’ஜெயிலர்’ கொடுத்த உற்சாகத்தில், தனது அப்பா ரஜினியை ’லால் சலாம்’ பட த்தில் நடிக்க வைத்தார் ஐஸ்வர்யா. ஆனால் என்னவோ ஒரு ரஜினி படத்திற்கு வழக்கமாக இருக்கும் எந்த கொண்டாட்டமும் இல்லாமல் ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக வெளியானது.
இப்படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்களில், ரஜினியை வீணடித்துவிட்டார்கள் என்ற குரல்களை அதிகம் கேட்க முடிந்தது.
இந்த ’லால் சலாம்’ சிறப்புத்தோற்ற பஞ்சாயத்து முடிவதற்குள்ளாகவே ரஜினிக்கு அடுத்த பஞ்சாயத்து தயாராக முன் நிற்கிறதாம்.
முதலில் மூத்த மகள் படம் இயக்கினார். அப்பா சிறப்புத்தோற்றத்தில் நடித்தார். இப்போது இளைய மகள் படம் இயக்கப் போகிறார். வேறென்ன அப்பாவை இவரும் நடிக்க வைக்கவேண்டுமென அடம்பிடிக்கிறாராம்.
செளந்தர்யா சொன்ன கதை ராகவா லாரன்ஸூக்குப் பிடித்துப் போக, இந்த விஷயம் தயாரிப்பாளர் தாணு காதில் விழ, இப்போது அவர் இந்த ப்ராஜெக்ட்டை தயாரிக்க தயார் ஆக, யுவன் இசையமைக்க ஒப்புக்கொள்ள, கடையிசில் விஷயம் ரஜினி பக்கம் வந்து நிற்கிறது.
அக்காவுக்கு அப்பா நடித்து கொடுத்தது போலவே, எனக்கும் அப்பா நடித்து தரவேண்டுமென செளந்தர்யா வேண்டுகோள் வைத்திருக்கிறாராம்.
செளந்தர்யாவிடம் கதை என்ன என்று கேட்டிருக்கிறார் ரஜினி. தனது பாணியில் படபடவென கதையைச் சொல்லியிருக்கிறார் செளந்தர்யா. கண்களைச் சுருக்கி, தாடையைத் தடவியப்படியே கதை கேட்ட ரஜினி, இறுதியில் ஒகே சொல்லி இருக்கிறாராம்.
இதனால் செளந்தர்யா இயக்கும் படத்தில் ரஜினி சிறப்புத்தோற்றத்தில் வர இருப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.