இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு (வயது 92) நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.
மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்பட உள்ளது. டெல்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட பலரும் மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மன்மோகன் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் மன்மோகன் சிங்கைப் பற்றி அதிகம் தெரியாத சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்…
பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு பிரிக்கப்படாத பஞ்சாப் மாகாணத்தின் காஹ் என்ற கிராமத்தில் மன்மோகன் சிங்கின் குழந்தைப் பருவம் அமைந்தது. அந்த காலகட்டத்தில் மின்சாரம் இல்லாத, சரியான குடிநீர் வசதி இல்லாத வீட்டில் மன்மோகன் சிங் வசித்தார்.
பஞ்சாபி, ஆங்கிலம், இந்தி உருது ஆகிய மொழிகளில் மிகச் சரளமாக பேசக்கூடிய ஆற்றல் மன்மோகன் சிங்குக்கு உண்டு.
மன்மோகன் சிங்குக்கு 14 வயதாக இருந்தபோது, அவரது குடும்பம் பாகிஸ்தானில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு குடிபெயர்ந்தது. பாகிஸ்தான் பிரிவினையின்போது எல்லாவற்றையும் இழந்த அவரது குடும்பம் அதன் பிறகு மெல்ல மீண்டது.
மன்மோகன் இச்ங்குடன் சேர்த்து மொரார்ஜி தேசாய், சரண் சிங், வி.பி.சிங் ஆகிய 4 நிதியமைச்சர்கள் பின்னாளில் நாட்டின் பிரதமர்களாக பதவியேற்றுள்ளனர்.
மன்மோகன் சிங்குடன் சேர்த்து எச்.எம்.படேல், சி.டி.தேஷ்முக், யஷ்வந்த் சின்ஹா ஆகிய 4 அரசு அதிகாரிகள் பின்னாளில் நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்து பின்னர் நிதியமைச்சராகவும், பிரதமராகவும் பதவி ஏற்றவர் என்ற பெருமை மன்மோகன் சிங்குக்கு உண்டு.
இந்தியாவின் முதல் இந்து அல்லாத பிரதமர் என்ற பெருமை மன்மோகன் சிங்குக்கு உள்ளது. மேலும் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தொடர்ந்து 2 முறை பிரதமராக பதவியேற்ற பெருமையும் மன்மோகன் சிங்குக்கு உண்டு.
1962-ல் நேரு பிரதமராக இருந்தபோது அரசுப் பணியில் சேருமாறு மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்போது அமிர்தசரஸில் ஆசிரியர் பணியில் இருந்த மன்மோகன் சிங், அதை விட விரும்பவில்லை. அதனால் அரசுப் பணியில் சேருவதற்கான அழைப்பை நிராகரித்துள்ளார்.
தினமும் காலை எழுந்தவுடன் பிபிசி செய்தியைக் கேட்பது மன்மோகன் சிங்கின் வழக்கம். 2004-ம் ஆண்டு இந்த வழக்கப்படி செய்திகளை கேட்டபோது, உலகின் பல பகுதிகளில் சுனாமி ஏற்பட்டதை அறிந்துள்ளார். உடனடியாக மீட்பு பணிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.