“தமிழ் சினிமா உலகமே இப்போது ரெய்ட் பயத்தில் இருக்கிறது” என்றவாறு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா. மாமல்லபுரத்தில் ஒரு வாரம் ஓய்வெடுத்து வந்ததாலோ என்னவோ ரொம்பவே பிரஷ்ஷாக தெரிந்தாள்.
“ஒரு வாரமா மகாபலிபுரத்துல செஸ் பாத்துக்கிட்டு இருந்த. சென்னை ஞாபகம் வந்திருச்சா?”
“மெயின் வேலையை விட்டுர முடியாதுல. செஸ் போட்டியை சிறப்பா நடத்துனதுல முதல்வருக்கு ரொம்பவே மகிழ்ச்சி. பிரதமரை வைத்து தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்தியதுபோல் நிறைவு நாள் விழாவுக்கு எப்படியாவது குடியரசுத் தலைவரை அழைத்துவர வேண்டும் என்று விரும்புகிறார். அதற்கான முயற்சியில் டி.ஆர்.பாலு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.”
“குடியரசுத் தலைவர் வருவாரா?”
“குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து இன்னும் சாதகமான செய்தி வரவில்லையாம். ஆனாலும் திமுக தரப்பு முயற்சி செய்துக் கொண்டிருக்கிறது”
“பிரம்மாண்டம் என்றதும் நினைவுக்கு வருகிறது. கலைஞர் நினைவிடம் அருகே கடலில் கலைஞரின் பேனாவை சிலையாக வைக்கும் திட்டத்தை எப்போ செயல்படுத்தப் போறாங்க?”
“ஆரம்பத்தில் இத்திட்டத்துக்கு 80 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது 100 கோடி ரூபாய் வரை செலவாகும் என்கிறார்கள். அதேநேரத்தில் இந்த சிலை அமைப்பதற்கு அதிமுக, நாம் தமிழர், பாஜகவினர் என எல்லா எதிர்க் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தை பல கோடிகள் செலவுல செஞ்சிருக்கும்போது கலைஞருக்கு வைக்கிறதுல என்ன தப்புனு திமுககாரங்க மட்டுமில்ல அவங்க கூட்டணில இருக்கிற கட்சிகளும் சொல்றாங்க. ஆனால், சிலையை வைக்க சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வேண்டும். ஆனால் மத்திய அரசிடம் இந்த துறை இருப்பதால், அனுமதி கிடைப்பது ரொம்ப கஷ்டம் என்றும் திமுகவில் பேசிக்கொள்கிறார்கள்.”
“மெரீனாவுல அடக்கம் செய்ய போராடுன மாதிரி இதுக்கும் திமுக போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் போல”
“ஆமா, திமுக அதற்கும் தயாராக இருக்கிறது. ஆனால் டெல்லி பாஜகவினர் பேனா சிலையை வேறு விதமா பார்க்கிறாங்க. அனுமதி மறுத்தாங்கனா அது திமுகவுக்கு அனுதாபமா மாறும். அதுக்குப் பதில் பேனா சிலையை வைக்க அனுமதி கொடுத்து திமுகவும் வச்சிட்டாங்கனா அதை பிரச்சாரத்துக்கு பயன்படுத்தலாம்னு நினைக்கிறாங்க”
“எப்படி?”
“இத்தனை கோடி செலவுல இந்த பேனா சிலை தேவையா? மக்கள் பணம் வீணடிக்கப்பட்டிருக்குனு தேர்தல் நேரத்துல பேசலாம்ல. அதுனால அனுமதி கொடுத்துருவாங்கனு டெல்லி வட்டாரத் தகவல்”
“முன் எப்போதும் இல்லாத வகையில் கோடம்பாக்கத்தில் ரெய்ட் நடந்திருக்கிறதே…என்ன காரணம்?”
“தமிழ் திரையுலகில் தற்போது உதயநிதியின் கொடிதான் உயரப் பறந்துகொண்டிருக்கிறது. ரெய்டில் சிக்கியவர்கள் தொடர்புள்ள சிலரது படங்களை அவர் விநியோகமும் செய்துள்ளார். அதனால் இந்த ரெய்ட் உதயநிதியை குறிவைத்து நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் திமுகவினர் மத்தியில் இருக்கிறது. அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடந்தபோதே உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகியோர் தொடர்புள்ள இடங்களிலும் வருமான வரி சோதனை நடக்குமென்று செய்தி பரவியது ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர்களின் இடங்களில் சோதனை செய்ய இன்னும் நேரம் இருக்கிறது என்று டெல்லியில் இருந்து தகவல்.”
“அரசியல் ரீதியாக முடக்குவதற்கு இப்படி செய்கிறார்கள் என்கிறார்களே?”
“தங்களுக்கு வேண்டாதவர்கள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் வருமானவரித் துறையினரையும், அமலாக்கத் துறையினரையும் ஏவி விடுவது பாஜகவின் பாணி. அந்த வகையில் அடுத்து அமலாக்கத் துறையும் களம் இறங்கலாம் என்று கருதப்படுகிறது. தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, ‘இப்போது அமலாக்கத்துறை டெல்லியில் கொஞ்சம் பிசி. அங்குள்ள வேலைகள் முடிஞ்சதும் தமிழ்நாட்டுப் பக்கம் வருவாங்க’ என்று பகிரங்கமாய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். செந்தில்பாலாஜி விரைவில் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் வருவார் என்றும் சொல்கிறார். பொதுவாய் அதிகாரத்திலிருக்கும் கட்சியினர் இது போன்று வெளிப்படையாக அமலாக்கத் துறை குறித்து பேச மாட்டார்கள். ஆனால் அண்ணாமலை அது குறித்தெல்லாம் கவலைப்படவில்லை. அமித்ஷாவின் கண்ணசைவுக்கு அமலாக்கத்துறை காத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.”
“அண்ணாமலை சொன்னால் அமித்ஷா கண் ஜாடை காட்ட மாட்டாரா என்ன?”
“ஆனால் அண்ணாமலையின் நிலவரமும் சரியில்லை. அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மீது பாலியல் புகார், செம்மரக் கடத்தல் புகார் என ஏகப்பட்ட புகார்கள். அண்ணாமலை விசாரித்ததில் அந்த புகார்களில் உண்மை இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் நிர்வாகிகளை களையெடுக்க அண்ணாமலை முடிவெடுத்து விட்டாராம். தான் அப்படி செய்யவில்லை என்றால் தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்படுகிறாராம் அண்ணாமலை.”
“திமுக செய்திகள் ஏதும் இல்லையா?”
“தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, 2006 -2011 திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது காவல்துறை ஐஜி ஜாபர் சேட் மனைவிக்கு சமூக சேவகர் என்ற கோட்டாவில் வீட்டு மனை ஒதுக்கப்பட்டது இந்த விஷயத்தை இப்போது திடீரென அமலாக்கத்துறை விசாரிக்க தொடங்கியுள்ளது. முதலில் ஜாபர்சேட் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை கடந்த 27-ம் தேதி ஐ.பெரியசாமியிடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை தொடர்பாக கட்சித் தலைமையோ, முன்னணித் தலைவர்களோ எதையுமே விசாரிக்காததில் அவருக்கு வருத்தமாம். இதனால் சென்னைக்கு வந்த பிரதமரை வரவேற்கும் நிகழ்ச்சிக்குகூட செல்லாமல் ஊருக்குப் போய்விட்டார். முதல்வருக்கு இந்த விஷயம் சற்று தாமதமாகத்தான் தெரிந்தது. இதைத்தொடர்ந்து ஐ.பெரியசாமியை தொடர்புகொண்ட முதல்வர், அவரை சமாதானப்படுத்தி விசாரணையின்போது நடந்த விஷயங்களை கேட்டுத் தெரிந்துள்ளார். அதன் பிறகுதான் ஓரளவு சமாதானம் ஆனார் அமைச்சர் ஐ பெரியசாமி.”
“ஓபிஎஸ் – சசிகலா சந்திப்பு விரைவில் இருக்கும் என்று சொல்லப்படுகிறதே?”
“ஓபிஎஸ் தினகரன் சசிகலா மூவரும் ஆறு மாதமாக இரகசியமாக பேசிக் கொண்டுதான் இருக்கிறார்களாம். எடப்பாடி இல்லாத அதிமுகவை அமைப்பது அவர்களின் திட்டம். சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அழைத்து பேசிய ஓபிஸ், இந்த திட்டத்தை சொல்லி நீங்களும் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று சொன்னாராம். ஆர்.பி.உதயகுமார் இதை அப்படியே எடப்பாடியிடம் சொல்ல, அதைத் தொடர்ந்து தான் ஒற்றை தலைமை என்று முடிவு செய்யப்பட்டதாம். ஆர்.பி.உதயகுமாருக்கு துணை எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.”
“5ஜி ஏலம் விவகாரத்தில் மத்திய அரசு மீது ஆ.ராசா புகார் கூறியிருக்கிறாரே?”
“ஆமாம், அவருக்கு கோபம் இருக்காதா? அவர் காலத்தில் 2ஜி ஏலத்தில் 1.76 லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் என்று கூறிவிட்டு அதைவிட மேம்பட்ட 5ஜி ஏலத்தில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1.5 லட்சம் கோடி ரூபாய்தான் வந்திருக்கிறது என்றால் கேள்வி கேட்பார் அல்லவா?. ஆ.ராசா கேள்வி கேட்டதும் 2ஜி மேல் முறையீடு விசாரணையை தினசரி நடத்தணும்னு சிபிஐ கேட்டிருக்குப் போல”
”2ஜி வழக்குல மேல் முறையீடு விசாரணையை தினசரி நடத்தணும்னு கேட்டது உண்மைதான். ஆனால் அதுக்கு காரணம் இது கிடையாது. ஒரு வாரம் முன்பே இந்த கோரிக்கையை சிபிஐ கோர்ட்ல வச்சிருக்கு. 2020 ஜனவரில நடந்திருக்கணும் அப்போ கோவிட் வந்ததுனால விசாரணை தள்ளிப் போச்சி. அப்புறம் ஆகஸ்ட் 2020ல இதே மாதிரி ஒரு கோரிக்கை வந்தது அப்புறம் கொரோனா இரண்டாவது அலை வந்து அப்படியே தள்ளிப் போய் இப்போ இந்த கோரிக்கை மீண்டும் வந்துருக்கு”
”பரவாயில்லையே எல்லாத்தையும் ஃபிங்கர் டிப்ஸ்ல வச்சிருக்கியே”
“இல்லாட்டி உங்ககிட்ட வேலை பார்க்க முடியுமா?
“ஆவின் பால் எடை குறைஞ்சிருச்சுனு எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகிறார்களே? அதுல ஊழல்னும் சொல்றாங்களே”
“இந்த விஷயத்தில் முதல்வர் ரொம்பவே அப்செட்டாம். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை அழைத்து கண்டித்திருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆவின் பாலில் தண்ணீரை கலந்து ஊழல் செய்த அதே ஒப்பந்ததாரர்தான் இப்போதும் ஆவினுக்கு பால் சப்ளை செய்யும் ஒப்பந்ததாரராக இருக்கிறார். முன்பு நடந்த ஊழலுக்கு காரணமானவர் என்று தெரிந்தும் இந்த ஆட்சியிலும் அவரையே ஒப்பந்ததாரராக வைத்தது ஏன் என்பது ஆவினில் இருப்பவர்களின் புலம்பலாக இருக்கிறது. விரைவில் அவர் மாற்றப்படலாம் என்கிறார்கள். சரி, காமன்வெல்த் போட்டிகள் பார்க்கணும் நான் கிளம்புகிறேன்’ என்று கிளம்பினாள் ரகசியா.