No menu items!

மிஸ் ரகசியா – ஓபிஎஸ்ஸை மகிழ்ச்சியாக்கிய அண்ணாமலை

மிஸ் ரகசியா – ஓபிஎஸ்ஸை மகிழ்ச்சியாக்கிய அண்ணாமலை

“இந்த ரண களத்திலயும் ஓபிஎஸ் குரூப் ஒரு விஷயத்துல ஹேப்பியா இருக்காங்க” என்று உற்சாகமாய் உள்ளே வந்தாள் ரகசியா.

“இத்தனை அடிபட்டும் ஓபிஎஸ் குரூப் ஹேப்பியா? என்ன சொல்ற?” என்றோம்.

“எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனதுக்கு ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து சொல்லி இருக்காங்க. ஆனா தமிழக அரசியல்ல இப்ப எல்லா விஷயத்துக்கும் கருத்து சொல்லிட்டு வர்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மட்டும் வாழ்த்து சொல்லலனு ஓபிஎஸ் தரப்பு ஹேப்பி” என்றாள் ரகசியா.

“இல்லையே அண்ணாமலை வாழ்த்து சொன்னதா பேப்பர்லலாம் வந்துச்சே?”

”நல்லா படிச்சுப் பாருங்க. அண்ணாமலை தொலைபேசி மூலம் வாழ்த்து சொன்னார்னு இருக்கும். ஆனா அண்ணாமலையோட அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவுகள்ல இந்த வாழ்த்து இல்லை. அது மட்டுமில்ல, அவர் வாழ்த்து சொன்னார்ங்கறது எடப்பாடி தரப்பு சொல்றதுதான். வாழ்த்தை ஏன் பகிரங்கமா சொல்லலனு ஓபிஎஸ் குரூப் கேக்குது. டெல்லி பாஜகவுக்கு எடப்பாடியை ஏத்துக்க மனசு இல்லை, எங்களுக்குதான் டெல்லி பாஜக ஆதரவுனு ஓபிஎஸ் தரப்பு கொஞ்சம் உற்சாகமா இருக்காங்க”

“நிலைமை எப்படி ஆயிருச்சு பாரு. சொந்தக் கட்சிக்காரங்க ஆதரவு இருக்குனு சந்தோஷப்படுறதை விட டெல்லி பாஜக ஆதரவு இருக்குனு ஹேப்பி ஆகுறது எவ்வளவு அசிங்கம்”

“நீங்க அசிங்கம்னு நினைக்கிறீங்க. ஆனால் எதிர்காலத்துல தேர்தல் ஆணைய மனுக்கள், நீதிமன்ற வழக்குகள் எல்லாத்துக்கும் டெல்லி ஆதரவு தேவை என்று ஓபிஎஸ் குரூப் நினைக்குது. அந்த அடிப்படையில அண்ணாமலை பகிரங்கமா வாழ்த்து சொல்லாததை முக்கியமா பாக்குது”

’இதைப் பத்தி பாஜகவுல என்ன சொல்றாங்க?”

“ஜனாதிபதி தேர்தல் முடியற வரைக்கும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் விஷயத்துல மூக்க நுழைக்க வேண்டாம்ங்கிறது டெல்லி பாஜகவோட முடிவு”

“இதைப்பத்தி எடப்பாடி எதுவும் கவலைப் படலியா?”

“இந்த விஷயத்தை எடப்பாடிக்கிட்ட ஜெயக்குமார் எடுத்துட்டு போயிருக்கார். அதுக்கு எடப்பாடியார், ‘அவங்க இப்ப நம்மகிட்ட இருந்து தள்ளி இருக்கணும்னு விரும்புறாங்க. நமக்கும் இப்போதைக்கு அதுதான் நல்லது’ன்னு சொல்லிட்டாராம்”

“பொன்னையன் ஆடியோவும் அதிமுகவுல பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கே?”

“ கட்சிக்காரங்களுக்கு கடுப்புதான். ஆனா பொன்னையன் மேல நடவடிக்கை எடுத்தா அந்த ஆடியோ உண்மைனு ஆகிடும். அப்போ அதில இருக்கிற விஷயங்களும் உண்மைனு ஆகிடும். பணத்தை பாதுகாக்க அடிச்சுக்கிறாங்க, யாருக்கும் கட்சி நலன்ல அக்கறை இல்லை இப்படியெல்லாம் அந்த ஆடியோவுல இருக்கு. அதனால் இப்போதைக்கு ஆடியோ பத்தி ஏதுவும் பேசாம தள்ளி நிக்க விரும்புறாங்க”

”பொன்னையன் நான் பேசலனு மறுத்துருக்காரே?”

”அப்படினு அவரு சொல்றார். ஆனா கட்சிக்காரங்கள் அப்படி நினைக்கல. பொதுக்குழு மேடையில அவரை யாரும் பெருசா கண்டுக்கல. அதனால மேடையிலேயே அவர் இறுக்கமாத்தான் இருந்தார். அந்த மன உளைச்சல்லதான் அவர் அப்படி பேசி இருப்பார்னு அதிமுகவுல சொல்றாங்க. பொன்னையனும் எடப்பாடி பழனிசாமியை சந்திச்சு இதுபத்தி விளக்கம் கொடுத்திருக்கார். அதுக்கு எடப்பாடி, ‘விடுங்கண்ணே.. இதைவிட தலைபோற விஷயம் எல்லாம் நமக்கு இருக்கு’ன்னு சொல்லி அனுப்பி வச்சிருக்கார். பொன்னையன்கிட்ட அப்படி சொன்னாலும் அவரை அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து பதவியிறக்கம் செஞ்சு அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரா எடப்பாடி அறிவிச்சிருக்கார். இனிமே பொன்னையன் அதிமுக செயல்பாடுகள்ல தலையிட முடியாது”

“தலைபோற விஷயம்னு எடப்பாடி சொன்னது கோடநாடு பிரச்சினையையா?”

“கோடநாடு விஷயத்துல எடப்பாடி அவ்வளவா பயப்படலைன்னு அவருக்கு நெருக்கமானவங்க சொல்றாங்க. ‘கோடநாடு விஷயத்துல என்னை சிக்கவைக்க தீவிர முயற்சிகள் நடக்குது. ஆனா இந்த விஷயத்துல எனக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் இல்லை. அதனால எனக்கு அந்த பயம் எதுவும் கிடையாது’ன்னு தனக்கு நெருக்கமானவங்ககிட்ட எடப்பாடி சொல்லிட்டு இருக்காராம்.”

“அதிமுக விவகாரத்தை ஓபிஎஸ் எப்படி அணுகப் போறாராம்?”

“ஓபிஎஸ் இந்த விஷயத்தை பல்வேறு விதங்கள்ல கொண்டுபோக திட்டமிட்டு இருக்கார். இதுல முதலாவது சட்டப் போராட்டம், அடுத்தது தேர்தல் ஆணையம், மூணாவதா முக்குலத்தோரை எடப்பாடிக்கு எதிராக திருப்பிவிடற திட்டம். இதுபத்தி சில முக்கிய பிரமுகர்கள்கிட்ட ஓபிஎஸ் பேசி இருக்கார். இதுக்கு நடுவுல எப்படியாவது பிரதமரை சந்திச்சு அவரை தனக்கு ஆதரவா திருப்ப முயற்சி செஞ்சுட்டு வர்றார். ஆனா பிரதமர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கல.”

“பிரதமரை சந்திக்க எடப்பாடி ட்ரை பண்னலையா?”

“பிரதமர் இந்த விஷயத்துல தலையிட மாட்டார்னு எடப்பாடி தரப்பு உறுதியா நம்பறாங்க. நீதிமன்றத்துலயும், தேர்தல் ஆணையத்துலயும் தங்களோட தரப்பு வாதங்களை வலிமையா எடுத்துவைக்க திட்டமிட்டு இருக்காங்க. முக்குலத்தோர் அமைப்புகளோடும் பேசிக்கிட்டு இருக்காங்க. இதற்கு சில செய்தியாளர்களே உதவுறதா ஒரு நியூஸ் இருக்கு”

“எடப்பாடி மொத்தமா அதிமுக கைப்பற்றிவிடுவாரா?”

“இப்போது அப்படியிருக்கு. ஆனா அவர் கோஷ்டிலயும் அதிருப்திகள் இருக்கு. குறிப்பா எல்லா விஷயத்துக்கும் மைக் பிடிச்சு கருத்து சொல்லிட்டு வந்த ஜெயக்குமாருக்கு கட்சிப் பதவி எதுவும் கிடைக்காததுல ரொம்ப வருத்தமாம். அதேபோல திருச்சி மாவட்டத்தை புறக்கணிச்சிட்டதாவும் கட்சிக்காரங்க புலம்பறாங்க. கே.பி.முனுசாமி முக்கியத்துவம் பெறுவதையும் எடப்பாடி ஆதரவாளர்கள் விரும்பல. பொறுமையா இருங்க எல்லாத்தையும் சரி செய்துடலாம்னு எடப்பாடி அவங்களுக்கு உறுதி கொடுத்திருக்கார்”

“அதிமுக உள்கட்சிப் பஞ்சாயத்தால தமிழகத்துல பாஜக பத்தின செய்திகள் அமுங்கிப் போச்சோ?”

“பாஜக பத்தின நியூஸ் வேணும்னா நேரடியா கேட்க வேண்டியதுதானே? எதுக்கு சுத்தி வளைக்கறீங்க. தமிழகத்துல அடுத்ததா காமராஜர் பெயரைச் சொல்லி அரசியல் நடத்த பாஜக திட்டமிட்டிருக்கு. அதனால்தான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டில் காமராஜர்தான் எல்லாம் செய்தார்ன்னு ஆளுநர் பேசியிருக்கார். காமராஜர் பிறந்த நாளன்று எல்லோருக்கும் தடுப்பூசி இலவசங்கிற அறிவிப்பு வெளியாகி இருக்கு. இதுதவிர காமராஜர் நினைவு மண்டபத்தை சீரமைக்க ஒரு கோடி ரூபாய் தர தயார்னு அண்ணாமலை அறிவிச்சிருக்கார். எல்லாத்தையும்விட தமிழக பாரதிய ஜனதா சார்பில் காமராஜர் பிறந்த நாளுக்கு என்று மாவட்ட அளவில் பேச்சுப் போட்டி நடத்தி ஒரு லட்சம் பரிசுன்னு அறிவிச்சிருக்காங்க. காமராஜரை கொண்டாடறதன் மூலம் தென் மாவட்டங்கள்ல ஆதரவை வளர்க்கலாம்னு திட்டமிடுறார் அண்ணாமலை”

”முன்னாடி எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. இப்ப காமராஜரா?

சொந்தமா தலைவர்கள் இல்லைனா இதான் பிரச்சினை. சரி, முதல்வர் ஸ்டாலின் எப்படியிருக்கிறார்?

“நல்லா இருக்கார். அவருக்கு நுரையீரல் நிபுணர் மோகன் காமேஸ்வரன் சிகிச்சையளிப்பதாக தகவல்கள் வருது. வீட்டில் இருந்தால் கட்சி, ஆட்சி என்று அழைப்புகள் வருகிறதாம் முதல்வரும் பேசிக் கொண்டிருக்கிறாராம். முழுமையான ஓய்வுக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கார் என்கிறார்கள்”

“இண்டலிஜென்ஸ் அதிகாரி டேவிட்சனுக்கு ஆபத்துன்னு சொல்றாங்களே?

“ஆமாம். அப்படிதான் காவல்துறை வட்டாரத்தில் பேச்சு. மதுரையில் பாஸ்போர்ட் வழங்கிய பிரச்சினையில் சிக்கியிருக்கிறார். அப்போது அவர் மதுரை கமிஷனராக இருந்திருக்கிறார்”

“பாஸ்போர்ட் வழங்குவது மத்திய அரசின் அதிகாரமாயிற்றே. அதில் எப்படி மாநில அரசு அதிகாரிகள் தவறு செய்ய முடியும்?”

“போலீஸ் வெரிஃபிகேஷன் கொடுத்ததில் முறையாக நடக்கவில்லை, தவறான ஆட்களுக்கும் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். அது இப்போது சிக்கலாகியிருக்கிறது. அவரை மாற்றினால் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டது போல் ஆகிவிடும் என்பதால் அரசு யோசித்து வருகிறது. அவருக்கு எதிராக காவல்துறையிலேயே சிலர் காய் நகர்த்திதான் இந்த சிக்கலை வளர்த்திருக்கிறார்கள் என்றும் காவல்துறையில் பேசிக் கொள்கிறார்கள்”

”உதயநிதி தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று கூறியிருக்கிறாரே. அப்படியென்றால் அவர் அமைச்சராகவில்லையா?”

“இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் வரை அவரை முன்னிறுத்த வேண்டாம் என்று முதல்வர் நினைக்கிறார். அமைச்சராக்கினால் அதுவே நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க் கட்சியனருக்கு பிரச்சார வாய்ப்பாக போய்விடும் என்று கருதுகிறாராம்”

”2024ல்தானே நாடாளுமன்றத் தேர்தல். இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறதே”

“அது அவங்களுக்குத் தெரியாதா? கட்சியில் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று உதயநிதிக்கு கூறப்பட்டிருக்கிறதாம். உதயநிதியும் எல்லா மாவட்டங்களுக்கும் சென்று அங்குள்ள கட்சியினரை நேரடியாக சந்தித்து வருகிறார். போஸ்டர் அடிக்கிறவங்க, பத்திரிகைல முழு பக்க விளம்பரம் கொடுக்கிறவங்களைத் தாண்டி அடி மட்டத் தொண்டனிடம் அறிமுகம் இருந்தாதான் அரசியல்ல நீடிக்க முடியும்னு நெருக்கமானவங்ககிட்ட சொல்லியிருக்கார்.

தாத்தா ரூட்ல போறார்னு கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க” என்று கூறி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...