பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிஹாரின் மதுபானி நகரில் நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.13,480 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்.
சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது: கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் பாரதம் வளர்ச்சி அடையும் என்று மகாத்மா காந்தி கூறினார். இதை கருத்தில் கொண்டு கிராமங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
நாடு முழுவதும் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சேவை மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த மையங்கள் மூலம் அரசின் அனைத்து சேவைகளும் வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பஞ்சாயத்துகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் கோடி வழங்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் ரயில், சாலை, விமான போக்குவரத்து வசதி விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இன்றைய தினம் பாட்னா, ஜெய்நகர் இடையே நமோ பாரத் ரேபிட் ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள்.
கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கிறது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பஹல்காம் தாக்குதலில் மகனை, சகோதரனை, வாழ்க்கைத் துணையை இழந்து பலர் தவிக்கின்றனர். கன்னடம், மராத்தி, ஒடிசா, குஜராத்தி, வங்க மொழி என பல்வேறு மொழிகளை பேசும் சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். கார்கில் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் துயரத்தில் மூழ்கி உள்ளனர். இந்தியாவின் ஆன்மா மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.
தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள், சதித் திட்டம் தீட்டியவர்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். தீவிரவாதத்தை வேரறுக்கும் காலம் வந்துவிட்டது. 140 கோடி இந்தியர்களின் மனவலிமையை யாராலும் உடைக்க முடியாது.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களை தேடிக்கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம். எந்தவொரு தீவிரவாதியும் தப்ப முடியாது. பூமியின் கடைசிவரை அவர்களை துரத்துவோம். தீவிரவாதிகளிடம் மீதமிருக்கும் நிலத்தையும் அழிக்கும் நேரம் வந்துவிட்டது. நீதி நிலைநாட்டப்படும்.
மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இந்தியாவுக்கு துணை நிற்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
ஒரு நிமிட மவுன அஞ்சலி: பிஹாரின் மதுபானி நகரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அவர் தனது உரையை தொடங்கும் முன்பு பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்று விழாவில் பங்கேற்ற அனைவரும் தலைவணங்கி, கைகளை கூப்பி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி கண்களை மூடி, கைகளை கூப்பி அஞ்சலி செலுத்தினார். மவுன அஞ்சலிக்கு பிறகு பிரதமர் மோடி, ‘ஓம் சாந்தி’ என்று கூறி உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டினார்.
ஆங்கிலத்தில் எச்சரிக்கை: பிஹார் நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் பேசினார். ஆனால் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து பேசும்போது அவர் ஆங்கிலத்தில் உரையாற்றினார். தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் மற்றும் உலக நாடுகள் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் பேசியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய உருக்கு மாநாடு, கண்காட்சி மும்பையில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் முனைப்புடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதில் உருக்கு உற்பத்தி துறையின் பங்களிப்பு முக்கியமானது. சர்வதேச அளவில் அதிக உருக்கு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் பாரதம் 2-வது இடத்தில் இருக்கிறது.