தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்துள்ளது. வலு இழந்தாலும், இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) என 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரையில் 50 செ.மீ மழை
ஃபெஞ்சல் புயல் தாக்கத்தின் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த 24 மணிநேரத்தில் 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் காமராஜ் நகர், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்களை தீயணைப்பு துறையினர் மீட்டு, மீட்பு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
போச்சம்பள்ளி பகுதியில் கோனானூர் ஏரி நிரம்பி அதிகளவில் தண்ணீர் வெளியேறியதால், போச்சம்பள்ளி நான்கு ரோடு சந்திப்பு, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சமத்துவபுரத்தில் வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டு, மீட்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஊத்தங்கரை சுற்றுப்பகுதிகளில் மழை சூழ்ந்த இடங்களில் மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு நேரில் சென்று மீட்புப்பணியை துரிதப்படுத்தி வருகிறார்.
புதுச்சேரியில் 46 சென்.மீ மழை
நேற்று (டிச. 01) காலை 7 மணி நிலவரப்படி, ”கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிககனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளன” என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
“அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ மழையும் புதுச்சேரியில் 46 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. ‘புதுச்சேரியில் இதுவரை பதிவான மழை அளவு தரவுகளை வைத்து பார்க்கும் போது இதுவே அதிகபட்ச மழையாகும். இதற்கு முன்னர் 2004-ஆம் ஆண்டு புதுச்சேரியில் 21 செ.மீ மழை பதிவாகியிருந்தது. தற்போது 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கிய 7 பேர்
திருவண்ணாமலையில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்ட நிலையில், சிறுவர்கள் உட்பட 7 பேர் மண்ணுக்குள்ள புதைந்துள்ளனர். இந்நிலையில், மலைப் பாதை என்பதாலும், இடிபாடுகளுடனும் உள்ளதால் மீட்புப் பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, வ.உ.சி. நகர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், ராட்ச பாறையொன்று சரிந்துள்ளதால் மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் மக்களின் வீடுகளின் மேல் மண் சரிந்துள்ளது. 35 டன் எடை கொண்ட ராட்சதப் பாறை, சுமார் 20 அடி சரிந்து மண் குவியல்கள் வீடுகளை மூடியுள்ளது.
இந்த மண் சரிவு காரணமாக ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்துள்ளது. மேலும், 2 வீடுகளும் மண் சரிவுக்குள் சிக்கியுள்ளன. அந்த 2 வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் மண்ணில் புதையாமல் தப்பியுள்ளனர். ராஜ்குமாரின் வீட்டுக்குள் அவரது மனைவி மீனா, அவர்களது குழந்தைகள் 2 பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டுக்குள் இருந்தவர்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கிழக்கு கடற்கரை சாலை வழியாக விழுப்புரம் புறப்பட்டுச் சென்றார். அப்போது, மாமல்லபுரம் அருகேயுள்ள தேவனேரியில் உள்ள இருளர் மக்களை சந்திந்து வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அப்பகுதி மீனவர்கள் தேவனேரி பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் மற்றும் இருளர் மக்களுக்கு குடியிருப்புகள் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் மனுக்களை வழங்கினர்.
பின்னர், அங்கிருந்து கல்பாக்கம் பகுதிக்கு சென்ற முதல்வர் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். பின்னர், இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் உள்ள கடப்பாக்கம் அடுத்த சேமிலிபுரம் பகுதியில் சேதமடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின்சார வாரியத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், பொதுமக்கள் வழங்கிய பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு விழுப்புரம் புறப்பட்டுச் சென்றார். இந்த ஆய்வின் போது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.