மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இளையராஜாவை பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது.
ஆகா, இளையராஜாவுக்கு உரிய கௌரவத்தை மோடி செய்திருக்கிறார் என்று பாஜகவினரும் வலதுசாரிகளும் கொண்டாடி வருகிறார்கள்.
இது தேவையா, இதற்காகதான் மோடியை அம்பேத்காருடன் ஒப்பிட்டீர்களா என்று இளையராஜாவைத் தாக்குவதும் நிகழ்ந்திருக்கிறது.
இந்த அங்கீகாரத்தையெல்லாம் தாண்டியவர் இளையராஜா. அவருக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று விரும்பியிருந்தால் அவருக்கு இந்தியாவின் உச்ச விருதான பாரத ரத்னாவை வழங்கி சிறப்பித்திருக்க வேண்டும் என்று ஆதங்கப்படுகிற பதிவுகளையும் பார்க்க முடிகிறது.
மத்திய அரசு வழங்கியுள்ள இந்தப் பதவியை இளையராஜா தூக்கி எறிய வேண்டும். எனக்குக் இதெல்லாம் தேவையில்லை என்று கம்பீரமாக சொல்ல வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.
இளையராஜா. இசையின் போக்கில் இனிய கலகங்களை ஏற்படுத்தி மக்களின் மனம் கவர்ந்தவர். அவரது பேச்சும் செயல்களும் இப்போதல்ல எப்போதுமே சர்ச்சைகள்தான்.
நாய் ஊளையிடுவதும் இசைதான் என்று 80களில் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டியளித்தது அந்தக் காலக் கட்டத்தில் சர்ச்சையானது.
இயக்குநர்களை மதிப்பதில்லை, விழாக்களுக்கு வருவதில்லை, அவரிடம் கருத்துக்களைத் தெரிவிக்க இயலாது, கர்வம், மண்டைக் கனம், திமிர் என்று அவர் மீதான கண்டனங்கள் மிக அதிகம்.
அதே போன்று அவர் வழங்கிய அழகிய இசையும் மிக அதிகம். 80களில் அவரது இசை நான்கு இசைப் பதிவுகள் கூடங்களில் நடந்துக் கொண்டிருந்தது இடை விடாமால். வருடத்துக்கு சுமார் ஐம்பது படங்கள், 2000 பாடல்கள் என்ற எண்ணிக்கையில். அத்தனையும் இனிமையாக, இளமையாக, இசை நுணுக்கமாக.
அவரது ஒழுங்கும் முகத் துதி இல்லாத பேச்சும் பலருக்கு அச்சுறுத்தலாக மாறியது. காலை 7 மணிக்கு இசையமைப்பு என்றால் 7 மணிக்கு தொடங்க வேண்டும். 9 மணிக்கு இசைப் பதிவு என்றால் 9 மணிக்கு இசைப்பதிவு. அவரிடத்தில் தாமதங்களுக்கு இடமில்லை. எல்லோருக்கும் ஒரே நீதிதான். அது ஏவிஎம் என்றாலும் அதேதான் புதிதாய் படம் எடுக்கும் நிறுவனம் என்றாலும் அதே வரிசையில்தான் வர வேண்டும். பிடித்தால் இசையமைப்பார் பிடிக்கவில்லை என்றால் வெளியே அனுப்பிவிடுவார். இத்தனை ஆட்டங்களையும் அவரது இசை கொடுக்கும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் தமிழ்த் திரையுலகம் பொறுத்துக் கொண்டது.
இசை ரசிகர்களுக்கு இந்த சிக்கல் இல்லை. முக்கியமாய் அவரது தீவிர ரசிகர்களுக்கு ராஜாவுடன் இது போன்ற பிரச்சினைகள் கிடையாது. அவர் இசை மேதை அவர் செய்வது சரிதான் என்று கடந்து சென்று விடுவார்கள்.
இந்த சர்ச்சைகளும் சந்தோஷங்களும் இளையராஜாவுக்கும் புதிதல்ல தமிழ்நாட்டுக்கும் புதிதல்ல.
இப்போது எம்.பி. பதவி சர்ச்சை.
இளையராஜா பிரதமர் மோடிக்கும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துவிட்டார். வாழ்த்து கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துவிட்டார், அமெரிக்காவின் சியாட்டில் நகரிலிருந்து.
இந்த நேரத்தில் லதா மங்கேஷ்கர் சொல்லியதுதான் நினைவுக்கு வருகிறது.
‘நான் நாடாளுமன்றத்துக்கு பொருத்தமற்றவள்”
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது லதா மங்கேஷ்கர் ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். 1999 முதல் 2005 வரை உறுப்பினராக பணியாற்றினார்.
அது குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில்தான் மேலே படித்தது.
6 வருடங்கள் கழித்து இளையராஜாவும் இது போன்று உணரலாம்.
லதா மங்கேஷ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற மிகப் பெரிய சாதனையாளர்கள் நியமன உறுப்பினர்களாக நாடாளுமன்றத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்களின் காலம் நிறைவுப் பெறும்போது விமர்சனங்களுடனும் கண்டனங்களுடன் தான் விடைப்பெற்றிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை, மிகக் குறைந்த நாட்களே நாடாளுமன்றத்துக்கு சென்றார்கள், தங்கள் துறை தேவைகளைக் குறித்து பேசவில்லை, பொறுப்பை வீணடித்துவிட்டார்கள்….இப்படி பல விமர்சனங்களை சந்தித்தார்கள். அந்த நிலை இளையராஜாவுக்கு ஏற்படலாம்.
சமீபத்தில் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு எழுதியதைப் போல் நாடாளுமன்றத்தில் ஏதேனும் பேசி இளையாராஜா மீண்டும் சர்ச்சைகளில் சிக்கலாம்.
மதுரை இசை நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து பேசியதன் மூலம் பாஜக சார்பு என்ற விமர்சனத்திலிருந்து லேசாக தப்பியிருந்தார். மீண்டும் இப்போது நியமன எம்.பி. சர்ச்சை.
இதற்கு முன்பு தமிழ்த் திரையுலகிலிருந்து சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா பாலி, சோ ராமசாமி ஆகிய மூன்று பேர் நியமன உறுப்பினரகளாக நாடாளுமன்றத்துக்கு சென்றிருக்கிறார்கள். இவர்கள் மூவருமே அரசியல் சார்புடையவர்கள். அரசியல் தெரிந்தவர்கள். புரிந்தவர்கள். இசையை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் இளையராஜாவுக்கு நாடாளுமன்றம் சவாலாகதான் இருக்கும்.
பாஜகவின் தென்னிந்திய அரசியல் இலக்கு நேற்று பரிந்துரைக்கப்பட்ட நியமன உறுப்பினர்களின் பட்டியலிலிருந்து தெரிகிறது. நால்வருமே தென்னிந்தியாவை சார்ந்தவர்கள்.
இளையராஜா – தமிழ்நாடு, பி.டி.உஷா – கேரளா, விஜயேந்திர பிரசாத் – ஆந்திரா, வீரேந்திர ஹெக்டே – கர்நாடகா.
இப்படி தென்னிந்திய பிரபலங்களுக்கு நியமனப் பதவிகள் கொடுத்து கௌரவிப்பதன் மூலம் தென்னிந்தியாவைக் கைக்குள் கொண்டு வர முடியுமா என்ற கேள்விக்கு முடியாது என்ற பதிலிருக்கிறது என்பது பாஜகவுக்கும் தெரியும். ஆனாலும் அதை செய்கிறார்கள் என்றால் என்ன காரணம்?
ஒரே பதில் பிம்ப அரசியல்.
இளையராஜாவுக்கு என்ன காரணத்துக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு அரசு தரப்பில் ஒரு விளக்கமும் தரப்பட்டுள்ளது. அதில் இசை மட்டுமே காரணமாக குறிப்பிடப்படவில்லை. அவர் தலித் என்ற சாதிய அடையாளத்தையும் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.
பழங்குடியினத்தை சார்ந்தவருக்கு குடியரசுத் தலைவராக வாய்ப்பு. தலித் சமூகத்தை சார்ந்தவருகு எம்.பி.பதவி. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் குரலை உயர்த்தி பேசுவதற்கு இரண்டு உதாரணங்கள் கிடைத்துவிட்டன.
பாஜகவின் பிம்ப அரசியலுக்கு இளையராஜா துணை போகிறார் என்ற குற்றாட்டுக் வைக்கப்படுகிறது. ஆனால் அவருக்கு வேறு வழியில்லை.
இளையராஜாவுக்கு இது கேட்ச் 22 நிலை, அதாவது புலி வாலைப் பிடித்தது போன்றது. வேண்டாம் என்றால் மத்திய ஆட்சியாளர்களுக்கு கடுப்பாகும். ஏற்றுக் கொண்டால் பாஜக எதிர்ப்பாளர்களிடம் சிக்கிக் கொள்வார். ஆனால் இரண்டாவது பரவாயில்லை என்று இப்போது கருதியிருக்கலாம்.
இளையராஜாவுக்கு இன்கம்டாக்ஸ் பிரச்சினை இருக்கிறது. அதை தீர்க்கதான் அவர் பாஜகவுடன் நெருங்குகிறார் என்பதெல்லாம ஏற்க முடியாத வாதம். இதற்கு முன்பும் அவர் இன்கம்டாக்ஸ் பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு அவர் வீட்டில் இன்கம்டாக்ஸ் ரெய்ட் நடந்திருக்கிறது. அதனால் இன்கம்டாக்ஸ் சிக்கல்கள் அவருக்கு புதிதல்ல.
இளையராஜா ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அவரது நெருங்கிய நண்பர் ரஜினிகாந்தின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
இருவருக்கும் அரசியல் வராது. தெரியாது.
மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள்.