத்தில் மோடியின் சாம்ராஜியம் சரிகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் 282 இடங்களிலும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 303 இடங்களிலும் வென்றது பாஜக கூட்டணி. இந்நிலையில், இந்த தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் தேர்தலை சந்தித்தது பாஜக. ஆனால், 300ஐகூட தொட முடியாத நிலைக்கு இறங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் இணைந்து வலிமையான கூட்டணி அமைத்ததும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை பாஜக தனியே வென்ற நிலையில், இந்த முறை இழுபறியே நீடித்து வருகிறது. தெலுங்கு தேசம், ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சியமைக்க வேண்டும் என்ற சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே, ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள சந்திரபாபு நாயுடுவுடன் சரத்பவார் பேசியிருக்கிறார். சரத்பவார், I.N.D.I.A. கூட்டணியின் முக்கியத் தலைவராக இருக்கிறார் என்பதும், சந்திரபாபு நாயுடுவின் தயவு பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேவை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஒருவேளை சரத்பவாரின் பேச்சுக்கு பணிந்து சந்திரபாபு நாயுடு I.N.D.I.A. கூட்டணி பக்கம் சாய்ந்தால், ஆட்டம் வேறு மாதிரி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது!