’இனி கொஞ்ச நாட்களுக்கு சமூக ஊடகங்கள் பக்கம் வரவே மாட்டேன். என்னுடைய மொபைல் ஃபோனையும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப் போகிறேம். ரஜினி 171 வேலைகள் இருக்கிறது’ என்று லோகேஷ் கனகராஜ் கறாராக சொல்லியிருக்கிறார்.
ரஜினியை வைத்து இயக்கும் முதல் படம் என்பதால், தன்னுடைய கவனமும், நேரமும் சிதறிவிடக்கூடாது என்பதற்காகதான் இந்த முன்னெச்சரிகை நடவடிக்கையாம்.
வழக்கம் போல் எல்சியூ பஞ்சாயத்தை இந்தப் படத்தில் திணிக்கப் போவதில்லை. இது முழுக்க முழுக்க ரஜினி படமாக மட்டுமே இருக்கும் என்று லோகேஷ் ரஜினி ரசிகர்களுக்கு வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார்.
மேலும் கமலுக்கு ’விக்ரம்’, விஜய்க்கு ’லியோ’ என கொடுத்த வசூலை விட ரஜினிக்கு இன்னும் பிரம்மாண்டமான வசூலைக் கொடுக்க வேண்டுமென லோகேஷ் கனகராஜூக்கு ஒரு நெருக்கடி இருக்கிறது. இதனால் ’ரஜினி 171’ படத்தில் இந்திய அளவில் பெரும் மார்க்கெட் இருக்கும் நட்சத்திரங்களை நடிக்க வைக்கும் எண்ணத்தில் பாலிவுட் நட்சத்திரங்களைக் குறி வைத்து இருக்கிறார். இந்த மாதிரி உலகளாவிய மார்க்கெட் உள்ள நடிகர்களை நடிக்க வைத்தால், வசூலுக்கு உதவியாக இருக்கும் என்பதற்காகதான் இந்த திட்டம்.
இதுவரையில் சஞ்சய் தத் பாலிவுட் இறக்குமதியாக இருந்தாலும், அவரைவிட பெரிய கையை வளைத்துப் போட்டால் வியாபாரம் பெரிய விலைக்குப் போகும் என்பதால் இப்போது பெரிய பாலிவுட் நட்சத்திரங்களை வளைத்துப் போட முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.
‘பிரம்மாஸ்திரா’, ‘ராக்கெட்ரி’, ‘டைகர் 3’ என மூன்றுப் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் ஷாரூக்கானை ’ரஜினி 171’ நடிக்க வைக்கலாம் என்று லோகேஷ் கனகராஜ் தரப்பு சொல்ல, அதற்கு தயாரிப்பு தரப்பில் மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லையாம்.
இதனால், லோகேஷ் கனகராஜ் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை தொடர்புக்கொண்டதாகவும் ஒரு பேச்சு அடிப்படுகிறது. ‘தலைவர் 171’ படத்தின் கதையைச் சொல்லிவிட்டு, ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு நட்புக்காக வந்து நடிக்க வேண்டுமென கேட்டாராம். அந்த கதை ஷாரூக்கானுக்குப் பிடித்திருந்தாலும், ஸாரி என்று ஷாரூக்கான் லோகேஷ் கனகராஜுவிடம் சொல்லியதாக தெரிகிறது.