தஞ்சைக்கு அருகில் இருக்கும் கிராமத்தில், தான் வைத்ததே சட்டம் என்று மக்களை மிரட்டி வைத்திருக்கிறார் ஊர்த் தலைவரான பாலாஜி சக்திவேல். பல வருடங்களாக அவரே தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பட்டியலினத்தவர்கள் அதிகம் வசிக்கும் அந்த ஊரில் சசிகுமார் பாலாஜி சக்திவேலிடம் எடுபிடி வேலை செய்து வருகிறார். ஒரு நாள் அந்தத் தொகுதியை அரசு ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கிறது.
இதனால் ஆத்திரமடையும் பாலாஜி சக்திவேல், தன்னிடம் எடுபிடியாக இருக்கும் சசிகுமாரை நிற்க வைத்து, தன்னுடைய கைக்குள் வைக்கிறார். ஒரு நாள் சசிகுமாரின் தாய் இறந்துபோக, அவர் உடலை தகனம் செய்ய சுடுகாடு இல்லாமல் புதைக்கும்படி ஆகிறது. அப்போதில் இருந்து சசிகுமார் மனதில் இது வடுவாக மாறுகிறது.
அவரைச்சுற்றி இருக்கும் சிலரும் தங்கள் நிலைகுறித்து வெதும்ப, ஆண்டாண்டு காலமாக கைக்கட்டி சேகவம் செய்த பாலாஜி சக்திவேலை எதிர்க்க துணிகிறார் சசிகுமார். அதை எப்படி செய்கிறார் என்பதை வலியும் வேதனையுமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன்.
சசிகுமார் இந்த படத்திற்காக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். கலைந்த தலை, அழுக்கு லுங்கி, கைகட்டியே பழக்கப்பட்ட உடல்வாகு என்று மனிதர் அட்டகாசப்படுத்தியிருக்கிறார். ஊரே அடித்து கழிவறையில் தள்ளி விடும் காட்சியில் நம்மை கலங்க வைக்கிறார் சசிகுமார். தனக்கு ஜோடியாக இவர்தான் நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போடும் ஹீரோக்களுக்கு மத்தியில் ஒரு பெண் தனக்கு ஜோடியாக நடித்தால் போதும் என்று சம்மதித்தது ஆச்சரியம்.
தஞ்சாவூர் தெனாவெட்டு நக்கல், திமிரு என்று எல்லாவற்றையும் உடலிலும், முகத்திலும் காட்டி நடித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். பெரிய வீட்டு பெரிசு ஜி.எம்.குமார், அவரை நக்கலடிக்கும் ஈரமுள்ள மனைவி. ஆண்டான் அடிமைகளை புரிய வைக்க முயன்று தோற்கும் அரசு அதிகாரியாக சமுத்திரக்கனி என்று படத்தில் பலரும் வாழ்ந்திருக்கிறார்கள். மண்ணுக்குள் புதைக்க சடலமாக நடித்திருக்கும் அந்த தஞ்சாவூர் பாட்டியை மறக்க முடியாது. ஆதிக்க சாதியினரிடம் இருக்கும் அத்தனை அரசியல் சூழ்ச்சிகளையும் கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
முதல் காட்சியிலேயே செருப்புகளையே பேச வைத்திருக்கும் ஐடியா சிறப்பு. ஆனால் எல்லா இடங்களிலும் சாதி சாதி என்று பேச வைத்திருப்பது பிரச்சார நெடியாக இருக்கிறது. சில இடங்களில் காட்சிகள் அங்கேயே சுற்றுவதாக தெரிகிறது. நகைச்சுவை காட்சிகளை வைக்க இடம் இருந்தும் வைக்கவில்லை. சில காட்சிகளில் ஒளிப்பதிவும், இசையும் டிவி சீரியல் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.
இன்னும் திரைக்கதையில் சுவாரஸ்யம் சேர்த்திருக்கலாம். நந்தன் போன்ற மனிதர்கள் இன்னும் நம்முடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று க்ளைமேக்ஸில் காட்டும்போது மனம் பதைக்கிறது. இந்த அரசியல் அமைப்பும் சட்டமும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்கிற கேள்வியை நமக்குள் எழ வைக்கிறது. அந்த வகையில் இயக்குனர் இரா.சரவணன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.