No menu items!

ரோபோ சங்கா் காலமானாா் – தலைவர்கள் இரங்கல்

ரோபோ சங்கா் காலமானாா் – தலைவர்கள் இரங்கல்

நடிகா் ரோபோ சங்கா் (46) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில்  காலமானாா். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கா், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கா், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தாா்.

சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்று வந்த நிலையில், கடந்த புதன்கிழமை காலை படப்பிடிப்பு தளத்தில் ரோபோ சங்கா் திடீரென மயக்கமடைந்தாா். அவருக்கு நீா்ச்சத்து குறைபாடு, குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவா் சென்னை பெருங்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வியாழக்கிழமை மாலை அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா். இருப்பினும் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திரைக் கலைஞா் ரோபோ சங்கா் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் தொடங்கி, சின்னத்திரை – வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் – கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

மேடைக் கலைஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி – சின்னத்திரையில் சாதித்து – திரைத்துறையில் தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தார் – நண்பர்கள் – கலையுலகினர் – ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும் – இரங்கலையும் தெரிவித்தோம்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான திரு. ரோபோ ஷங்கர் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்புச் சகோதரர் ரோபோ சங்கர் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

சின்னத்திரையில் இருந்து வளா்ந்து தமிழ்த் திரைப்படத் துறையில் தனது தனித்துவமிக்க நகைச்சுவைத் திறன் மூலமாகவும், குணச்சித்திர வேடங்களின் மூலமாகவும் புகழ்பெற்ற ரோபோ சங்கரின் மறைவு அதிா்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினா், ரசிகா்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

கு. செல்வப்பெருந்தகை

தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பாலும், மக்களின் இதயங்களில் புன்னகையை விதைத்ததாலும், ஒரு தலைமுறைக்கே அடையாளமாக விளங்கிய நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் திடீர் மறைவு மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.  ஒரு கலைஞன் தனது கலை மூலம் மக்களிடையே நிலைத்து நிற்பதற்கே மிகப்பெரிய அர்த்தம் உண்டு. அந்த அர்த்தத்தை உண்மையாக்கியவர் தான் ரோபோ சங்கர். அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும், சொன்ன ஒவ்வொரு வசனமும், வெளிப்படுத்திய ஒவ்வொரு புன்னகையும் – மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

மக்களின் மனதைக் கவர்ந்து, மகிழ்ச்சியையும் சிரிப்பையும் பரப்பியவர் இன்று இல்லாதிருப்பது, கலை உலகிற்கு மட்டுமல்லாது, மக்களின் வாழ்வின் பல்வேறு தளங்களுக்கு இழப்பாகும். மக்களின் வாழ்வியலில் கலைஞர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் எப்போதும் மதித்தும் காத்தும் வந்துள்ளது. அந்த வரிசையில், ரோபோ சங்கர் அவர்கள் தன் கலைப்பணியால் தமிழக மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு, சிரிப்பின் அருமையை நமக்கு உணர்த்திய ஒரு கலையுலகப் பங்களிப்பு இன்று நிறுத்தப்பட்டதுபோல் உள்ளது. ஆனாலும் அவர் விதைத்த புன்னகைகள் தலைமுறைகளுக்கு சின்னமாகவே தொடரும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவருடைய குடும்பத்தினர் இந்த மிகப்பெரிய துயரைத் தாங்க வலிமை பெற வேண்டும் என மனமாரக் கோருகிறேன்.

ஓ.பன்னீர் செல்வம்

சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் கொடிகட்சிப் பறந்த அன்பு சகோதரர் பலகுரல் மன்னன் ரோபா சங்கல் மறைவு செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

தனக்குள்ள தனித் திறமையாலும், கடின உழைப்பாலும் முன்னுக்கு வந்தவர். தனது நகைச்சுவை மூலம் மக்களை கவர்ந்த பெருமைக்குரியவர் ரோபோ சங்கர்.  அவரது இழப்பு திரைத்துறையினருக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.

அன்புமணி ராமதாஸ்

திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நகைச்சுவைக் கலைஞராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து அனைத்துத் தரப்பினராலும் ரசிக்கப்பட்ட ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ரோபோ சங்கர் பங்கேற்கத் தொடங்கிய நாளில் இருந்தே அவரது நிகழ்ச்சிகளை தொடர்ந்து கண்டு ரசித்து வந்திருக்கிறேன். மன அழுத்தத்தாலும், சோதனைகளாலும் இறுக்கமாக இருந்த காலங்களில் என்னை அவரது நகைச்சுவைகளின் மூலம் கவலைகளை மறந்து சிரிக்க வைத்தவர் சங்கர்.

திரைத்துறையில் ஏராளமான சாதனைகளை படைத்திருக்க வேண்டிய ரோபோ சங்கர் இளம் வயதில் நம்மை விட்டு பிரிந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

நயினார் நாகேந்திரன்

நடிகர் ரோபோ சங்கர் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை திறனால், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவலையில் இருந்து மீட்டவர். இவரது மறைவு, திரையுலகிற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.

அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி.

தமிழிசை சௌந்தரராஜன்

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் ரோபோ சங்கர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கே. அண்ணாமலை

தனது நகைச்சுவைத் திறனால், தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இடம்பிடித்த திரைக் கலைஞர், திரு. ரோபோ சங்கர் அவர்களது இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!

டிடிவி. தினகரன்

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

தமிழ்த் திரையுலகில் தனித்துவமிக்க நடிகராகத் திகழ்ந்த திரு ரோபோ சங்கர் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைக்கலைஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தொல்.திருமாவளவன்

நண்பர் ரோபோ சங்கர் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. என்மீதும் இயக்கத்தின் மீதும் பேரன்பு கொண்டிருந்தவர். கலை உலகில் சாதனைகள் படைத்து பொதுமக்களின் நல்லன்பை வென்றெடுத்தவர். அவரது மறைவு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் பெருந்துயரில் உழலும. குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கமல் ஹாசன்

ரோபோ சங்கர்ரோபோ புனைப்பெயர் தான்என் அகராதியில் நீ மனிதன்ஆதலால் என் தம்பிபோதலால் மட்டும் எனை விட்டுநீங்கி விடுவாயா நீ?உன் வேலை நீ போனாய்என் வேலை தங்கிவிட்டேன்.நாளையை எமக்கென நீ விட்டுச்சென்றதால் நாளை நமதே என தெரிவித்துள்ளார்.

சரத்குமார்

தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமாகி, படிப்படியாக உயர்ந்து தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக பிரபலமான ரோபோ சங்கர் அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இளம் வயதில் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

சமீபத்தில் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்த தருணம் மறக்க முடியாதது. தந்தையின் திடீர் மறைவால் வாடும் அவரது மகளுக்கும், ஈடு செய்ய முடியாத இழப்பால் சோகத்தில் வாடும் குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தவெக தலைவர் விஜய்

நண்பர் ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர். நண்பர் ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...