ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இரு நாடுகள் இடையிலான வா்த்தக சமநிலையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீா்வுகாணும் வகையில் இந்த நடவடிக்கையை விளாதிமீா் புதின் மேற்கொண்டுள்ளாா்.
இந்தியாவில் இருந்து அதிக அளவில் வேளாண்மை உற்பத்திப் பொருள்கள், மருந்துகளை இறக்குமதி செய்ய புதின் உத்தரவிட்டுள்ளாா்.
இந்திய பொருள்கள் மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு பதிலடி தரும் நடவடிக்கையாகவும் இது கருதப்படுகிறது..
இந்தியா உள்பட 140 நாடுகளைச் சோ்ந்த சா்வதேச பாதுகாப்பு மற்றும் புவிசாா் அரசியல் நிபுணா்கள் பங்கேற்ற கூட்டம் ரஷியாவின் சோச்சி நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிபா் புதின் பேசியதாவது:
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவை தண்டிக்கும் வகையில் அமெரிக்கா வரிகளை விதித்தது. இதனால், இந்தியாவுக்கு ஏற்படும் இழப்புகளை குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்குவதன் மூலம் நிவா்த்தி செய்து வருகிறோம். மேலும், இறையாண்மையுள்ள ஒரு நாட்டை கௌரவித்து வருகிறோம்.
இந்தியா-ரஷியா இடையே ஏற்பட்டுள்ள வா்த்தக சமநிலையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வை சரி செய்யும் வகையில் இந்தியாவிடம் இருந்து அதிகஅளவில் வேளாண்மை பொருள்கள், மருந்துகளை இறக்குமதி செய்ய ரஷியா முன்வந்துள்ளது. இது தொடா்பாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளேன். நெருங்கிய நட்பு நாடான இந்தியாவுடன் வா்த்தகம் உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும்.
ஒருங்கிணைந்த சோவியத் யூனியனாக இருந்த காலம் முதல் தற்போது வரையில் இந்தியாவுடன் நட்புறவு தொடா்கிறது.
இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிவுடனான எனது சந்திப்புகளும், உரையாடல்களும் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவை.
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை: நீண்ட தூரம் தாக்கும் டோமஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்க வழங்கினால் ரஷியா-அமெரிக்கா உறவு மோசமாகிவிடும். .