சர்ச்சைகளுக்கு இப்பொழுது நயன்தாராவை விட த்ரிஷாவைதான் ரொம்ப பிடித்திருக்கிறது போல. மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி அடித்த கமெண்ட்டினால் சர்ச்சை கிளம்பியது. இப்போது அதிமுக கட்சியின் முன்னாள் நிர்வாகி ராஜூ கண்ணியக்குறைவான கமெண்ட்டினால் மீண்டும் த்ரிஷாவை சுற்றி சர்ச்சைகள் கிளம்பிருக்கின்றன.
இதனாலோ என்னவோ த்ரிஷா தமிழ் சினிமா பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை என்று ஒரு பேச்சு சொன்னாலும், தமிழில் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை.
த்ரிஷா, ஹீரோயினை மையமாக கொண்ட கதைகளில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் எதுவும் பாக்ஸ் ஆபீஸில் போணியாகவில்லை.
அடுத்து அஜித் விஜயைத் தவிர்த்து அடுத்தக்கட்ட பெரிய ஹீரோக்கள் யாரும் த்ரிஷாவுடன் நடிக்க பெரிதாக விரும்புவது போல் தெரியவில்லை. எல்லோரு இளம் ஹீரோயின்களுடன் நடித்தால்தான் அவர்களும் இளைமையாக தெரியமுடியுமென சொல்கிறார்களாம்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்து கொண்டிருந்த த்ரிஷாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார்கள் தெலுங்கு சினீயர் ஹீரோக்கள்.
இதில் முதல் இடம் சிரஞ்சீவிக்கு, இப்போது இவர் நடித்து கொண்டிருக்கும் ’விஷ்வம்பரா’ பட த்தில் தனக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவை பரிந்துரைத்திருக்கிறார் சிரஞ்சீவி. இதனால் இப்போது ஹைதராபாத்தில் சிரஞ்சீவியுடன் நடித்து கொண்டிருக்கிறார் த்ரிஷா.
இதைப்பார்த்த வெங்கடேஷ், தனது அடுத்தப் படத்தில் த்ரிஷாதான் ஹீரோயின் என்று சொல்லிவிட்டாராம். இதனால் அந்த படத்தயாரிப்பு நிறுவனம் த்ரிஷாவிடம் பேசி வருகிறதாம்.
த்ரிஷாவுக்கு 2 கோடி சம்பளம் கொடுக்கவும் ஆந்திராவில் தயாராக இருப்பதால், அடுத்த இரண்டு வருடங்களுக்கு தெலுங்குப் படங்களில் நடிக்காலாமா என த்ரிஷா திவீர யோசனையில் இருக்கிறாராம்.
ரஜினி நெல்சனுக்கு செய்த சம்பவம்
எத்தனையோ ஹிட் படங்களைக் கொடுத்திருந்தாலும், வசூலில் பல நூறு கோடிகளைப் பார்த்திருந்தாலும், ரஜினிக்கு ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றி ரொம்பவே ஸ்பெஷல்.
ரஜினி உச்சத்தில் இருக்கும் போது, அவருக்கு இருக்கும் மார்க்கெட்டின் அடிப்படையில் அடுத்தடுத்து தோல்விப் படங்களைக் கொடுத்தது ஜெயிலருக்கு முன்புதான்.
தன்னை மீண்டுவரச் செய்த நெல்சன் மீது ரஜினிக்கு ரொம்பவே ப்ரியம். அதுவும் நெல்சனின் பழக்கவழக்கம் ரஜினியை ரொம்பவே ஈர்த்திருக்கிறது என்கிறார்கள்.
இதனால்தான் ‘வேட்டையன்’, அடுத்து லோகேஷ் கனகராஜூடன் ஒரு படம் என இரண்டுப் படங்களை கைவசம் வைத்திருந்தாலும் நெல்சனை தன் வசம் இழுத்து பிடித்து வைத்திருக்கிறார்.
‘ஜெயிலரை’ விட ஒரு பெரிய ஹிட் கொடுக்க வேண்டுமென்றால் அது ’ஜெயிலர் 2’-வால் முடியுமென ரஜினி நம்புகிறாராம். இதனால் ரஜினியே சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனிடம் நேரடியாக போன் செய்து, ’ஜெயிலர் 2’ பண்ணலாமா என்று கேட்டாராம். மறுமுனையில் கலாநிதி மாறன் ’எப்போதுன்னு சொல்லுங்க’ என்றதாக சன் பிக்சர்ஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
இதனால் ‘ஜெயிலர் 2’ படம் வருவது உறுதியாகிவிட்டது என்றும் அதற்கான எழுத்து வேலைகளை நெல்சன் தன்னுடைய உதவி இயக்குநர்களுடன் உட்கார்ந்து ஆரம்பித்துவிட்டாராம்.
இந்த ஒரே காரணத்தினால்தான் நெல்சன் தனது அடுத்தப்படம் குறித்து எந்தவித வார்த்தையையும் இதுவரை விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
’ஜெயிலர் 2’ திரைக்கதையில் எந்தெந்த கதாபாத்திரங்களை தக்க வைப்பது, எந்த கதாபாத்திரங்களை சேர்ப்பது என்பதுதான் இப்போதைய விவாதமாக போய் கொண்டிருக்கிறதாம்.
லோகேஷ் கனகராஜ் படத்திற்கு அடுத்து உடனடியாக ’ஜெயிலர் 2’ -ஐ தொடங்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.