No menu items!

பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் தலைமகன் – தலைவர்கள் புகழாரம்!

பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் தலைமகன் – தலைவர்கள் புகழாரம்!

 நவீன தமிழ்நாட்டின் சிற்பியாக பார்க்கப்படும் அண்ணாவின் புகழை போற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அவரது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

பேரறிஞர் அண்ணா என அழைக்கப்படும், சிஎன் அண்னாத்துரை, காஞ்சிபுரத்தில் நடராஜர் – பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு 15.9.1909 அன்று அண்ணா மகனாகப் பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்து சிறந்த மாணவராகவும், எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்க பேச்சாளராகவும், பண்பட்ட அரசியல் வாதியாகவும், உத்தமத் தலைவராகவும் திகழ்ந்தார்.

தமது சிறந்த பேச்சாற்றல் மூலம் மக்களிடையே அறிவுப் புரட்சியை ஏற்படுத்தினார். “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்கின்ற கோட்பாட்டை மக்களிடையே விதைத்தார். மாற்றாரையும் மதிக்கக் கற்றுத்தந்த மாபெரும் தலைவர் ஆவார்.

பேரறிஞர் அண்ணா பெரியாரை தம் தலைவராகக் கொண்டு தமது ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்கள் முன்னேற்றம் அடையும் வகையில் சிறப்பான பல திட்டங்களை வழங்கினார். தாய் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாக, “சென்னை மாகாணம்” என்று அழைக்கப்பட்டு வந்ததை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தார். பேரறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்தில் தான் இந்தியாவிலேயே முதன் முதலாக அரசுப் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. கல்வியில் தமிழுக்கு முதலிடம் வழங்கினார். 1967ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை என்ற பெயரை ‘தமிழ்நாடு அரசு – தலைமைச் செயலகம்’ என மாற்றம் செய்தார்.

1968ஆம் ஆண்டு சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற தத்துவத்தை வழங்கி தமிழ்நாடு முன்னேற சிறப்புடன் செயல்பட்டார். தமிழ்நாடு அரசின் முத்திரையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்மெண்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற ஆங்கில வாக்கியத்தை நீக்கிவிட்டு, “தமிழ்நாடு அரசு” என மாற்றினார். தமிழ்நாடு அரசு பயன்படுத்தும், அரசு முத்திரையில் “சத்ய மேவ ஜெயதே” என்ற வடமொழித் தொடரை அகற்றி “வாய்மையே வெல்லும்” என்ற சொல்லை இடம் பெறச் செய்தார்.

“ஏழையின் சிரிப்பில், இறைவனைக் காண்போம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டார். சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் அண்ணா மறைந்தும், மறையாமல் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கலைஞர் ஆட்சிக்காலத்தில், அண்ணா கண்ட கனவினை நனவாக்கிடும் வகையில், கிராமங்கள் புத்துணர்வு பெற அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம், மற்றும் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றை அமைத்தார்.

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு கொண்டாடப்படும் அண்ணாவின் 117-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

அறிஞர் அண்ணாவை பற்றிய சுருக்கமான அரசியல் வரலாறு

1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா தொடங்கினார்.

இவரது ஆட்சி காலத்தில் தான் மெட்ராஸ் என்ற பெயர் தமிழ்நாடு என மாற்றப்பட்டது. மெட்ராஸ் மாகாணத்தின் கடைசி முதலமைச்சர் அறிஞர் அண்ணா என்று கூட சொல்லலாம்.

1967ல் ஆட்சிக்கு வந்து நவீன தமிழ்நாட்டிற்கான அடித்தளத்தை போட்டார். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், செயல் வீரர், முதலமைச்சர் எனப் பல்வேறு சிறப்புகளை பெற்றிருந்த நிலையில் இரண்டே ஆண்டுகளில் உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தத்திற்கு வித்திட்ட தலைவர். சுய மரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக மாற்றியதில் முக்கிய பங்காற்றியவர்.

சாதி கட்டமைப்புகளை உடைத்தெறிதல், இந்தி எதிர்ப்பு ஆகியவற்றில் தொடக்க காலம் முதலே மிகவும் தீவிரமாக செயல்பட்டார்.

குறிப்பாக தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை தமிழகத்தில் வேரூன்றுவதற்கு வித்திட்டவர். இதற்காக இந்தி எதிர்ப்பு கூட்டங்கள், போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

படித்தவர்கள் செய்தித்தாள்கள் மூலம் திராவிட சித்தாந்ததை அறிந்து கொண்ட நிலையில், பாமரர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் நாடகங்கள், திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதினார்.

ஒடுக்கப்பட்ட மக்களை கை தூக்கி விடும் வகையில்இவர் தொடங்கி வைத்த திட்டங்களும், செயல்பாடுகளும் அடுத்தடுத்த தலைவர்களால் தொடர்ந்துமுன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முக ஸ்டாலின்

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்,” தமிழன்னை தந்திட்ட தலைமகன்! திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா. தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!” என கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் பதிவில்,” தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா! அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம்! இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி ஆட்சி அமைக்க முடியுமா? நாட்டுக்குள் ஒரு தமிழ்-நாடா? என்று சந்தேக கேள்விகள் கேட்ட காலத்தில் தன் செயலால், சாதனையால் பதில் சொன்ன தென்னாட்டுத் தென்றல், நம் அண்ணா! அண்ணாவைப் பெயரில் மட்டும் அல்ல- கொள்கையில், செயலில், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகளாக பெருமையோடு ஏந்தி நிற்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...