யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு, ‘கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்’ என பதிவிட்டிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘ஒன்று திராவிடன் என சொல்லட்டும், அல்லது தமிழன் என்று சொல்லட்டும். ஆனால், யுவன் ஷங்கர் ராஜா இரண்டையும் சேர்த்து சொல்கிறார். கருப்பு திராவிடன் என பதிவிட்டுள்ளார். எருமை மாடு கூட கருப்பாகத்தான் இருக்கிறது. அதையும் திராவிடன் என்று சொல்லலாமா?’ என்று கிண்டலாக கேள்வி எழுப்பியது இப்போது இணையத்தில் சர்ச்சையாகியிருக்கிறது.
திருட முடியாத சொத்து கல்வி – மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை
தமிழக அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் இந்த விழாவில் பேசிய முதல்வர், ‘ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். உங்களிடம் இருந்து யாராலும் அதைப் பறிக்க முடியாது, திருட முடியாத ஒரு சொத்து இருக்கு என்றால், அது உங்களது கல்வி மட்டும்தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது’ என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, ‘உங்கள் குழந்தைகள் என்னவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களுக்குத் நீங்கள் தடை போடாமல், அவர்களுக்கு உதவி செய்யுங்கள், வழிகாட்டுங்கள். உங்கள் கனவுகளைத் தயவு செய்து அவர்கள் மீது திணிக்காதீர்கள்’ என்று பெற்றோர்களை கேட்டுக்கொண்டார்.
இளையராஜாவை விமர்சிக்க வேண்டாம்: முதல்வர் சொன்னதாக உதயநிதி தகவல்
‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள நூலுக்கு இசைஞானி இளையராஜா எழுதியுள்ள முன்னுரை சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகியுள்ளது. இளையராஜா தனது முன்னுரையில், ‘மோடியின் பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதுதான் சர்ச்சையாகியுள்ளது.
இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா பேசியது அவரது சொந்த கருத்து ஆகும். இந்த விவகாரத்தில் யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என்று தலைவர்( மு.க. ஸ்டாலின்) சொல்லி விட்டார். எனவே, அவருடைய கருத்தை நாகரீகமற்ற முறையில் யார் விமர்சித்தாலும் தவறுதான்” என்று கூறியுள்ளார்.
இலங்கைக்கு அனைத்து உதவியும் இந்தியா செய்யும்: நிர்மலா சீதாராமன் உறுதி
அமெரிக்காவில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் – இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, நெருங்கிய நட்பு நாடு என்கிற வகையில் அனைத்து ஒத்துழைப்பும் உதவியும் அளிக்க இந்தியா முயற்சி செய்யும் என இந்திய நிதியமைச்சர், இலங்கை நிதியமைச்சரிடம் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் நிகழ்வை தொடங்கி வைக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று மயிலாடுதுறைக்கு வருகை தந்தார். இந்நிலையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 16 அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப காலம் தாழ்த்துவது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் ரயில்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை: சிஏஜி அறிக்கை குற்றச்சாட்டு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில், ஒன்றிய அரசு ரயில்வேத்துறையை மேம்படுத்த தவறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ரயில்களின் சராசரி வேகத்தை மணிக்கு 50-ல் இருந்து 75 கிலோ மீட்டராக உயர்த்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டலும் உட்கட்டமைப்பு குறைபாடுகளால் வேகம் உயரவில்லை. இது போன்ற குளறுபடிகளால் கொரோனாவிற்கு முன்பு 7 ஆண்டுகளில் 69% ரயில்கள் மட்டுமே சரியான நேரத்தில் இலக்கை அடைந்துள்ளது. ரயில்வே உட்கட்டமைப்பு தொடர்பான திட்டங்கள் தாமதத்தால் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதில் சிக்கல் நிலவுகிறது’ என்று சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.