சமீபத்தில் ஏகப்பட்ட முணுமுணுப்புகளை கிளப்பியிருக்கிறது 69-வது தேசிய திரைப்பட விருதுகள்.
தமிழில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜெய் பீம்’, ‘கர்ணன்’ ‘ சார்பட்டா பரம்பரை’ போன்ற படங்களில் ஏதாவது ஒன்றுக்கு முக்கிய விருதுகள் கிடைக்கலாம் என்ற எதிர்பார்பு தமிழ் சினிமாவில் அதிகம் இருந்தது.
ஆனால் இந்தப் படங்களுக்கு ஒரு விருது கூட கிடைக்காமல் போனதில் பெரும்பாலான தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வருத்தம். ஒளிப்பதிவில் வித்தைக்காட்டும் பி.சி. ஸ்ரீராம், இயக்குநர் சுசீந்திரன் போன்றவர்களும் ‘ஜெய்பீம்’ படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லையே என தங்களது மனதில் உள்ளதை வருத்தத்துடன் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இவர்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவின் முன்னணி கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவரான நானி, ’ஜெய்பீம்’ படத்திற்கு விருது கிடைக்காததை நொறுங்கிப்போன இதய எமோஜியை போட்டு தனது ஏமாற்றத்தை தெரிவித்து இருந்தார்.
நாட்டையே அதிர்வலையில் தள்ளிய ‘த காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற்கு விருதா, நெகட்டிவான ஹீரோயிசத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு விருதா என ஏகப்பட்ட விவாதங்களையும் இந்த 69-வது தேசிய திரைப்பட விருதுகள் உருவாக்கி இருக்கின்றன.
முன்பெல்லாம் தேசிய விருது வாங்கிய படங்களை அவ்வளவு எளிதில் பார்த்து ரசிக்க முடியாது. இந்தப்படங்களை வேறு மொழியில் டப் செய்து திரையிடுவது என்பது அவ்வளவு சுலபமானதாகவும் முன்பு இல்லை. ஆனால் , இன்றைய ஒடிடி- தளங்களினால் அந்தப் அப்படங்களை உடனடியாக பார்த்து ரசிக்கும் வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன.
விருதுகள் குறித்த சர்ச்சைகள் ஒருபக்கமிருந்தாலும், இவற்றை பார்ப்பது சினிமா குறித்த ஒரு ஆழ்ந்த பார்வையை முன்வைக்க உதவும். அந்த வகையில் தேசிய விருது பெற்ற சில படங்கள் ஒடிடி- தளங்களில் பார்க்க கிடைக்கின்றன. அதன் தொடர்ச்சியாக எந்தெந்த ஒடிடி-யில் என்னென்ன படங்களைப் பார்க்கலாம் என்று தெரிந்து கொள்ள உதவும் பட்டியல் இதோ உங்களுக்காக.
’பாகுபலி’ வரிசைப் படங்களுக்குப் பிறகு தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கிய படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இந்தப் படம் மூலம் தனது பிரம்மாண்டமான பாணியை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ராஜமெளலி. இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கரில் விருதை வென்றிருக்கும் இப்படம் சிறந்த பொழுதுபோக்குத் படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. ’ஆர். ஆர். ஆர்’ படமானது, ஸீ5 மற்றும் ஹாட்ஸ்டார் ஆகிய இரு ஒடிடி- தளங்களில் கிடைக்கிறது.
தேசிய திரைப்பட விருதுகளைக் கொடுக்க தொடங்கிய காலத்தில் இருந்து, இதுவரை சிறந்த நடிகருக்கான விருதை இதுவரை எந்த தெலுங்கு நடிகர்களும் பெறவில்லை. என்.டி. ராமாராம், நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகார்ஜூனா, மகேஷ் பாபு உள்பட எந்த தெலுங்கு நட்சத்திரமும் பெறமுடியாத ‘சிறந்த நடிகருக்கான விருதை’ இந்த முறை தட்டிச்சென்றிருக்கிறார் ‘புஷ்பா’ படத்தில் நடித்த அல்லு அர்ஜூன். பான் – இந்தியா படமாக பரபரப்பை கிளப்பிய ‘புஷ்பா’, அமேசான் ப்ரைம் வீடியோ ஒடிடி- தளத்தில் இடம்பெற்றிருக்கிறது.
’சந்திரயான் -3’ நிலவில் கால் பதித்த அதே தருணங்களில் சிறந்தப் படத்திற்கான விருதை பெற்றிருக்கிறது நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகி நடித்திருக்கும் ‘ராக்கெட்ரி- த நம்பி எஃபெக்ட்’. ராக்கெட் சம்பந்தப்பட்ட கதை என்றாலும், அதை உணர்வுப்பூர்வமாக காட்டியதால் இந்தப்படம் சிறந்த படம் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அமேசான் ப்ரைம் வீடியோவில் ‘ராக்கெட்ரி – த நம்பி எஃபெக்ட்’ படத்தை கண்டு ரசிக்கலாம்.
விஜய் சேதுபதி நடித்த முதல் தெலுங்குப் படம் ‘உப்பென்னா’. இதன் க்ளைமாக்ஸ் படம் பார்த்தவர்களை அதிர வைத்தது. இந்தப்படம் சிறந்த தெலுங்குப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறது. புஷ்பா பட இயக்குநர் சுகுமாரில் எழுத்தில் உருவான இப்படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம்.
சிறந்த நடிகைக்கான விருதை ஆலியா பட் மற்றும் கீர்த்தி சனோன் ஆகிய இருவரும் வென்றிருக்கிறார்கள். ’கங்குபாய் கதியாவடி’ படத்தில் நடித்ததற்காக ஆலியா பட்டுக்கும், ’மிமி’ படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சனோனுக்கு சிறந்த நடிகைக்கான விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. ’மிமி’ படத்தில் நடித்த பங்கஜ் திரிபாதி சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். ’கங்குபாய் கதியாவடி’ ’’மிமி’ என இந்த இரு படங்களும் நெட்ஃப்ளிக்ஸிலும் இருக்கின்றன.
ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. இப்படமானது, தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கீஸ் தத்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இப்படத்தில் நடித்த பல்லவி ஜோதிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. சர்ச்சைகளை கிளப்பிய இப்படத்தை ஸீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
அஜீத் குமாரை வைத்து ‘பில்லா’ ‘ஆரம்பம்’ என இரண்டு கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான் ‘ஷெர்ஷா’, சிறப்பு ஜூரி விருதைப் பெற்றிருக்கிறது. அமேசான் ப்ரைம் வீடியோ ஒடிடி-யில் ஷெர்ஷாவை பார்க்க முடியும்.
கன்னட சினிமாவில் ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ படங்களைப் போலவே பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘ சார்லி 777’. இந்தப்படம் சிறந்த கன்னடப் படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. அமேசான் ப்ரைம் வீடியோ ஒடிடி-யில் ’சார்லி’ 777 இடம்பெற்றிருக்கிறது.
அதேபோல் சிறந்த மலையாளப் படத்திற்கான விருதை வென்றிருக்கும் ‘ஹோம்’ மற்றும் ‘சிறந்த இந்தி திரைப்பட’ விருதை வென்ற ‘சர்தார் உத்தம் சிங்’ ஆகிய இரு படங்களும் அமேசான் ப்ரைம் வீடியோ ஒடிடி-யில் ஸ்ட்ரீமிங்க் ஆகி கொண்டிருக்கின்றன.