சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோர் வரிசையில் டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் ரேகா குப்தா. பாஜகவைச் சேர்ந்த பல முன்னணித் தலைவர்களை பின்னுக்கு தள்ளி அவர் இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.
1974-ஆம் ஆண்டு ஹரியானாவில் உள்ள நந்தகர் கிராமத்தில் பிறந்தவர் ரேகா குப்தா. முதலில் ஹரியானாவில் இருந்த ரேகாவின் குடும்பத்தினர் 1976-ம் ஆண்டு டெல்லியில் குடியேறி இருக்கிறார்கள். அன்றில் இருந்து ரேகா டெல்லிவாசி ஆகியிருக்கார்.
காலேஜ் படிக்கும்போதே அரசியலில் இறங்கிய ரேகா குப்தா, முதலில் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்ட அவர், 1996-1997 காலக்கட்டத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்திருக்கார்.
2000 ஆண்டில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பில் சேர்ந்த அவருக்கு 2004-ம் ஆண்டு அதன் தேசிய செயலாளராக பொறுப்பு கிடைத்துள்ளது. அந்த பொறுப்பில் அவர் செய்த பணிகள் அரசியலில் பல்வேறு உயரங்களை எட்ட காரணமாக இருந்துள்ளன.
வழக்கறிஞரான ரேகா குப்தா, 2007-ம் வருடம் முதல் முறையாக தேர்தல் அரசியலில் களம் இறங்கி இருக்கிறார். டெல்லி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட அவர் வடக்கு பிதாம்பரா பகுதியில் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றிலிருந்து டெல்லியில் பாஜகவின் முக்கிய முகங்களில் ஒருவராக ரேகா இருந்துள்ளார்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் ஷாலிமார் பாக் தொகுதியில் நின்று ஜெயித்த ரேகா, முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருக்கார். சட்டமன்ற உறுப்பினராக முதல் முறை தேர்வான நிலையிலேயே முதல்வர் பதவியும் அவரைத் தேடி வந்திருக்கிறது. பாஜகவில் பல மூத்த தலைவர்கள் இருந்தாலும் பெண்கள் மற்றும் வைஸ்ய சமூகத்து மக்களைக் கவர ரேகாவை பாஜக முதல்வராக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
டெல்லி முதல்வரா பதவியேற்ற பிறகு பேசிய ரேகா குப்தா, “பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற அதிக கவனம் செலுத்தப்படும். மார்ச் 8-ம் தேதிக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சொல்லி இருக்கிறார்.
டெல்லி முதல்வர் தங்குவதற்காக ஆடம்பரமாக கட்டப்பட்ட சீஷ் மஹாலில் தான் தங்கப் போறதில்லை என்றும் அறிவித்துள்ளார்.