No menu items!

நியூஸ் அப்டேட்: ஆளுநருடன் விரோதம் இல்லை – முதல்வர் விளக்கம்

நியூஸ் அப்டேட்: ஆளுநருடன் விரோதம் இல்லை – முதல்வர் விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று அறிக்கை வாசித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், ”ஏழரை கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் விலக்கு மசோதா கடந்த 210 நாட்களாக ஆளுநர் மாளிகையில் மேல் முடங்கிக் கிடக்கிறது. நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரின்றி இருக்கிறது. அதே ஆளுநர் மாளிகையில் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகும். சட்டமன்ற மாண்பை சிதைப்பதாகும். ஆகையல்தான் தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை. ஆளுநருடன் தனிப்பட்ட விரோதம் இல்லை. ஆளுநருக்கு உரிய மரியாதை அளித்து வருகிறோம். அரசியல் எல்லைகளைக் கடந்த பண்பாட்டை காப்போம். தற்போது நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப இருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கையைப் பொருத்து, நாம் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுப்போம் ” என்றார்.

நீட் விலக்கு மசோதா – குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா தொடர்பாக முடிவு எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக தமிழக அரசு குற்றச்சாட்டி வந்தது. இதனால், ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில், நீட் விலக்கு மசோதா தொடர்பான தமது பரிசீலனை மற்றும் குறிப்பெழுதும் பணிகள் முடிந்து விட்டதால் அதை குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில ஆளுநர் செயலகம் மூலம் தமிழ்நாடு முதல்வருக்கு முறைப்படி ஓரிரு தினங்களில் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.

இளையராஜா மீதான விமர்சனங்கள்: பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அறிக்கை

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நூலுக்கு இசைஞானி இளையராஜா எழுதியுள்ள முன்னுரை சமூக வலைதளங்களில் சர்ச்சையாகியுள்ளது. இளையராஜா தனது முன்னுரையில், ‘மோடியின் பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதுதான் சர்ச்சையாகியுள்ளது.

தன் கருத்துக்கு  எதிரான விமர்சனங்கள் குறித்து, ‘தான் சொன்னது சொன்னதுதான். கருத்தை திரும்பப் பெற போவதில்லை. மனதில் பட்டதை சொல்லியுள்ளேன்’ என்று இளையராஜா சொன்னதாக அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ‘உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவை அவமதிப்பதா? இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்றால் விமர்சிப்பதா? இதுதான் ஜனநாயகமா? இது தவறான அணுகுமுறை’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று – ஒரே நாளில் 90 சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மொத்தம் 2,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கு முந்தைய நாளின் கொரோனா தொற்று எண்ணிக்கையான 1,150 என்ற எண்ணிக்கையோடு ஒப்பிட இது சுமார் 90 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஏர் இந்தியா விமான சேவை ரத்து

சீனாவின் ஷாங்காய் நகரில் இதுவரை கண்டிராத அளவில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. அங்கு தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சீன அரசு முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் மரணம்

தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வா தீனதயாளன்  மாநில மற்றும் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவர் ஷில்லாங்கில்  இன்று தொடங்கும்  83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கௌஹாத்தியில் இருந்து சக போட்டியாளர்களுடன் காரில் சென்றுள்ளார். ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த 12 சக்கரங்களுடன் கூடிய டிரைய்லர், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது. இதில் காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஸ்வா தீனதயாளன் நோங்போ சிவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஏப்ரல் 27ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் விஸ்வா தீனதயாளன் பங்கேற்க இருந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு  இன்று தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...