No menu items!

திமுக கூட்டணியில் பாமக வராது – மிஸ் ரகசியா!

திமுக கூட்டணியில் பாமக வராது – மிஸ் ரகசியா!

“ஈரோடு கிழக்கு வெற்றியைத் தொடர்ந்து திமுக தலைவர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கணக்குகளை போடத் தொடங்கிட்டாங்க. நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலினை தேசிய அளவில் எடுத்துட்டு போறதுதான் அவங்களோட முக்கிய திட்டம்” என்றபடி ஆபீசுக்குள் வந்தாள் ரகசியா.

“அதே கூட்டணிதானே நாடாளுமன்றத் தேர்தலுக்கும் நீடிக்கப் போகுது. அப்புறம் என்ன திட்டம்?”

“கூட்டணி அதேதான். ஆனா கூட்டணிக் கட்சிகளுக்கான சீட்டைக் குறைக்கணும்கிறது இந்த பேச்சுவார்த்தையோட மையக் கருத்தா இருக்கு. அடுத்த தேர்தல்ல பாஜக கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டு, திமுகவுக்கு அதிக எம்பிக்கள் இருந்தா தேசிய அரசியல்ல ஸ்டாலினோட செல்வாக்கு அதிகரிக்கும்கிறது திமுக தலைவர்களோட கருத்து. ‘மத்திய அரசுல 10 வருஷமா நம்ம பங்களிப்பு இல்லை. இதே நிலை அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகும் நீடிக்கக் கூடாது. மத்திய அரசுல நாமளும் இருக்கணும். மத்தியில செல்வாக்கா இருந்தாத்தான் மாநிலத்தில் நிறைய நலத்திட்டங்களைக் கொண்டுவந்து அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்குள்ள கட்சியை வலுப்படுத்த முடியும்’னு மூத்த தலைவர்கள் சொல்லிக்கிட்டு இருக்காங்களாம்”

“பாஜக கூட திமுக கூட்டணி அமைக்கும் அதனாலதான் பிரதமரை உதயநிதி சந்திச்சார்னு ஒரு பேச்சு இருக்கே?”

“ஆமாம். அதனாலதான் பிறந்தநாள் பொதுக்கூட்டத்துல பேசின முதல்வர் ஸ்டாலின், ‘2024 நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைவிட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது முக்கியம்’னு பேசி இருக்கார் கூடவே பாரதிய ஜனதாவையும் ஆளுநரையும் கடுமையாக விமர்சிச்சிருக்கார்.”

“அதனால கூட்டணிக் கட்சிகள் கூல் ஆயிட்டாங்களா?’

“இந்த கூட்டத்துல தங்கள் சந்தேகத்தை முதல்வர் தீர்த்து வச்சதுல அவங்களுக்கு ஓரளவு திருப்தி ஆனா தேசிய தலைவர்களை மட்டும் மேடையில உட்கார வச்சு தங்களை கீழ உட்கார வச்சதுல மாநில கட்சித் தலைவர்களுக்கு வருத்தமாம்.”

“பாஜகவுக்கு எதிரான கூடத்துல திருமாவளவன் ஆவேசமா பேசியிருக்கிறாரே?’

“ஆமாம் கொஞ்ச நாட்களாவே திமுக தன்னை மதிக்கலைங்கிற ஆதங்கம் திருமாவளவனுக்கு இருக்கு. அதோட பாமகவை கூட்டணியில சேர்த்துக்க திமுக முயற்சி செய்யுதோன்னும் அவர் சந்தேகப்படறார். அதனாலதான் பாரதிய ஜனதாவுக்கு எதிரான கருத்தியல் யுத்தத்தை நாங்கதான் நடத்தறோம். வேறு யாரும் இல்லைனு பேசுனார். மறைமுகமா திமுகவைதான் குறிப்பிட்டார்னு திமுககாரங்களுக்கே கொஞ்சம் கடுப்புதான். அண்ணாமலை நடத்தின கூட்டத்துல முன்னாள் ராணுவ வீரர்கள் வன்முறையை தூண்டும் விதமா பேசுனாங்க. ஆனா அண்ணாமலையை போலீஸ் கைது செய்யலனும் சொன்னார். இது ‘தமிழக போலீஸ் பாஜக போலீசா?’ன்னு கேட்டிருக்கார் திருமாவளவன். போலீஸ் இலாகாவை கையில வச்சிருக்கற முதல்வரை விமர்சிப்பதுபோல் இது இருந்திருக்கு. ஆனா இப்போதைக்கு திமுக அவரோட பேச்சை கண்டுக்கிறதா இல்லை. திருமாவளவன் போனாலும் பெரிய பாதிப்பு இல்லைன்னு பேசத் தொடங்கி இருக்காங்க.”

“நீ இவ்வளவு சொல்ற. முதல்வரை புகழ்ந்து அவர்தான் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கணும்னுலாம் சொல்லியிருக்கிறாரே?”

“ஆமாம். அதையும் திமுக கவனிச்சுக்கிட்டுதான் இருக்கு. இப்ப இருக்கிற சூழல்ல கூட்டணியை மாத்துற முடிவுல ஸ்டாலின் இல்லை. அது தெரிஞ்சுதான் அன்புமணி, ‘திமுக ஒரு முறை ஆட்சி வந்தால் திரும்ப வராது. மீண்டும் திமுகவை மக்கள் தோ்வு செய்ய மாட்டார்கள். தற்போது அதிமுக 4ஆக குழப்பத்தில் உள்ளது. எனவே வரவிருக்கும் தேர்தலில் இதற்கு அடுத்த தேர்வாக பாமக தான் உள்ளது. 2026ல் பாமக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்’னு பேசினார்.”

”பாமகலயும் ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்திருக்காமே?”

“விஷயம் உங்க வரைக்கும் வந்துடுச்சா?… முன்ன ஜி.கே.மணி கட்சித் தலைவரா இருந்தாலும் கட்சியோட முக்கிய முடிவுகளை கட்சி நிறுவனரான ராமதாஸ்தான் எடுத்துட்டு இருந்தார். முக்கிய விஷயங்கள்ல கருத்து சொல்றது, அறிக்கை வெளியிடாறதுன்னு எல்லாத்தையும் அவர்தான் பார்த்துட்டு இருந்தார். இப்ப அன்புமணி தலைவரான பிறகும் இதே நடைமுறைய டாக்டர் ராமதாஸ் பின்பற்றரார். இதை அன்புமணி ரசிக்கலை. கட்சி முழுசா தன்னோட கட்டுப்பாட்டுல இருக்கணும்னு அவர் நினைக்கிறார். இதனால அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில மவுன யுத்தம் நடக்குதாம். அதனால்தான் ‘தமிழைத் தேடி’ங்கிற தலைப்புல டாக்டர் ராமதாஸ் தொடங்கின பாதயாத்திரையில அன்புமணி ராமதாஸோட பங்களிப்பு ஏதும் பெருசா இல்லைன்னு சொல்றாங்க.”

“அப்பாவும் பிள்ளையுமா இருந்தாலும் வாயும் வயிறும் வேறதானே…

உதயநிதி பிரதமர் சந்திப்பு பத்தி ஏதாவது நியூஸ் இருக்கா?”

“உதயநிதியும் பிரதமரும் சந்திக்கறது அன்னிக்கு மதியம் வரைக்கும் உறுதியாகல. அன்னைக்கு கர்நாடக மாநிலத்துல சில நிகழ்ச்சிகள்ல பிரதமர் கலந்துக்க வேண்டி இருந்ததால கடைசி நேரத்துலதான் அந்த சந்திப்பு முடிவானது. இந்த சந்திப்புக்கு டி.ஆர்.பாலு, கனிமொழின்னு டெல்லியில இருக்கிற திமுக பிரபலங்கள் யாரும் அவரோட போகல. அதனால அவங்க என்ன பேசிக்கிட்டாங்கன்னு சரியா தெரியல. சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்கள்கிட்ட பேசின உதயநிதி, ‘இந்த சந்திப்புல நான் அரசியல் பேசலை. நீட் விலக்கு பற்றி மட்டும்தான் பேசினேன். டெல்லி வந்தால் தன்னை அவசியம் சந்திக்கணும்னு பிரதமர் உரிமையோட கேட்டுக்கிட்டார்’னு சொல்லி இருக்கார். பிரதமரை சந்திச்சதில உதயநிதி ரொம்பவே சந்தோஷமா இருக்கார்.”

“ஈரோடு இடைத்தேர்தக் தோல்விக்குப் பிறகு எடப்பாடி கேம்ப்போட மனநிலை எப்படி இருக்கு?”

“எடப்பாடி தரப்பை பொறுத்தவரை இந்த தேர்தல்ல தோத்தாலும் அதைப்பத்தி பெருசா கவலைப்படறதா இல்லை. முடிவு நமக்கு எதிரா இருந்தாலும் திமுகவுக்கு நாம இந்த தேர்தல்ல பயம் காட்டிட்டோம். அமைச்சர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த திமுககாரங்களும் ஈரோட்டில் தேர்தல் வேலை பார்த்தது பணத்தை வாரி இறைச்சதுக்கு நம்ம மேல இருந்த பயம்தான் காரணம்னு நினைக்கறாங்க. இந்த தடவை பணத்தைக் கொடுத்து திமுக ஜெயிச்சுடுச்சு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்ல நாம் கண்டிப்பா ஜெயிக்க முடியும்னு அவங்க நம்பறாங்க. எடப்பாடியை பொறுத்தவரை டெல்லியில அதிமுக அலுவலகத்தை திறக்கறதுல குறியா இருக்கார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பாஜக தேசிய தலைவர்களை கூப்பிட்டு ஆவங்களோட தனக்கு இருக்கற நெருக்கத்தை அதிகப்படுத்த எடப்பாடி திட்டமிட்டு இருக்கார். ஆனா அதற்கு உட்கட்சில எதிர்ப்பு இருக்கு. பாஜக நெருக்கம் வேண்டாம்னு சில தலைவர்கள் சொல்றாங்க. ஈரோடு கிழக்குல பாஜக நம்ம கூட இல்லனா இன்னும் 20 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருக்கலாம்னு சொல்லியிருக்காங்க”

“திமுக மாதிரியே அதிமுகவும் டெல்லில சொந்தக் கட்டிடத்துக்கு போகுதா?”

“ஆமாம் விழாவுக்கான ஏற்பாடுகளை தம்பிதுரை கவனிச்சுக்கிட்டு இருக்கார். ஜெயலலிதா காலத்துல ஆரம்பிக்கப்பட்ட வேலை இது இன்னும் முழுசா முடியல. அங்க நமக்குனு ஒரு கட்டடம் இருந்தா தேசிய அரசியலுக்கு உதவும்னு அதிமுக தலைமை நினைக்குது”

”இப்படி எல்லா கட்சியும் தேசிய நீரோட்டத்துல சேர்ந்துட்டா தமிழ்நாட்டு அரசியல் என்னாகிறது”

”சீமான் பாத்துப்பார்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...