அமைச்சர் செந்தில் பாலாஜி கைது பரபரப்பு தற்போதுதான் கொஞ்சம் ஓயத் தொடங்கியது. அதற்குள் அடுத்த சோதனை பரபரப்பு. மற்றொரு தமிழ்நாடு அமைச்சரான பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட ஒன்பது இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பொன்முடி கைதாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.
காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீட்டில் தான் தற்போது இருக்கிறார். இந்த வீட்டிற்கு இன்று (17-07-23) காலை 7 மணிக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனே சோதனையை தொடங்கினார்கள்.
அதேநேரத்தில், விழுப்புரத்தில் சண்முகபுரம் பகுதியில் உள்ள பொன்முடிக்கு சொந்தமான வீடு, அலுவலகத்திற்கு சென்ற இருபதுக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கேயும் சோதனையை தொடங்கினார்கள்.
பொன்முடி மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீடு, பொன்முடி குடும்பத்தினரின் சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான விக்கிரவாண்டி சாலையில் உள்ள சூர்யா பொறியியல் கல்லூரி வளாகம் என மொத்தம் ஒன்பது இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றபோது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, தலைமைச் செயலகத்திலும் இன்று சோதனை நடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செந்தில்பாலாஜிக்கு அடுத்தபடியாக பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடக்கலாம் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கூறியிருந்த நிலையில், இன்று இந்த சோதனை நடப்பது குறிப்பிடத்தக்கது.
பொன்முடி மீதான நிலுவையில் உள்ள ஏழு வழக்குகள்
1996 – 2001 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, சென்னையில் அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனது பெயரில் கையகப்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் இதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலிருந்து இந்த மாத தொடக்கத்தில்தான் நீதிமன்றம் பொன்முடியை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
2006 – 2011 திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி தனது மனைவியின் பெயரில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்தும் நீதிமன்றம் பொன்முடியை விடுவித்துள்ளது.
அதேநேரம், அமைச்சர் பொன்முடி மீது இன்னும் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
2006 – 2011 காலகட்டத்தில் பொன்முடி கனிமவளத் துறை அமைச்சராக இருந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் அவரது உறவினர்களுக்கு முறைகேடாக பல்வேறு குவாரிகளுக்கு அனுமதி அளித்ததாகவும், அதன்மூலம் அளவுக்கு அதிகமான செம்மண் அள்ளப்பட்டு விற்பனை நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, ‘கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்த 5 ஆண்டுகளில் 2,64,644 லாரிகள் மூலம் முறைகேடாக செம்மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 28 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தினார்’ என விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை அவர் மீது 2012 ஆம் ஆண்டு வழக்குப் பதிந்திருந்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பொன்முடி தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, 28 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி, அதன்மூலம் பெறப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் பணத்தின் மூலம் என்னென்ன சொத்துக்கள் வாங்கப்பட்டன, அவை எங்கே முதலீடு செய்யப்பட்டன என்பது குறித்து, சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கு பதிவு செய்து, அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், 2006 – 2011 காலக்கட்டங்களில் ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல், இந்தோனேஷியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் முதலீடு செய்து அதன் மூலம் பல கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளார் என்று கௌதம சிகாமணி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கும் இன்னும் நிலுவையில் இருக்கிறது. வெளிநாடுகளில் கௌதமசிகாமணி செய்த முதலீடுகள் மற்றும் அவர் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் லாபம் ஈட்டிய தொகைகளுக்கு ஈடாக 8.60 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துகளை அமலாக்கத்துறை 2020-ம் ஆண்டு ‘பெமா’ சட்டத்தின் கீழ் முடக்கியது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் மேற்குறிப்பிட்ட வழக்குகளில்தான் தற்போது சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்
தேசிய அளவில் ஒன்று கூடும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு புறப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பாட்னாவிலும், அதன் தொடர்ச்சியாக பெங்களூருவிலும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்துவது மோதி அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் இந்த அமலாக்கத்துறை சோதனை. வட மாநிலங்களில் செய்து கொண்டிருந்த அதே வேலையை தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியிருக்கிறார்கள். அதைக் கண்டு திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது புனையப்பட்ட பொய் வழக்கு. அதன் பிறகு அதிமுகதான் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் இந்த வழக்கில் அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அமைச்சர் பொன்முடி 2 வழக்குகளில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டார். அதுபோல் இந்த வழக்கில் இருந்தும் அவர் மீண்டு வருவார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதற்கெல்லாம் பதில் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
ஒரு வரியில் சொல்வதென்றால், பீகார், கர்நாடகாவைத் தொடர்ந்து இன்னும் பல மாநிலங்களில் நடக்கவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்ப மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு செய்யும் தந்திரம்தான் இதுவே தவிர வேறில்லை. இதனை எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் சமாளிப்போம்.
தமிழ்நாட்டில் திமுகவுக்காக ஏற்கனவே ஆளுநர் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார். அதில் தற்போது அமலாக்கத்துறையும் சேர்ந்திருக்கிறது. அவ்வளவுதான்” ” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பொன்முடி கைது செய்யப்படுவாரா?
தமிழ்நாடு அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்கு அடுத்தபடியாக அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியுள்ளார் அமைச்சர் பொன்முடி. செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய பின்னர் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்ற நிலை அமைச்சர் பொன்முடிக்கும் வரக் கூடுமோ என்ற யூகங்களும் எழுந்துள்ளன.
கடந்த முறை பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இன்று பெங்களூருவில் எதிர்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலையில் இந்த சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.