No menu items!

பாம்பன் பாலம் நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

பாம்பன் பாலம் நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

பாம்பன் பழைய ரயில் பாலம் பழுதடைந்ததைத் தொடர்ந்து புதிய ரயில் தூக்குப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி அனுராதபுரத்திலிருந்து நாளை (ஏப்ரல் 6) காலை 10.40 மணிக்கு இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, பகல் 11.45 மணியளவில் மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு வருகிறார்.

பின்னர், கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்துக்கு வந்து பகல் 12 மணியளவில் பாம்பன் புதிய ரயில் தூக்குப் பாலத்தை திறந்து வைப்பதுடன், புதிய `பாம்பன் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.

அங்கிருந்து பிற்பகல் 12.30 மணியளவில் புறப்பட்டு ராமேசுவரம் கோயிலுக்குச் செல்லும் பிரதமர் அங்கு சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் ரயில்வே சார்பில் நடைபெறும் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசுகிறார். அப்போது, வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை, விழுப்புரம்-புதுச்சேரி, பூண்டியன்குப்பம் – சட்டநாதபுரம், சோழபுரம்-தஞ்சாவூர் பகுதிகளுக்கான நான்கு வழிச் சாலை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் முருகன், மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், எம்.பி.க்கள் நவாஸ்கனி, தர்மர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 2.35 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார்.

5,000 போலீஸார் பாதுகாப்பு: பிரதமரின் வருகையையொட்டி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிரதமர் வருகை தரும் பாம்பன் பாலம், ராமேசுவரம் கோயில் வளாகம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர். ராமேசுவரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனையிட்டு வரும் போலீஸார், சந்தேக நபர்கள் தங்கியுள்ளனரா என்று விசாரித்து வருகின்றனர். முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பிரதமர் வருகையையொட்டி ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...