நெஞ்சைப் பதற வைக்கும் மிக மோசமான ரயில் விபத்து நடந்திருக்கிறது.
அதிகாரப்பூர்வமாக 280 பேர் இறந்திருக்கிறார்கள் என்கிறது செய்தி. 300க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பார்கள் என்கிறது அங்கிருந்து வரும் தகவல்கள். அவர்களில் 35க்கும் மேற்பட்டவர்கள் சென்னையை சார்ந்தவர்கள் என்ற தகவலும் வந்திருக்கிறது. ஆனால் எதுவும் இறுதியாக உறுதி செய்யப்படவில்லை.
ஓடிசாவிலுள்ள பாலாசோர் என்ற இடத்தில் வெள்ளி இரவு 6.50 மணியிலிருந்து 7.10 மணிக்குள் இந்த கோர விபத்து நடந்திருக்கிறது.
இந்த விபத்தில் மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. எப்படி இந்த விபத்து நடந்தது என்பது குறித்து முழுமையான விவரங்கள் இன்னும் வரவில்லை.
இப்போது கிடைத்துள்ள தகவல்கள் அடிப்படையில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
மேற்கு வங்கத்தின் ஹவுராவில் இருந்து சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், நேற்று இரவு ஷாலிமர் ரயில் நியைத்தை தாண்டி பாலாசோர் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. இந்த ரயில் வந்துக் கொண்டிருந்த தண்டவாளத்தில் இரு சரக்கு ரயில் நின்றுக் கொண்டிருந்திருக்கிறது.
சரக்கு ரயில் நிற்பது தெரியாமல் மிக வேகமாக வந்துக் கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்றுக் கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியிருக்கிறது. பெட்டிகள் தூக்கியடிக்கப்பட்டிருக்கின்றன. சிதறியிருக்கின்றன. அப்படி தூக்கியடிக்கப்பட்ட பெட்டிகள் பக்கத்து தண்டவாளத்திலும் விழுந்திருக்கின்றன.
அந்த சமயத்தில் அந்த தண்டவாளத்தில் பெங்களூருவிலிருந்து ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் ரயில் வந்துக் கொண்டிருந்தது. அந்த ரயில் விழுந்து கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோது விபத்தை மேலும் மோசமாக்கிவிட்டது.
இது தவிர இன்னொரு விதமாகவும் விபத்து பற்றி சொல்லப்படுகிறது. கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் தடம்புரண்டு விழுந்தன. அந்தப் பெட்டிகள் மீது சரக்கு ரயிலும் ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
விபத்து குறித்து முழு விவரங்கள் விரைவில் தெரிந்துவிடும். சிக்னல்கள் சரியாக வேலை செய்யவில்லை, ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் இருந்திருக்கின்றன போன்ற ஆபத்தான நிகழ்வுகள் மட்டும் தெரிய வந்திருக்கிறது.
நமது ரயில் போக்குவரத்து முறையில் மோதல்களை தவிர்க்க புதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு கார்வாச் என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. ஏதாவது ஒரு ரயில் சிக்னலை மீறி சென்றாலோ சிக்னல் சரியாக வேலை செய்யவில்லை என்றாலா அருகிலுள்ள ரயில் நிலையங்களுக்கு உடனடியாக எச்சரிக்கை வந்துவிடும். இந்த எச்சரிக்கை முறை (Signal Passed at Danger — SPAD) எல்லா ரயில் நிலையங்களுக்கும் இன்னும் வரவில்லை. பாலாசோர் ரயில் நிலையப் பகுதியிலும் இல்லை. இந்த எச்சரிக்கை முறை அங்கு இருந்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்பு 1981ல் பீகாரில் நடந்த ரயில் விபத்துதான் இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து. சுமார் 800 பேர் அந்த விபத்தில் இறந்தார்கள். ஜூன் 6 1981ல் நடந்த அந்த விபத்தில் பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த ரயிலின் 9 பெட்டிகள் தடம்புரண்டு பாகமதி ஆற்றில் விழுந்தன. இது உலகின் இரண்டாவது மிக மோசமான விபத்தாகவும் கூறப்படுகிறது.
1995ல் உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு ரயில் விபத்தில் 350 பேர் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 20 1995ல் நடந்த இந்த விபத்தில் இரண்டு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
1999ல் மேற்கு வங்கத்தில் நடந்த விபத்தில் 300 பேர் இறந்தனர். இந்த விபத்திலும் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இவையெல்லாம்தான் மிக அதிக அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்திய விபத்துகள்.
2018 அக்டோபரில் அமிர்தசரசில் ரயில் ஒன்று தண்டவாளத்தில் நின்றிருந்த கூட்டத்தின் மேல் ஏறியதில் 59 பேர் இறந்தனர்.
2018க்குப் பிறகு பெரிய அளவு ரயில் விபத்துக்கள் எதுவும் நடக்கவில்லை. ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப் பெரிய விபத்து.
மீட்பு நடவடிக்கைகள்
ஒடிசா விபத்து பற்றி அறிந்ததும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம், போலீசார் என பல்வேறு மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். நொறுங்கிக் கிடந்த ரயில் பெட்டிகளின் பாகங்களை அறுத்து எடுத்து அதற்குள் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டனர். காயமடைந்தவர்களை பாலாசோரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமடைந்தவர்களை பக்கத்து நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். ராணுவத்தில் மருத்துவ மற்றும் பொறியியல் பிரிவினர் இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டனர்.
ஒடிஷா தலைமைச் செயலாளர் அளித்துள்ள விவரங்களின்படி பேரிடர் மீட்புப் படையின் 5 யூனிட்களும் தீயணைப்பு படையின் 24 யூனிட்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.
மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரெயில் விபத்து நடைபெற்ற பகுதியை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று நேரில் பார்வையிட்டார். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் , இந்த விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதமர், முதல்வர் இரங்கல்
ஒடிசா ரெயில் விபத்து குறித்த நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார். விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக ரெயில் விபத்து குறித்து ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவிடம் பேசிய மோடி, நிலைமையை கேட்டறிந்தார். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும் பலத்த காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிக்காக ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சென்னையில் இன்று காலை அரசு அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “ஒடிசாவில் நேற்று சரக்கு ரயிலுடன் சென்னை நோக்கிவந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விபத்து நடந்தவுடனேயே ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தொடர்பு கொண்டு பேசினேன். மீட்புப் பணிகளை தேவையான உதவிகளைச் செய்ய தமிழகம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளேன்.
ரயில் விபத்து நடந்த பகுதிக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர். அங்கே அவர்கள் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் சீராகக் கிடைப்பதை உறுதி செய்வார்கள்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், ரயில்வே துறை சார்பில் ரூ.10 லட்சமும் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியும், படுகாயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிவராண நிதியும் அளிக்கப்படும்” என்றார்.
சிறப்பு ரயில் இயக்கம்
ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை புவனேஸ்வருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் ரயில் விபத்தில் உயிர் பிழைத்த தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்படுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு அந்த விமானம் சென்னை புறப்படும் எனத் தெரிகிறது. அதேபோல் 250 பேர் ரயில் மூலம் சென்னை அழைத்து வரப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.