கேஜிஎஃப்-2, பீஸ்ட் என சமீபத்தில் ரிலீஸாகி, வசூலில் சக்கை போடு போடும் படங்களால் ட்ரெண்ட் ஆகியுள்ள வார்த்தை ‘பான் இந்தியன் பிலிம்’ (Pan Indian Film).
“அது என்ன பான் இந்தியன் பிலிம்?” என்கிறீர்களா? ஒரு மொழியில் படம் பிடிக்கப்பட்டு, பெரும்பாலான மக்கள் பேசும் இந்திய மொழிகளில் ஒலி சேர்க்கை (Dubbing) செய்யப்பட்டு, ரிலீஸ் ஆகும் திரைப்படங்களைத்தான் ‘பான் இந்தியன் பிலிம்’ என்று அழைக்கிறார்கள். இப்போது ரிலீசான கேஜிஎஃப் ஒரு நல்ல உதாரணம்.
ஒரு படத்தை ஒரு மொழியில் எடுத்தால், அது குறிப்பிட்ட மக்களையே சென்றடையும். அதே நேரத்தில் பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டால் பல தரப்பு மக்களை சென்றடையும், அது மட்டுமில்லாமல் படத்தின் வசூலும் அதிகரிக்கும்.
பெரிய பட்ஜெட் படங்களை அனைத்திந்திய படமாக எடுப்பதில் லாபம் அதிகம். முதலீடு அதிகம் என்பதால் பல மாநிலங்களில் ரிலீஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.
முந்தைய காலகட்டத்தில் ஒரு படத்தை மற்றொரு மொழிக்கு கொண்டு செல்ல அதை ரீமேக்தான் செய்வார்கள். உதாரணமாக தமிழில் வெளியான ‘16 வயதினிலே’ படம் மிகப்பெரிய வெற்றி கண்டதால், அதை ‘சோல்வா சாவன்’ என்று பெயரிட்டு இந்தியில் ரீமேக் செய்தார்கள். ஆனால், அங்கு அப்படம் வெற்றி பெறவில்லை.
தெலுங்கில் கமல்ஹாசன் – சரிதாவை வைத்து கே.பாலசந்தர் எடுத்த ‘மரோ சரித்திரா’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. மரோ சரித்திராவை இந்தியில் ‘ஏக் துஜே கேலியே’ என்று கமல்-ரத்தியை வைத்து கே.பாலசந்தர் எடுத்தார். இந்தியிலும் பெரிய வெற்றி.
இது போன்ற ரீமேக் அல்லது மொழி மாற்றி எடுக்கப்படுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. ரீமேக் படங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற உத்திரவாதம் இல்லை.
தமிழ் படங்களை பான் இந்தியா படங்களாக முதலில் மாற்றிக் காட்டியவர் என்று மணிரத்னத்தைச் சொல்லலாம். அவர் இயக்கிய ‘ரோஜா’ முதலில் தமிழில்தான் ரிலீசானது. அதை டப் செய்து இந்தியில் வெளியிட்ட போது அது வட இந்தியாவிலும் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றி, மணிரத்னத்தை தனது அடுத்தப் படங்களையும் அனைத்திந்திய படங்களாக உருவாக்க உந்து சக்தியாக இருந்தது. அவர் இயக்கிய ‘பம்பாய்’ திரைப்படத்தை அனைத்திந்திய ரசிகர்களுக்கான படமாக உருவாக்கினார். அது வட மாநிலங்களிலும் வெற்றிப் பெற்றது. ஆனால், இந்த அனைத்த்திந்திய வெற்றியை அவர் இயக்கிய ‘உயிரே’, ‘குரு’, ‘ராவணன்’ போன்ற பான் இந்தியன் படங்களால் பெற இயலவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
2015-ம் ஆண்டு தெலுங்கு மொழியில் படம்பிடிக்கப்பட்ட பாகுபலியை, இயக்குநர் ராஜமெளலி, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து, பான் இந்தியா படமாக வெளியிட, அந்தப் படங்கள் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற இந்தக் கலாசாரம் மேலும் வேர்விட்டது.
இந்திய திரையுலகில் கதாநாயகனே ஒரு படத்தின் வர்த்தகத்தின் முதன்மை காரணம் ஆகிறார். பான் இந்திய படங்களில் கதாநாயகனை விட கதையும் திரைக்கதையும் படம் எடுக்கப்பட்ட விதமும்தான் முக்கியமாய் இருக்கின்றன.
யஷ் போன்ற கன்னட ஹீரோ தமிழில் வெற்றி பெறுவதற்கு காரணம் கேஜிஎஃப் எடுக்கப்பட்ட விதம்தான்.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகன் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம் 150 கோடி செலவில் படம் பிடிக்கப்பட்டு, பான் இந்திய படமாக வெளியாகியுள்ளது. தமிழில் இதன் முதல் நாள் வசூல் 26 கோடி. ஆனால், பான் இந்திய திரைப்படமாக வெளிவந்த காரணத்தினால் மற்ற இந்திய மொழிகளில் இருந்து 46 கோடி வசூலானதாக பாக்ஸ் ஆபிஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. மொத்தத்தில், நான்கு நாட்களில் உலகம் முழுவதிலும் கிட்டதட்ட 200 கோடியை ஈட்டியது ‘பீஸ்ட்’ என்று பேச்சு அடிபடுகிறது.
அதுபோல் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் 2, கன்னடத்தில் முதல் நாளில் ரூ.28 கோடி வசூலித்தது. அதே நேரத்தில் மற்ற மொழிகளில் முதல் நாளில் ரூ.100 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் வெளியாகி 3 நாட்களில் 300 கோடி வசூலித்துள்ளது.
பான் இந்திய படங்களை உருவாக்குவது கடினம்தான், ஏனெனில், திரைப்படம் பார்க்கின்ற ஒவ்வொரு மாநில, ஒவ்வொரு மொழி ரசிகனையும் திருப்தி செய்யும் விதத்தில் படம் இருக்க வேண்டும். மொழியை கடந்து கலாச்சாரம், கதை களம், பாத்திரப் படைப்பு என அனைத்தையும் பான்-இந்திய திரைப்படங்களுக்கென சிறப்பு கவனத்துடன் வடிவமைக்க வேண்டியிருக்கிறது.
‘பாகுபலி’, ரஜினிகாந்த்தின் ‘2.0’, நடிகர் பிரபாஸின் ‘சாஹோ’, மலையாள நடிகர் துல்கர் சல்மானின் ‘குரூப்’ தொடங்கி அஜித்தின் ‘வலிமை’, நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆகிய படங்களும் பான் இந்திய திரைப்படங்களாக வெளிவந்தவை.
இனி வெளிவரப்போகும் திரைப்படங்களில் இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமும் பான்-இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது.
‘கேஜிஎஃப்’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘பாகுபலி’ போன்ற திரைப்படங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பால் மேலும் பல பிரமாண்ட – பான் இந்தியன் – திரைப்படங்களை உருவாக்க வாய்ப்புள்ளது.
திரை ரசிகர்களுக்கு இது பெரிய விருந்தாக இருக்கும்.
Super
Super