“ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொல்வாங்க. அதுபோல கட்சிகள் ரெண்டுபட்டா மீடியாவுக்கு கொண்டாட்டம்தான்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“அதிமுக தொடர்பான செய்திகள் நிறைய இருக்குன்னு சொல்லாம சொல்றியோ?”
“ஆமாம். இப்ப எந்த சோர்ஸ்கிட்ட போனாலும் அதிமுக நியூஸைத்தான் முதல்ல சொல்றாங்க. அதுக்கு அப்புறம்தான் அடுத்த நியூஸைச் சொல்றாங்க.”
“ஆமா இப்ப பாலிடிக்ஸ்ல அதானே ஹாட் டாபிக். ஒபிஎஸ் அவ்வளவுதானா?”
“இல்லை. அவரை முழுமையா ஒதுக்க முடியாத சூழல்தான் அதிமுகவுல இருக்கு. அவர் தேர்தல் ஆணையத்துல மனு கொடுத்திருக்கார். நீதிமன்றத்துக்கும் போயிருக்கிறாங்க. இதுதான் இப்போது ஓபிஎஸ் வியூகமா இருக்கு. சசிகலாவும் ஓபிஎஸ்ஸும் ஓரணிக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகரிச்சிருக்கு. அதுக்கான முதல் படியா மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செஞ்சு தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டு இருக்காங்க. திருத்தணி முருகர் கோயில் வழிபட்டுட்டு தன்னோட பயணத்தை சசிகலா தொடங்கி இருக்கிறார். ஓபிஎஸ்ஸும் அதுமாதிரியான பயணத்துக்கு ரெடியாகியிருக்கிறார்”
“அவங்களுக்கு ரெஸ்பான்ஸ் எப்படியிருக்காம்?”
“ஆதரவு இல்லைனுதான் அங்கிருந்து நியூஸ் வருது. கூட்டம் அதிகம் வராததுல சசிகலா கொஞ்சம் அப்செட். பவர் நம்மகிட்ட வந்துருச்சுனா கூட்டமும் நம்ம பக்கம் வந்துரும்னு சொல்லியிருக்காங்க. அதேபோல ஓபிஎஸ்ஸுக்கும் மதுரை தேனி தவிர மத்த பக்கத்துல ஆதரவு இல்லாம இருக்கு. இறங்கி வேலை செஞ்சோம்னா எல்லோரும் நம்ம பக்கம் வந்துருவாங்கனு அவர் ஆதரவாளர்கள் சொல்லியிருக்காங்க”
“சசிகலாவும் ஓபிஎஸ்ஸும் நேரடியா சந்திச்சதா தகவல் எதுவும் வரலியே?”
“இதுவரைக்கும் ரெண்டு பேரும் நேரடியா சந்திக்கலை. அதே நேரத்துல பெங்களூர் புகழேந்திதான் இவங்க ரெண்டு பேருக்கும் இடையில தூதரா செயல்படறார்”
“சந்தடியே இல்லாம எடப்பாடி எப்படி இந்த அளவுக்கு ஆதரவாளர்களை வளைச்சாரு?”
“எல்லாத்துக்கும் காரணம் வைட்டமின் ப-ன்னு கட்சியில பேசிக்கிறாங்க. பொதுக்குழு கூடறதுக்கு ஒரு மாசம் முன்னாடியே தனக்கு ஆதரவா பொதுக்குழு உறுப்பினர்களை வளைக்கிற வேலையில எடப்பாடி இறங்கிட்டாராம். அதுக்காக 700 கோடி ரூபாய் வரைக்கும் அவர் செலவு பண்ணதா பேசிக்கிறாங்க. பொதுக்குழுவுல ஆவேசமா பேசின முன்னாள் அமைச்சர் மூலமாத்தான் வைட்டமின் கொடுத்து ஆதரவை அதிகரிச்சிருக்காங்க.”
“இப்போ எடப்பாடிக்கு எத்தனை பேர் ஆதரவா இருக்காங்க”
“கிட்டத்தட்ட எல்லோருமே ஆதரவுதான் என்ற நிலைல இருக்கு. 66 எம்.எல்.ஏ.வுல 63 பேர் எடப்பாடிக்கு ஆதரவு கொடுத்திருக்காங்க. ராஜ்யசபா எம்.பி.ங்க எல்லாருமே எடப்பாடி பக்கம்தான். எடப்பாடி போகுமிடமெல்லாம் கூட்டத்தைக் காட்டணும்னு உத்தரவாம். அந்தப் பொறுப்பை ஜெயக்குமாரும் சி.வி.சண்முகமும் எடுத்திருக்காங்க. இதுக்கு நடுவுல ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையும் அதிமுகவுக்கு கொடச்சல் கொடுக்கலாம்”
“என்னாச்சு?”
“ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை வெளியிடறதுல முதல்வர் ஆர்வமாய் இருக்கிறாராம். அது அதிமுகவுக்கு சங்கடத்தை கொடுக்கலாம்னு எதிர்பார்க்கிறாங்க. ஆனா அறிக்கைல எந்த வில்லங்க செய்தியும் இல்லைனு சொல்றாங்க. அப்படி ஏதாவது இருந்தா ஓபிஎஸ்க்கும் இபிஎஸ்க்கும் சசிகலாவுக்கும் சங்கடம்தான்”
”சரி, பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டம் மேல கூட்டமா போட்டு பேசிக்கிட்டு இருக்காரே…இதுக்கு முன்னாடி எந்த பாஜக தலைவரும் இவ்வளவு கூட்டம் போட்டதில்லையே”
“ஆமா. அது மேலிடத்து உத்தரவாம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால தமிழ்நாட்டுல எல்லா இடங்கள்லயும் கூட்டம் போடணும்னு உத்தரவு போட்டிருக்காங்க. இவருக்கு மட்டுமில்ல கவர்னருக்கும் அந்த மாதிரி ஒரு உத்தரவு வந்திருக்கிறதா சொல்றாங்க. நிறைய மீட்டிங்கல கலந்துக்கிட்டு ஏதாவது பரபரப்பா பேசி எப்பவும் லைம்லைட்ல இருக்கணும்னு சொல்லியிருக்காங்களாம். அதான் சனாதான பேச்செல்லாம் அவர் பேசுறாரு”
“அண்ணாமலை இப்படி ஊர் ஊரா போய் கூட்டம் போடுறது தமிழக பாஜகவுல பலருக்கு பிடிக்கலனு சொல்றாங்களே?”
“உண்மைதான். உங்க காதுக்கே விஷயம் வந்துருக்குனா பிரச்சினை அதிகரிக்குதுனு அர்த்தம். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், மத்திய அமைச்சர் முருகனுக்கும் இடையில சிக்கல்கள் அதிகரிக்கிறதாம். கட்சி நிர்வாகிகள் நியமனத்திலகூட முருகனோட சிபாரிசுகளை அண்ணாமலை அவ்வளவா கண்டுக்கலையாம். இந்த விஷயம் டெல்லி வரைக்கும் போயிருக்கு. இந்தப் பிரச்சினையை சமாளிக்கதான் முருகனை புதுச்சேரியில் கட்சி வேலை பாருங்கன்னு டெல்லி தலைமை சொல்லியிருக்கு. தமிழ்நாட்ல பரபரப்பா அரசியல் பண்ண டெல்லி தலைமைக்கு இப்போதைக்கு அண்ணாமலை தேவைங்கிறதால இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்காங்க. ஆனால் இந்த நிலைமை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால மாறலாம்னு சிரிக்கிறார் காவி கட்சியோட ஒரு மூத்த பிரமுகர்.”
“ஓஹோ?”
“அவங்க மோதலைப் பத்தி இன்னொரு விஷயத்தையும் சொல்றாங்க. பிரதமர் மோடி ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சென்னைல நடந்தது. அண்ணாமலை, அமைச்சர் முருகன் உட்பட முக்கிய நிர்வாகிகள் இதுல கலந்துக்கிட்டாங்க. இது பிரதமர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி. அதனால குறைஞ்சது 25 ஆயிரம் பேரையாவது கூட்டணும்னு கண்டிஷனா உத்தரவு போட்டாராம் அண்ணாமலை. இதுக்கான செலவுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கு. 25 ஆயிரம் நாற்காலிகளைப் போட்டிருக்காங்க. ஆனா கூட்டத்துக்கு 5 ஆயிரத்துக்கும் குறைவானவங்கதான் வந்தாங்களாம். அவங்களும் அண்ணாமலை பேசி முடிச்சதும் கிளம்பி இருக்காங்க. முருகன் பேசும்போது சுமார் 200 பேர்தான் இருந்தாங்களாம். இந்த விஷயம் அவங்களுக்குள்ள மோதலை ஏற்படுத்தி இருக்கு.”
“தமாகா தலைவர் ஜி.கே.வாசன் திரௌபதி முர்முவை சந்திச்சு பேசியிருக்காரே?”
“கடந்த சில மாதங்களாவே பிரதமர் மோடி அமித் ஷா இருவரையும் வாசன் சந்திச்சுட்டுதான் இருந்திருக்கார். தமாகாவை பாஜகவோட இணைச்சுடுங்கன்னு அவங்க சொல்லி வந்திருக்காங்க. இந்த சூழல்லதான் கடந்த வாரம் பாஜக கூட்டணியோட ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவை ஜி.கே.வாசன் சந்திச்சிருக்கார். ஜனாதிபதி தேர்தல்ல தன்னோட ஆதரவு முர்முவுக்குதான்னு ஜி.கே.வாசன் சொல்லியிருக்கார். அதைத் தொடர்ந்து திரும்பவும் பாரதிய ஜனதா தலைவர்களை சந்திச்சிருக்கார். அப்ப ‘இன்னும் கால அவகாசம் எடுத்துக்கோங்க. அதுக்குள்ள உங்க முடிவை சொல்லுங்க. ஆனால் ராஜ்யசபா வாய்ப்பெல்லாம் கிடைக்காது. உங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள நாடாளுமன்ற தொகுதியில நிக்க வைக்கறோம். கட்சியை இணைக்க விருப்பம் இல்லைன்னா சொல்லிடுங்க. அப்புறம் வற்புறுத்த மாட்டோம்’னு கறாரா சொல்லி அனுப்பி இருக்காங்களாம்.”
“அமைச்சரவைக் கூட்டம் நடத்தியிருக்காரே முதல்வர்”
“ஆமாம். எல்லோரும் கவனமா இருங்க. மக்கள் பிரச்சினைகளை உடனடியா தீர்த்து கொடுங்க. ஆட்சிக்கு எந்த கெட்டப் பெயரும் வந்துவிடக் கூடாதுனு சொல்லியிருக்கார். எல்லா துறைகள் பத்தியும் எனக்கு ரிப்போர்ட் வந்துக்கிட்டு இருக்குனும் சொன்னாராம்”
“தன்னை சின்னவர்னு அழைக்க சொல்லியிருக்காரே உதயநிதி ஸ்டாலின்?”
“ஆமாம். சின்னவர்னு அந்தக் காலத்துல எம்.ஜி.ஆரை சொல்லுவாங்க. சினிமாவுல எம்ஜிஆர் அண்ணன் சக்கரபாணியை பெரியவர்னும் எம்ஜிஆரை சின்னவர்னும் சொல்வாங்க. எம்ஜிஆர் ஆக முயல்கிறார் உதயநிதினு விமர்சனம் வந்ததைப் பார்த்து வருத்தப்பட்டாராம். மூன்றாம் கலைஞர், இளம் கலைஞர் இப்படிலாம் அழைக்காதிங்க. நான் உங்க எல்லோரையும்விட சின்னவன், அதனால சின்னவர்னு கூப்பிடுங்கனு சொன்னேன். அதை இப்படி சொல்றாங்களேனு ஆதங்கப்பட்டிருக்கிறார்”
“சின்னவர் இப்போ நிறைய டூர் போகிறாரே”
“எல்லாம் தாத்தா, அப்பா வழி. அவங்க ரெண்டு பேருமே தமிழ் நாடு முழுக்க நிறைய பயணம் போனவங்க. அந்த வழியில உதயநிதியும் போகிறார். போகிற இடமெல்லாம் திமுகவின் சீனியர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவருக்கு ஆலோசனை கூறப்பட்டிருக்கிறதாம். இளைஞர் அணியையும் பலப்படுத்தும் திட்டத்தையும் திமுக செயல்படுத்த உள்ளது”
“ஏன்? உதயநிதிக்காகவா?”
“அதுவும் ஒரு காரணம். ஆனா அது முக்கிய காரணமில்ல. திமுக, அதிமுக பிடிக்காத இளைஞர்கள் நாம் தமிழர் கட்சிக்கும் பாஜகவுக்கும் போய்க்கிட்டு இருக்காங்க.
அந்த இளைஞர்களை திமுகவுக்கு திருப்ப வேண்டிய கட்டாயத்தில் திமுக இருக்கிறது. அதனால் இளைஞர் அணி மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது” என்று சொல்லி கிளம்பினாள் ரகசியா.