வடசென்னை தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
வட சென்னை தொகுதியின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் இன்று ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரில் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இருவரும் தங்கள் கட்சி வேட்பாளர்தான் முதலில் வந்தார். அதனால் அவரைத்தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிக்கு நெருக்கடி கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக வேட்புமனு தாக்கல் பாதிக்கப்பட்ட்து.
பின்னர் இரு வேட்பாளர்களில் முதலில் வந்தது யார் என்று வருகைப் பதிவேட்டில் பரிசீலிக்கப்பட்டது. அதன்படி அதிமுகவின் ராயபுரம் மனோ தரப்பு முதலில் வந்தது உறுதிசெய்யப்பட்டது. அவரையே முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்தார். அதுவரை, அமைச்சர் சேகர்பாபு, கலாநிதி வீராசாமி, சென்னை மேயர் பிரியா ஆகியோர் தனி அறையில் அமரவைக்கப்பட்டனர்.அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்த பிரகு கலாநிதி வீராசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “முதலில் டோக்கன் வாங்கியது திமுக வேட்பாளர்தான். அதிமுகவினர் வேண்டும் என்றே பிரச்னை செய்கிறார்கள். தோல்வி பயத்தின் காரணமாக இவ்வாறு செய்கிறார்கள்” என்று தெரிவித்தார். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ, தாங்கள்தான் முதலில் சென்றதாகவும், வேட்புமனு தாக்கலில் ஆளும் திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம்சாட்டினார்.
வேட்புமனு தாக்கல் சூடுபிடித்தது
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததால், தமிழக தேர்தல் களம் இன்று சூடுபிடித்தது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று பவுர்ணமி என்பதால் ஏராளமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் ஏராளமானோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்த்தால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் இன்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவுசிக் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார். ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதே போல், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமாரும் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அ.தி.மு.க, பா.ஜனதா கட்சி வேட்பாளர்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னையில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போது சந்தித்துக்கொண்ட வேட்பாளர்கள் பலரும் கட்சி வேற்றுமைகளை மறந்து பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் பின்னடைவு
அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ள உயர் நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீது எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூன 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.