ரஜினிக்கு நடிப்பைத்தவிர அதிம் பிடித்த விஷயம் தனது மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யாவுடன் பொழுதை கழிப்பதுதான். ஆரம்பக்கட்டத்தில் பள்ளி பருவத்தில் இருவரையும் ஒரே காரில்தான் பள்ளிக்கு அனுப்பி வைப்பார். அதுவும் தான் சினிமாவுக்கு வந்த பிறகு வாங்கிய முதல் காரான பிரிமியர் பத்மினி காரை அவர்களுக்கு கொடுத்து அனுப்பினார். மகள்களைப் போல அந்தக் காரையும் அவர் மிகவும் நேசித்தார் என்பது தனி கதை. மகள்கள் வளர வளர அவர்களை கல்லூரி படிப்பிற்குப் பிறகு திருமணம் செய்து வைத்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. ஆனால் காலம் அவர்களையும் சினிமாவுக்குள் இழுத்து விட்டு விட்டது.
ரஜினியின் மகள்கள் என்றாலே சினிமா வட்டார்த்தில் நடக்கும் நிகழ்ச்சிக்குப் போனால் தனி மரியாதை கிடைப்பது இயல்பான ஒரு விஷயம்தான். அதில் பெண்கள் என்றால் நட்பும், கூட்டமும் அன்பு செலுத்துவதற்கு கேட்கவா வேண்டும். இப்படி திரையுலகில் ரஜினி மகள்கள் என்ற அங்கீகாரம் ஐஸ்வர்யா – சௌந்தர்யா இருவருக்கும் ஒரு மயக்கத்தைக் கொடுத்தது என்றே சொல்லலாம். வழக்கம்போல சினிமா என்றால் அதன் இன்னொரு பக்கம் இரவு பார்ட்டி, கொண்டாட்டம், குதூகலம் என்று ஜாலி மூட் இருக்குமே. அது இருவருக்கும் வேறு ஒரு அனுபவதை கொடுத்தது. முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் என்று பலரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது கிடைத்த சினிமா தொடர்புகள்தான் ஐஸ்வர்யா மனதில் தானே தயாரிப்பாளராகி படங்களை எடுத்தால் என்ன என்ற ஒரு ஆசையை ஏற்படுத்தியது.
முதலில் கால் பதித்த இடம் வேறு. ஐஸ்வர்யா தன் அம்மா லதாரஜினிகாந்த் போலவே நல்ல குரல் வளம் உடையவர். இதனால் பின்னணி பாடலை பாட ஆசைப்பட்டார். தேவா இசையில் காஷ்மீர் என்ற படத்தில் நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து ஒரு பாடலைப் பாடினார். சாரி ஆண்டி.. சாரி அங்கிள் சாரியோட உங்கள் பொண்ணையும் பார்த்தேன் என்ற அந்தப் பாடல் பதிவானது. ஆனால் படம் பாதியிலேயே முடங்கிப்போனது. பிறகு பார்த்தி பாஸ்கர் இயக்கத்தில் டி.இமான் இசையில் நட்பே நட்பே என்ற பாடலை பாடினார். இப்படியாக சினிமாவில் தனது வரவை தொடங்கிய அவர், அப்பா ரஜினியிடம் அனுமதி வாங்கி படங்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டார். கூடவே தங்கை சௌந்தர்யாவும் சேர்ந்து கொண்டார். சென்னையில் ஆக்கர் என்ற பெயரில் பிரமாண்டமான ஸ்டுடியோ ஒன்று தொடங்கப்பட்டது. அதில் ஐஸ்வர்யா – சௌந்த்ர்யாவை சந்திக்க தினமும் சினிமாவின் முக்கிய விஐபிகள் அனைவரும் வந்து சென்றார்கள். ஆக்கர் ஸ்டுடியோ சார்பில் கோவா திரைப்படம் தயாரானது. ஆனால் அது தயாரான சூழல் நடந்த பல்வேறு சம்பவங்கள் ரஜினியின் மனதை காயப்படுத்தியது;. இதனால் மகள்களின் போக்கு பிடிக்காமல் ஆக்கர் ஸ்டுடியோவை மூட உத்தரவிட்டார். அதன் பிறகு கோச்சடையான் திரைப்படத்தை வேறு தயாரிப்பாளரை வைத்து மகள்களுக்காக படத்தை தயாரித்தார். அதுவும் சரியாக எடுபடவில்லை. இதனால் தனியாக படத்தை இயக்க ஆர்வம் காட்டினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 3 , வை ராஜா வை, லால் சலாம் போன்ற படங்களை இயக்கினார். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அக்காவை பாத்து விட்டு தங்கை சௌந்தர்யாவுக்கும் படம் இயக்கும் ஆசை வந்தது. வேலையில்லா பட்டதாரி 2ம் பாகத்தை எடுத்தார். அதிலும் பல்வேறு சர்ச்சைகள். இது எல்லாம் ரஜினிகாந்தின் காதுக்குப் போகவே மிகுந்த கவலையடைந்தார். இது அப்படியே லிங்கா படத்தின் விழாவில் எதிரொலித்தது.
எனது மகள்கள் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு புதிதாக எனக்கு சம்பாதித்துக் கொடுக்க வேண்டாம் . என்னுடைய சொத்தைக் காப்பாற்றினாலே போதும் நான் அவர்களிடம் கேட்பதெல்லாம் சீக்கிரம் எனக்கு ஒரு பேரக்குழந்தையை பெற்றுக் கொடுங்கள் என்று சொல்லி அவர் ஸ்டைலில் சிரித்தார். ஆனால் அந்த சிரிப்பில் ஒருவித வேதனைதான் தெரிந்தது.
இப்படி மகளின் தனி ஆவர்த்தங்கள் எல்லாம் சோபிக்காமல் போனது
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சௌந்தர்யா தொடங்கிய ஹூட் என்ற செயலி பெரிய எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்டது. குரல் மூலம் கருத்தை தெரிவிக்க இந்த தளம் பயன் படுத்தப்பட்டது. ஆனால் இதற்கு பெரிய ஆதரவு இல்லாமல் போனது. இதனால் ஹூட் தளத்தை சௌந்தர்யா மூடப்போவதாக தெரிகிறது. மகள்களின் ஆசையை ஒரு போதும் அணைபோட்டு தடுக்காத ரஜினி அவர்களை இஷ்டம் போல் போகவிட்டு அப்புறம் வழிக்குக் கொண்டு வரும் பாணியையே கடைபிடிப்பார். இப்போதும் ரஜினி சொன்னதுதான் நடந்துள்ளது. என் மகள்கள் என் சொத்தை காப்பாற்றினால் போதும். புதிதாக சம்பாதிக்க வேண்டாம் என்பதே பாசமிகு மகளுக்கு ரஜினியின் குரலாக இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ஆனாலும் மகள்கள் விஷயத்தில் அன்புள்ள அப்பாதான் ரஜினிகாந்த்.