சில்லறை விற்பனை நிறுவனங்கள் விதிகளை மீறி பிபிஎஸ் அதிகம் கொண்ட ரசீதுகளையே பயன்படுத்துகின்றன. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அபாயம்.
“பில் போடும் இயந்திரங்கள் மூலம் வழங்கப்படும் எந்த வகையான காகித ரசீதுகளையும் 10 வினாடிகளுக்கு மேல் கையில் வைத்திருந்தால், அதிலிருக்கும் ரசாயனம் உடலில் சென்று, ஆண்களின் விந்தணுவை பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
கடையில் பொருள் வாங்கியதற்கான ரசீது, ஏடிஎம் ஸ்லிப்புகள், உணவகங்களில் வழங்கப்படும் பில்கள் போன்றவற்றில் பிஸ்பெனால் எஸ் (பிபீஎஸ்) இருக்கலாம் என்பதால், அதனை கையில் வைத்திருக்கும்போது, ஒரு சில வினாடிகளில் அந்த ரசாயனம் நமது உடலில் தோல் வழியாக ஊடுருவி விடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிஸ்பெனால் எஸ் என்பது, ஹார்மோன்களை பாதிக்கும் திறன் பெற்ற மிமிக் ஈஸ்ட்ரோஜன் கொண்ட கலவையாகும். இது உடலின் இயங்குசக்தியை பாதித்து, மனித வளர்ச்சி மற்றும் உடலின் சீரான இயக்கத்தை தடுக்கும். எனவே, இந்த பிஸ்பெனால் எஸ், மனித ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம் இருக்கலாம் என்றும், ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியைக் குறைக்கும் அபாயம், மூளையின் செயல்பாடுகளில் பாதிப்பு, பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உருவாக்கும் அபாயமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அமெரிக்காவில் பயன்படுத்தும் ரசீதுகளில் பிபீஎஸ் அளவுக்கு அதிகமாக இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் சுகாதாரத் துறை கண்டறிந்து, அபராதம் விதித்துள்ளது.
மக்களைப் பொருத்தவரை நாள்தோறும் ஏதோ ஒரு வகையில் நிச்சயம் ஒரு ரசீதையாவது கையில் வாங்கும் நிலை ஏற்படலாம். ஆனால், கடையில் பணியாற்றும் ஊழியர்கள் போன்றவர்கள்தான் அதிக அபாயத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
தற்போதைய ஆய்வு முடிவுகளின்படி, சில பிபீஎஸ் அதிகம் கொண்ட ரசீதுகளை கையில் 10 வினாடிகள் வைத்திருந்தாலே போதும், அது மனிதர்களை பாதிக்கும் திறன்பெற்றது என்றும் இது குறித்து நுகர்வோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
சாதாரண காகிதங்கள் போல் அல்லாமல், மேலே வழுவழுப்பாகக் காணப்படும் ரசீதுகள் பிஸ்போனெல்ஸ் கொண்டதாக இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்த ரசாயனம் ஒன்றும் மனிதர்களுக்கு புதிதில்லை என்கிறார்கள். ஏற்கனவே, பொட்டலமிடப்பட்ட உணவுகள், துணிகள், பொம்மைகள், சமையல் பாத்திரங்களிலும் இது கலந்தே உள்ளது.