No menu items!

நம்முடைய கிராமங்கள்தான் எதிர்கால வளர்ச்சி – கிராம சபையில் முதல்வர் முதல்வர்

நம்முடைய கிராமங்கள்தான் எதிர்கால வளர்ச்சி – கிராம சபையில் முதல்வர் முதல்வர்

தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கிராம மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “முதல்வராக 3-வது முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். இன்னும் பெருமையோடு சொல்கிறேன்… வேறெந்த முதலமைச்சரும் இப்படி கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றதில்லை. அதிலும், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளையும் இணைய வசதி மூலமாக இணைத்து, கிராம சபைக் கூட்டத்தை நடத்துவது இதுதான் முதல்முறை.

கிராம சபைக் கூட்டங்கள் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் தருணம். கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்க உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். அதற்காகத்தான் ஆண்டுதோறும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

நம் நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள்தான். விடுதலை இந்தியாவின் வலிமை கிராமங்கள் என்று காந்தி கூறினார். கிராம பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும், நிர்வாகங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என திட்டங்கள் தீட்டியுள்ளோம். இத்திட்டங்கள்தான் தமிழ்நாட்டின் கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டுக்கு அடிப்படை.

இது கிராமங்களின் தேவைகள், வளர்ச்சி இலக்குகள், நலன் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றும் விழா. குடியிருப்பு, சாலை, தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கி பொதுப் பெயர்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராம சபையில் மக்கள் ஆலோசித்து 3 முக்கிய தேவைகளை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். குடிசையில்லா தமிழ்நாடு இலக்கை எட்ட இதுவரை 99,453 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. பணத்தை தண்ணீராக செலவழிப்பதாகச் சொல்வார்கள். ஆனால், தண்ணீரைத்தான் பணம் போல் செலவழிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் படிப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளர்களாக ஈடுபடுத்தினால் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் கூறி மீட்க வேண்டும்.

கிராமப்புற முன்னேற்றத்தை சாத்தியப்படுத்தியது சுய உதவிக்குழு திட்டம். மகளிர் சுய உதவிக் குழுக்களின் அடுத்தகட்ட பாய்ச்சல்தான் மகளிர் உதவித்தொகை. மகளிருக்கான விடியல் பயணத் திட்டம். பெண்கள் முன்னேற்றத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

கிராம மக்கள் தங்களுடைய ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்கவும், வளர்ச்சிப் பாதையில், கிராம ஊராட்சியை கொண்டு செல்லவும், உரிய உரிமைகளை அளிக்கவேண்டும் என்பதுதான் நம்முடைய அரசின் நோக்கம்.

மேலும், ‘நம்ம ஊர், நம்ம அரசு’ என்ற பெயரில், கிராம சபையில் மக்கள் கலந்தாலோசித்து, 3 முக்கிய தேவைகளைத் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி கண்டறியப்படும் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்.

2025-26-ல், இன்றைய நிலையில், 78 ஆயிரத்து 312 வீடுகள் கூரை மட்டம் நிலைக்கு மேல் முன்னேற்றத்தில் இருக்கிறது. அதேபோல, சாலை வசதிகளை பொறுத்தவரைக்கும், 2022–23-ஆம் ஆண்டில் அறிமுகமான முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் – நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி – உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் – 21 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான சாலைகள் மற்றும் பாலங்களை மேம்படுத்தியிருக்கிறோம்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், கிராமங்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக, சாலை, குடிநீர், பள்ளிக்கூடங்கள், நூலக வசதிகள் போன்ற சேவைகள் விரிவாக்கப்படுகிறது. தாயுமானவர் திட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வளவு திட்டங்களையும், முன்னெடுப்புகளையும் நம்முடைய அரசு செய்து கொண்டு வந்தாலும், குடிமக்களாக ஒவ்வொரு தனிநபருக்கும் பல பொறுப்புகள் இருக்கிறது. அதையெல்லாம் நாம் சரியாக செய்து, நாம் தான் நம்முடைய கிராமத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகவேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும், குழந்தைகள் படிப்பதை நாம் எல்லோரும் உறுதி செய்யவேண்டும். எங்கேயாவது யாராவது குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால், உடனே மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்து, அவர்களை மீட்கவேண்டும். இதை, கிராம ஊராட்சிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என்று எல்லோரும் பொறுப்புடன் கண்காணிக்க வேண்டும்.

அடுத்து, கிராம மேம்பாட்டுக்கு முக்கியமான திட்டமான, நூறு நாள் வேலைத் திட்டம். இந்தத் திட்டம் முறையாக செயல்பட்டு வருவதை கண்டிப்பாக உறுதி செய்யவேண்டும். இந்தத் திட்டத்தில், வரவு செலவு எவ்வளவு? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது? என்று அனைத்துத் தகவல்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

அடுத்து, ஒவ்வொரு தனிமனிதருக்கும், சமூகப் பொறுப்பு இருக்கவேண்டும். நம்முடைய வீடு குப்பைக் கூளமாக இருந்தால், சும்மாவா இருப்போம்? நம் எல்லோருடைய வீடும் சேர்ந்ததுதான் நம்முடைய கிராமம். அதை சுத்தமாக வைத்துக் கொள்கின்ற பொறுப்பு நமக்குதான் இருக்கிறது! முடிந்த அளவுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். குப்பைகள் ஊராட்சிகளில் வருகின்ற பேட்டரி வண்டிகளில், மக்கும் குப்பை – மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்துப் போடவேண்டும். கண்ட இடத்தில் குப்பை போடுவதை தவிர்க்க வேண்டும்.

புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை வராமல் இருப்பதற்கு மழைநீர் சேகரிப்பு மிகவும் அவசியமானது! இதனால்தான், நிலத்தடி நீர்வளம் மேம்பட்டு, கிராமங்களுக்கு நீண்டகால நீர்ப் பாதுகாப்பு ஏற்படும். இதற்கான பொறுப்பு, நம்முடைய எல்லோரிடமும் தான் இருக்கிறது!

எனவே, இதற்காக அரசும், ஊராட்சிகளும் எடுக்கின்ற முயற்சிகளுக்கு நீங்கள் எல்லோரும் ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்டுக் அடுத்து, மழைக்காலம் தொடங்கப் போகிறது! டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைத் தடுக்கின்ற சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக்கு முன்பே, அனைத்து ஊராட்சிகளிலும், அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். வீதிகள், குடிநீர், மின்சாரம், வடிகால் போன்ற அடிப்படை சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அவசரத் திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்புக் குழுக்களை அமைத்து, அவசர கால நடவடிக்கைகளை திட்டமிடவேண்டும். இதனால், பேரிடர் நேரங்களில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை குறைக்கலாம், அடுத்து, நான் முக்கியமாக சொல்ல விரும்புவது – கிராம ஊராட்சிகளின் நிர்வாகம், நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க வேண்டும். கிராம சபை மூலம் வரவு – செலவு கணக்குகள் மக்களிடம் விளக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலோடு செயல்படவேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சியும் எப்போது, எவ்வளவு செலவிட்டது என்று மக்கள் தெரிந்து கொள்கின்ற வகையில் தகவல்கள் பகிரப்படவேண்டும். இந்தக் கூட்டத்தில், நீங்கள் முன்வைக்கின்ற ஒவ்வொரு பரிந்துரையும் பல்வேறு திட்டங்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

நம்முடைய கிராமங்கள்தான் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. நம்முடைய திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும், மக்கள் பங்கேற்போடு வளர்ச்சியை உறுதிசெய்கின்ற அரசு இது. “கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை” என்று நம்முடைய செயல்பாடுகளால் நிரூபித்துக் காட்டுவோம்!” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...