தென்னிந்திய நடிகைகளில் அதிகம் சம்பளம் பெறும் நடிகை, லேடி சூப்பர்ஸ்டார் என்று உச்சத்தில் இருக்கும் நயன்தாராவுக்கு இப்போது பெரிய வாய்ப்புகள் இல்லை என்பதே உண்மை.
நயன்தாராவுக்கு இப்போது இருக்கும் இமேஜிற்கு அவர் இளவட்ட நடிகர்களுடன் நடிக்க முடியாத சூழல்.
மறுபக்கம் முன்னணி கமர்ஷியல் ஹீரோக்கள், இளைய நடிகைகளையே தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பரிந்துரைக்கிறார்கள்.
அடுத்து நயன்தாராவின் சம்பளம் இப்போதைய நிலவரப்படி சுமார் 12 கோடி.
நம்மூர் படைப்பாளிகள் ஒரு நடிகைக்கு 40 வயது என்றால் சீனியர் நடிகைகளின் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள். அந்த வகையில் இந்த வருடம் நயன்தாராவின் வயது 40.
இப்படி நான்கு அம்ச சிக்கல்கள் இருப்பதால், எப்படியாவது பெரிய படங்களில் மட்டுமே நடித்தாக வேண்டுமென முயற்சிக்கிறாராம். ஆனால் அதிர்ஷ்டம் இன்னும் இவரது வீட்டு காலிங்பெல்லை அழுத்தவில்லை என்கிறது கோலிவுட் பட்சி.
இப்போதைக்கு மலையாள சினிமாவில் நடிக்கப் போயிருக்கும் நயன்தாரா, அடுத்து தங்கையாகவும் நடிக்க தயாராகி விட்டதாக கூறுகிறார்கள்.
கேஜிஎஃப் படப்புகழ் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தில் அவரது சகோதரியாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். சம்பளம் அதிகம் கொடுத்தால் நயன்தாரா விருப்பமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் நயன் தரப்பு இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளுமா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
ரஜினிக்கு கடும் போட்டியாளராகி இருக்கும் கமல்
’வரலாறு திரும்புகிறது’ என்பார்கள்.
தமிழ் சினிமாவில் இரட்டை கதாநாயகர்கள் கலாச்சாரம் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் இருந்து வருகிறது.
முதலில் எம்.ஜி.ஆர். – சிவாஜி, அடுத்து ரஜினி – கமல், விஜய் – அஜித், தனுஷ் – சிம்பு, சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி.. இப்படிதான் தொடர்ந்தது.
ஆனால் இதில் சிம்பு, விஜய் சேதுபதி, தனுஷ் எல்லோரும் தீவிர போட்டியில் இருப்பதும் விலகுவதுமாக இருக்கவும், அஜித் ரேஸ், பக்கம் கியரை முறுக்கவும், ரஜினி- விஜய் என்ற வசூல் போட்டி தொடங்கியது.
இந்நிலையில் கோலிவுட்டில் மீண்டும் ரஜினி – கமல் என்ற போட்டி இந்தாண்டு நிகழவிருக்கிறது என்கிறார்கள். அதாவது விக்ரமின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு கமலின் மார்க்கெட் பரபரப்பாக மாறியிருக்கும் சூழலில், இந்தாண்டு கமலுக்கு மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன. ’இந்தியன் 2’, ‘தக் லைஃப்’, ‘கல்கி 2898’ என அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன.
ரஜினிக்கு ’வேட்டையன்’, விஜய்க்கு ‘க்ரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’, அஜித்திற்கு ‘விடாமுயற்சி’ என ஒரு படம் மட்டுமே வெளியாகும் சூழல் இருக்கிறது. இதில் இந்த மூவருடைய அடுத்தப்படங்களின் ஷூட்டின் ஆரம்பித்து மளமளவென முடித்தால் மட்டுமே அவை இந்தாண்டில் வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் கமலுக்கு மூன்று படங்கள் உறுதி. இந்த மூன்றுமே பான் – இந்தியப் படங்களாகவே வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த மூன்றுப் படங்களும் கல்லா கட்டினால், கமல் மார்க்கெட் கணிசமாக எகிற வாய்ப்பிருக்கிறது.