சர்வதேச அளவில் புகழ்பெற்ற வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் மற்றும் அதிக அளவில் சொத்துகளை வைத்துள்ள நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2023-ம் ஆண்டு இறுதியை வைத்து IMDb data தரவுகளை வைத்து இந்த பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர்களே முன்னணியில் இருக்கிறார்கள். தமிழ் நடிகர்களைப் பொறுத்தவரை விஜய் முதலிட்த்தில் இருக்கிறார்.
இந்த பட்டியலில் நிகர சொத்து மதிப்பில் முன்னணியில் இருக்கும் நடிகர்களைப் பார்ப்போம்…
ஷாரூக் கான் (ரூ.6,300 கோடி):
நிகர சொத்து மதிப்பில் மற்ற நடிகர்களால் எளிதில் எட்ட முடியாத உச்சத்தில் இருக்கிறார் ஷாரூக் கான். 2023-ம் ஆண்டு இறுதிப்படி இவரது சொத்து மதிப்பு 6,300 கோடி. ஷாரூக் நடித்து சமீபத்தில் வெளியான ஜவான், பதான் ஆகிய படங்கள் 2,000 கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்துள்ளதால் அவரது மார்க்கெட் ரேட் இன்னும் அதிகரித்துள்ளது. வரும் ஆண்டில் அது 7 ஆயிரம் கோடியை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சல்மான் கான் (ரூ.2,900 கோடி):
ஷாரூக் கானுக்கு அடுத்ததாக அதிக அளவில் சொத்துகளை சேர்த்துள்ள நடிகர் சல்மான் கான். ஆனால் ஷாரூக் கானின் சொத்து மதிப்பு 6 ஆயிரம் கோடியைத் தாண்ட, 2-வது இடத்தில் உள்ள சல்மான் கான் இன்னும் அதில் பாதியைக்கூட எட்டவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் உள்ள நிலவரப்படி அவரது நிகர சொத்து மதிப்பு 2,900 கோடி.
அக்ஷய் குமார் (ரூ.2,500 கோடி):
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அக்ஷய் குமாருக்கு கடந்த ஆண்டில் கட்டம் சரியில்லை. அவர் நடித்து வெளியான OMG 2 உள்ளிட்ட படங்கள் சரியாக போகவில்லை. இருந்தாலும் 2,500 கோடி ரூபாய் நிகர சொத்துகளுடன் இந்த பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார் அக்ஷய் குமார்.
ஆமிர் கான் (ரூ.1,862 கோடி):
ஆமிர் கானின் சமீபத்திய படமான லால் சிங் சத்தா சரியாக போகவில்லை. இந்த ஆண்டு வெளியாகவுள்ள சித்தாரே ஜமீன் பர் படத்தைத்தான் தனது எழுச்சிக்காக நம்பியுள்ளார். படங்கள் அதிகம் வெளிவராவிட்டாலும், வந்த படம் ஹிட் அடிக்காவிட்டாலும், அவரது சொத்து மதிப்பு 1,862 கோடி ரூபாய் என்ற கணக்கில் வலுவாக உள்ளது.
விஜய் (ரூ.474 கோடி):
இந்த பட்டியலில் தென்னிந்திய நடிகர்களில் முதலிடம் பிடித்துள்ள நபர் நம் தளபதி விஜய். தமிழ் சினிமா உலகின் வசூல் சக்ரவர்த்தியான விஜய்யின் நிகர சொத்து மதிப்பு 474 கோடி ரூபாய். அந்த வகையில் தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் நம்பர் 1 பணக்காரர் என்ற பெருமையையும் விஜய் பெற்றுள்ளார். கடந்த ஆண்டில் இவர் நடித்து வெளியான வாரிசு படம் 300 கோடி ரூபாயையும், லியோ படம் 612 கோடியையும் கடந்திருப்பது விஜய்யின் எதிர்காலத்தை பிரகாசமாக காட்டியுள்ளது.
ரஜினிகாந்த் (ரூ.430 கோடி):
கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தின் நிகர சொத்து மதிப்பு 430 கோடி ரூபாய், விஜய்யின் சொத்து மதிப்பைவிட ரஜினியின் சொத்து மதிப்பு குறைவாக இருப்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.
அல்லு அர்ஜுன் (ரூ.350 கோடி):
தெலுங்கு பட உலகம் மட்டுமே அறிந்திருந்த அல்லு அர்ஜுன், புஷ்பா படத்துக்குப் பிறகு பான் இந்தியா ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ள இப்பட்த்தின் இரண்டாம் பாகம், அல்லு அர்ஜுனின் மார்க்கெட்டை இன்னும் கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுனின் இப்போதைய நிகர சொத்து மதிப்பு 350 கோடி ரூபாய்.
இந்த பட்டியலில் 241 கோடி ரூபாய் சொத்துகளுடன் பிரபாஸ் 8-வது இடத்திலும், 196 கோடி ரூபாய் சொத்துடன் அஜித் 9-வது இடத்திலும் இருக்கிறார். கமல் 150 கோடி ரூபாய் சொத்துகளுடன் 10-வது இடத்தில் இருக்கிறார்.