கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கோரிக்கை வைத்துள்ளதாக தவெக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் அறிவழகன் தெரிவித்தார்.
மதுரையில் தவெக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் அறிவழகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகளில் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டுள்ளது என எங்கள் மனுவில் கூறியுள்ளோம். எனவே காவல்துறை இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது எனவும், சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம்.
இதில் இரண்டு நிவாரணங்கள் கேட்டுள்ளோம். கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை நீக்கிவிடுவார்கள், எனவே அதனை பாதுகாக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம்.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி சொல்லியிருந்தார்கள். ஆனால், பதிவாளர் இது தொடர்பாக இன்னும் உத்தரவு எதுவும் வரவில்லை எனச் சொல்லியுள்ளார். ஒருவேளை இன்று விசாரிக்கவில்லை என்றால், நாளையோ அல்லது வெள்ளிக்கிழமையோ விசாரணைக்கு வரும் என்று நம்புகிறோம்.
கரூர் நிகழ்ச்சியில் தடியடி நடத்தப்பட்டது என எங்கள் மனுவில் குறிப்பிட்டிருக்கிறோம். உயிரிழந்தவர்களை உடனடியாக உடற்கூராய்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன?. ஏற்கெனவே மருத்துவமனையில் உயிரிழந்தவர்களையும் இந்த கணக்கில் காட்டியுள்ளார்களா என்ற சந்தேகம் உள்ளது.
இச்சம்பவத்தில் மிகப்பெரிய சதிவலை உள்ளது, இது தொடர்பான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. செந்தில் பாலாஜி பற்றி விமர்சித்த பின்னர் விஜய் மீது அந்தக் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டது. இதுகுறித்து எல்லாம் விசாரிக்க வேண்டும். மற்ற மாவட்டங்களில் எல்லாம் விஜய் பிரச்சாரம் செய்தபோது பிரச்சினை இல்லை, கரூரில் மட்டும் பிரச்சினை ஏற்பட்டது ஏன்?. இதில் அனைவரும் ஒருவரையே குற்றம் சாட்டுகின்றனர்.