முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்த், அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீடான வேதா இல்லத்தின் அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த்து. அப்படத்துக்கு அதிமுக தொண்டர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ஜெயலலிதாவின் வீட்டுக்கு வந்தார். அவரை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், அவரது கணவர் மாதவனும் வரவேற்றனர். வீட்டுக்குள் சென்ற ரஜினிகாந்த், அங்கிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு முன் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கை ஏற்றினார். பின்னர் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “4-வது முறையாக இந்த இல்லத்திற்கு வருகிறேன். 1977-ல் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கான ஒரு அழைப்பு வந்தது. அப்போது அவர்களைப் பார்ப்பதற்காக இந்த இல்லத்திற்கு வந்திருந்தேன். அதன் பிறகு ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் திறப்பு விழாவிற்கு அழைக்க வந்திருந்தேன். மூன்றாவது முறை மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்க வந்தேன். இப்போது நான்காவது முறை வந்திருக்கிறேன். அவர்கள் இங்கு இல்லாவிட்டாலும் அவரது நினைவுகள் எப்போதும் எல்லார் மனதிலும் இருக்கும். அவர்கள் நாமம் எப்போதும் வாழ்க” என்றார்.
இதன் தொடர்ச்சியாக ஜெ.தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், இன்றைய சூழ்நிலையை பார்க்கும் போது அதிமுக ஒன்றிணைவது சாத்தியமில்லை என்று தான் தோன்றுகிறது. இது தேர்தல் நேரத்தில் மிகவும் பின்னடைவாக அமையும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமெனில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் பேசுகையில் அதிமுகவில் அனைவரும் கட்சியின் விசுவாசிகள்தான்.
பதவி வகித்தவர்கள், பதவி வகிக்காதவர்கள், தொண்டர்கள் என அனைவரும் அடங்குவர். துரோகம் எனக் கூறுவதை எல்லாம் தனிப்பட்ட கருத்தாக தான் பார்க்க முடியும். ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய நிலைமையே வேறு. இதைத் தான் தமிழக மக்களும் எதிர்பார்ப்பார்கள். ஜெயலலிதாவின் நகைகள் தொடர்பான வழக்குகளை பொறுத்தவரை, சட்ட ரீதியாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ, அவற்றை எல்லாம் எடுப்போம் என்றார்.