திருவாரூரில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 4 கி.மீ தூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக நேற்று பிற்பகல் திருவாரூர் வந்தார்.
காட்டூர் கலைஞர் கோட்டத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், பின்னர் அங்குள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து, பவித்திர மாணிக்கம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து திருவாரூர் துர்க்காலயா சாலை, தெற்கு வீதி, பனகல் சாலை வழியாக 4 கி.மீதூரம் நடந்து சென்று பொதுமக் களை சந்தித்தார். அப்போது, வழி நெடுகிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு கட்சித் தொண்டர்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், பொதுமக்கள் பலர் மனுக்களையும் வழங்கினர். தொடர்ந்து, திருவாரூர் ரயில்வே மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து திருவாரூர் சந்நிதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சென்று தங்கினார்.