கேரளாவின் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, தனக்கு 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவின் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனுவுடன் அவர் தனது சொத்துக் கணக்கையும் தாக்கல் செய்துள்ளார்.
ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தின்படி அவருக்கு 9.24 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும், 11.15 கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளன. இதன்படி ராகுல் காந்தியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.20 கோடி. அவருக்கு சொந்த வாகனம் ஏதும் இல்லை.
பங்கு சந்தைகளில் ராகுல் காந்தி 4.3 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். மியூச்சுவல் பண்டுகளில் 3.81 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். இதைத் தவிர அவரது வங்கிக் கணக்குகளில் 26.25 லட்சம் ரூபாய் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கையில் 55 ஆயிரம் ரூபாய் வைத்துள்ளார்.
2022-23 நிதியாண்டில் ராகுல் காந்தியின் மொத்த வருமானம் ரூ.1,02,78,680 என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எம்பியாக இருப்பதற்காக கிடைக்கும் சம்பளம், சொந்த கட்டிடத்தில் இருந்து கிடைக்கும் வாடகை, ராயல்டி, வங்கியில் இருந்து கிடைக்கும் வட்டி வட்டி ஆகியவற்றின் மூலம் தனக்கு வருவாய் வருவதாக ராகுல் காந்தி இந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.15.20 லட்சம் மதிப்புள்ள தங்கப் பத்திரங்களும், தேசிய சேமிப்புத் திட்டங்கள், அஞ்சல் சேமிப்பு, காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் ரூ.61.52 லட்சம் மதிப்பில் முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதே நேரம் அவருக்கு சுமார் ரூ.49.7 லட்சம் கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் ராகுல் காந்தியின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.5.8 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ராகுல் காந்தியின் அசையும் சொத்துகளின் மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 59 சதவீதம் உயர்ந்துள்ளது.