ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் அவசரமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அடி வயிற்றில் லேசான வீக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது வழக்கமான உடல் பரிசோதனைதான் என்கிறார்கள் ரஜினியின் நெருக்கமான வட்டத்தில்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த சில நாட்களாக படப்பிடிப்பில் ரஜினியும் கலந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து அங்கு இருந்த காரணம்த்தால் காற்றின் உப்புத்தன்மை அதிகமாக ரஜினியின் சுவாசத்தில் கலந்திருக்கிறது. இதனால் அவருக்கு சிறுநீரகப்பகுதியில் லேசான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் அதிக கவனத்தில் எடுத்துக் கொண்டு அவரே நேரடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று பரிசோதனையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரஜினிக்கு லேசான அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த அறுவை சிகிச்சையை தலைசிறந்த நிபுணரான மருத்துவர் சாய் பாலாஜி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகைக்காக கூலி படத்தின் குழுவினரோடு மனசிலாயோ பாடலுக்கு லைவ்வாக நடனம் ஆடி அசத்தியிருந்தார். இந்த வயதில் அவரின் நடன அசைகளை எந்தவித தயக்கமும் இல்லாமல் ஆடியிருந்தது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. இது பொதுவான பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது. கல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என்கிற பழமொழி போல் இந்த ஆச்சரியத்திற்கு பிறகு ரஜினியின் உடல் நிலை பாதிப்பு அமைந்து விட்டதோ என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் மாதிரி வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தவர்களும் கிடையாது. அவரைப்போல கட்டுப்பாடன வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் கிடையாது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
பொதுவாகவே ரஜினிகாந்த், தான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு எப்படியெல்லாம் இருந்தேன் என்பதை பற்றி வெளிப்படையாக பல மேடைகளில் பேசியிருக்கிறார்.
அதில், “கண்டக்டராக இருந்தபோது தைனமும் சாராயம் இல்லாமல் இருப்பதில்லை. ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட் சிகரெட் குடிப்பேன் என்பது எனக்கே தெரியாது. தினமும் மட்டன் இல்லாமல் சாப்பிடமாட்டேன். அப்பவே அப்படின்னா நடிகனாகி சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு எப்படியிருந்திருப்பேன். தினமும் ஆட்டுக்கால் பாயாவும், சிக்கன் வறுவலும்தான் அதிகமாக இருக்கும். ஆனால் இதையெல்லாம் திருமணத்திற்கு பிறகு தனது அன்பால் மாற்றியவர் லதா” என்று பேசியிருக்கிறார்.
இனொரு இடத்தில், “நான் வெள்ளை ஐட்டங்களை சாப்பிடாமல் தவிர்த்து பல ஆண்டுகள் ஆகிறது. சர்க்கரை, உப்பு, அரிசி, தயிர் போன்றவற்றை சாப்பிடுவதில்லை. இதைச்செய்தாலே நாம் ஆரோக்யமாக வாழலாம்” என்றும் தனது மாற்றங்களுக்கு பிறகு சொல்லியிருக்கிறார்.
ரஜினிகாந்தின் ஒருநாள் காலை எப்படி விடிகிறது என்பதைக் கேட்டாலே, நம்மால் இப்படி இருக்க முடியுமா என்று யோசிக்கத் தோன்றுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு எழுந்திருக்கும் ரஜினி அத்தியாசவசிய வேலைகளை முடித்து விட்டு, போயஸ்கார்டன் பகுதியில் முக்கால் மணி நேரம் நடைபயிற்சியில் இருப்பார். அதை முடித்து வந்தவுடன், மூச்சுப் பயிற்சி அரைமணிநேரம், பிறகு தியானம் அரை மணிநேரம் என்று 3 மணிநேரம் உடல் ஆரோக்யத்திற்காக செலவிடுவார்.
காலையில் இஞ்சி சாறு லெமன் கலந்து கொஞ்சம் சாப்பிட்டு இடைவெளிவிட்டு க்ரீன் டீ சாப்பிடுவது வழக்கம். சில நாட்கள் இது மாறி சூப் ஏதாவது இருக்கும். காலை உணவாக இரண்டு இட்லி, அவித்த பயறுகள் ஏதாவது ஒரு வகை என்று இருக்கும். அதோடு 11 மணிக்கு பழங்கள் அல்லது சூப் சாப்பிடுவது உண்டு. சில நாட்கள் க்ரீன் டீ. இப்படியாக உணவு வகைகள் எல்லாம் எளிமையாகவும் இதமாகவும் மாற்றிக் கொண்டார் ரஜினிகாந்த்.
உணவு அன்றாட வாழ்க்கை இதையெல்லாம் விட அவர் தொடர்ந்து செய்து வந்த தியானம், மூச்சுப் பயிற்சிதான் அவரை இந்த வயதிலும் இளமையாகவும், இளையதலைமுறையினரோடு போட்டி போட்டு நடனம் ஆடவும் வைத்திருக்கிறது. ரஜினிகாந்த்போல் வேறு எந்த நடிகரும் இந்த வாழ்க்கை முறையை பேணி கடைபிடிக்கிறார்களா என்று பார்த்தால் அரிதுதான்.
எம்.ஜி.ஆரே உடற்பயிற்சியில் மட்டும்தான் கவனம் செலுத்தினார். இது வெளியில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மட்டுமே உதவியாக இருந்தது. அவரது உள்ளுறுப்புகள் ஆரோக்யம் குறித்த விழிப்புணர்வு அப்போது எம்.ஜி.ஆருக்கு இருந்திருக்க வில்லை. அதனால்தான் எம்.ஜி.ஆர். அவர்களின் உணவில் தினமும் கருவாடும், மட்டன் வறுவலும் இருந்திருக்கிறது. இது தொடர்ந்து எடுத்ததன் விளைவுதான் அவருக்கு நரம்புகள் பாதிக்கப்பட்டு வாதம், பேச்சு ஆகிய பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார். ஆனால் இதனை கடைசி காலத்தில் தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். தன் கைப்படவே சிவாஜிக்கு ஒரு வரி எழுதிக் கொடுத்திருக்கிரார். தம்பி இனிமேல் கருவாடு சாப்பிடுவதை நிறுத்தி விடு என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதோடு எம்.ஜி.ஆர். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அமைச்சர் காளிமுத்து அவரை சந்திக்கச் சென்றிருக்கிறார். அப்போது வேலையாட்கள் வந்து எம்.ஜி.ஆருக்கு மோர் வைத்திருக்கிறார்கள். அந்த மோர் டம்ளரை எம்.ஜி.ஆரால் எடுக்கக்கூட முடியவில்லை. கை வரவில்லையாம். காளிமுத்துவே எடுத்து அவருக்கு ஊட்டிவிட்டிருக்கிறார். இதனை கவலையோடு காளிமுத்து தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இந்த விஷயத்தில் ரஜினிகாந்த் தனது 60 வயதிலேயே எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். அதோடு தொடர்ந்து அவர் செய்த தியானம், யோகாசனம், மூச்சுப்பயிற்சி எல்லாமே அவரை இந்த அளவுக்கு உற்சாகத்தோடு வைத்திருக்கிறது. அதனால் இந்த மருத்துவ பரிசோதனை என்பது அவரை இன்னும் உற்சாகப்படுத்துமே தவிர எதுவும் செய்து விடாது.
ஆண்டவன் சொல்றான் அருணாச்சல்ம் செய்றான் என்று மீண்டும் களத்தில் இறங்குவார் ரஜினிகாந்த்.