வழக்கமாக காலை 10 மணிக்கு ஆபீசுக்கு வரும் ரகசியா இன்று வரவில்லை. மாறாக செல்பேசி அழைப்பு வந்தது.
“செஸ் ஒலிம்பியாட்டைப் பார்க்க மாமல்லபுரம் வந்திருக்கிறேன். அதனால் இன்னும் 10 நிமிடங்களில் போனில் செய்திகளைச் சொல்கிறேன். அதற்கு முன்பாக அரசியல் வட்டாரத்தில் சோஷியல் மீடியாவுல வேகமாகப் பரவும் வீடியோ ஒன்றை அனுப்புகிறேன்” என்றாள்.
ரகசியா போனைக் கட் செய்த சில வினாடிகளில் வாட்ஸ் அப் மெஸேஜ் வந்தது. செஸ் ஒலிம்பியாட் தொடர்பாக அவர் அனுப்பிய வீடியோவில் பிரதமரும், முதல்வரும் அன்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். சிரித்துக்கொண்டு இருந்தார்கள். வீடியோவைப் பார்த்து முடிப்பதற்குள் செல்போன் மீண்டும் அழைத்தது. ரகசியாதான்.
“என்ன வீடியோவைப் பார்த்துவிட்டீர்களா?”
“முதல்வரும் பிரதமரும் ரொம்பவே நெருக்கமாகி இருக்கிறார்களே?”
“தமிழக அரசியலில் இப்போதைக்கு இதுதான் ஹாட் டாபிக். பாஜகவினரும், திமுகவினரும் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்திருக்க, காங்கிரஸ் தரப்பில்தான் புகைச்சல் எழுகிறது. திமுக மெல்ல பாரதிய ஜனதா பக்கம் சாய்கிறதோ என்று சந்தேகிக்கப்படுகிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். முன்னதாக காமராஜர் பிறந்த நாளன்று ‘திராவிட மாடல்’ போல் ‘காமராஜர் மாடல்’ ஆட்சி என்ற பெயரில் கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டிருந்தார் கே.எஸ்.அழகிரி. அதன்பிறகு திமுகவினர் தப்பாக எடுத்துக்கொள்வார்களோ என்று நினைத்து அந்த திட்டம் கைவிட்டார். சமீபத்தில் திண்டுக்கல்லில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழா கூட்டத்தில் கே.எஸ் அழகிரி கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தின்போது போலீஸார் ஏகப்பட்ட கெடுபிடிகளை செய்துள்ளனர். ஆனால் அதேசமயம் அன்று திண்டுக்கல்லில் நடந்த பாஜக கூட்டத்துக்கு போலீஸார் கெடுபிடிகள் எதையும் காட்டவில்லையாம். இதைக் கேள்விப்பட்ட கே.எஸ்.அழகிரி, அமைச்சர் ஐ.பெரியசாமியை தொடர்புகொண்டு போலீஸார் இப்படி செய்யலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு ஐ.பெரியசாமி, ‘நான் என்ன செய்வது காவல்துறையினர் பாரதிய ஜனதாவை பார்த்து பயப்படுகின்றனர்’ என்றாராம். இந்தப் பின்னணியில் இப்போது பிரதமருடன் முதல்வர் சிரித்துப் பேசும் வீடியோவைப் பார்த்து பாஜக பக்கம் திமுக சாய்கிறதோ என்ற அவரது சந்தேகம் வலுத்துள்ளது.”
“மற்ற கூட்டணி கட்சிகளின் நிலை என்ன?”
“அவர்களும் அப்செட்தான். அதே நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக அதனிடம் இருந்து விலகி வருகின்றன. “போக்குவரத்துத் துறையை திமுக தனியார் வசம் தாரைவார்க்க பார்க்கிறது. ஊழியர்கள் ஊதிய பிரச்சனையை இழுத்தடிக்கிறது” என்பது போன்ற பிரச்சினைகளை எழுப்பி போராட்டங்களை நடத்த தொடங்கியுள்ளன கம்யூனிஸ்ட் கட்சிகள். மறுபக்கம் தொல்.திருமாவளவன் தன் பங்குக்கு, ‘கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்கு பதில் கலவரத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் போலீஸ் தீவிரம் காட்டுகிறது’ என்று புகார் தெரிவித்துள்ளார். இதில் உளவுத்துறையினர் கலவரத்துக்கு விடுதலை சிறுத்தைகள்தான் காரணம் என்ற தகவலை பரவலாக ஊடகங்கள் மூலம் பரப்பப்புவதாகவும் அக்கட்சியினர் பொருமுகிறார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியோ, ‘சுவரொட்டிகளில் மோடி படத்தை ஓட்டிய பாரதிய ஜனதா நிர்வாகிகளை போலீஸார் கைது செய்யவில்லை. பாரதிய ஜனதாவைப் பார்த்து காவல்துறை பயன்படுகிறதா’ என்று கேட்கிறார். இதற்கெல்லாம் திமுக தரப்பில் இருந்து மவுனம் மட்டுமே பதிலாக இருக்கிறது.”
“செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவைப் பற்றி வேறு ஏதாவது தகவல் இருக்கிறதா?”
“இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலருக்கு அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டன. ஆனால் ரஜினியைத் தவிர மற்ற முன்னணி நடிகர்கள் கலந்துகொள்ளாததால் திமுகவினர் அப்செட்டில் இருக்கிறார்கள். அதுபோல் தனக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்று புகார் அளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு பின்னர் விளையாட்டுத் துறை அமைச்சரே சென்று நேரில் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவரும் கலந்துகொள்ளவில்லை. அதனால் வராத விழாவுக்காக அவர் ஏன் இப்படி கோபப்பட்டார் என்று திமுகவினர் கேட்கிறார்கள்.”
“நல்ல கேள்விதான்”
“அதே நேரத்தில் இந்த விழாவில் எந்த விதத்திலும் பிரதமரை காயப்படுத்தி விடவேண்டாம் என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருந்துள்ளார் முதல்வர். இதனாலேயே தான் பேசும்போது கட்சிக்காரர்கள் ஆரவாரங்களில் ஈடுபட வேண்டாம் என்று உத்தரவிட்டாராம்.”
“அது இருக்கட்டும், சென்னை விமான நிலையத்திலாவது பிரதமரை எடப்பாடியால் பார்க்க முடிந்ததா?”
“இல்லை. விமான நிலையத்தில் எடப்பாடி தனது வருகையை பதிவு செய்ததோடு சரி. ஆனால் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியவில்லை. கொங்கு மண்டலத்தில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பதில் அண்ணாமலைக்கும், எடப்பாடிக்கும் இடையே போட்டி நடக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தனது முழு கவனத்தையும் கொங்கு மண்டலத்தில் செலுத்த முயற்சிக்கிறார் அண்ணாமலை. அதற்கான வேலையிலும் இறங்கிவிட்டார். இந்த சூழலில் கொங்கு மண்டலத்தில் அண்ணாமலைக்கு இடைஞ்சலாக எடப்பாடி இருப்பார் என்று பாஜக நினைக்கிறது. அதனால்தான் அவரை பிரதமர் தனியாக சந்திக்கவில்லை என்கிறார்கள் எடப்பாடி ஆதரவு பிரமுகர்கள்.”
“இதற்கு அதிமுகவின் ரியாக்ஷன் என்ன?”
“எடப்பாடிக்கு வேண்டிய தாமரை கட்சி பிரமுகர், இதுபற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாராம். இதுபோன்ற விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அமித் ஷாவுக்குத்தான் உள்ளது. அவருடன் பேசுங்கள் என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார். ஆனால் எடப்பாடி ஆதரவாளர்களோ, ‘நமக்கு பாஜக வேண்டாம் அவர்களால்தான் நாம் சிறுபான்மை இனத்தவரின் வாக்குகளை இழக்கிறோம். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், பாமக போன்ற கட்சிகளுடன் இணைந்து புதிய அணியை உருவாக்குவோம்’ என்று எடப்பாடியின் காதை கடிக்கிறார்களாம்.”
“பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பாராட்டி நீதிபதி ஒருவர் கருத்து சொல்லியிருக்கிறாரே?”
“இதை சக நீதிபதிகள் பெரும்பாலோர் அவ்வளவாக ரசிக்கவில்லையாம். ஒரு கட்சித் தலைவரை புகழ்ந்து நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்ற பேச்சு நீதிபதி வட்டாரத்தில் வரத் தொடங்கியிருக்கிறது. அதேசமயம் திமுக இது ஏதோ திட்டமிட்டு செய்வது போல் இருக்கிறது என்று சந்தேகிக்கப்படுகிறது.”
“திமுக தரப்பு செய்திகள் ஏதாவது இருக்கிறதா?”
“திமுக பொதுச் செயலாளரான துரைமுருகன், தனது மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவியையோ அல்லது வேறு ஏதாவது முக்கிய பதவியோ தரவேண்டும் என்று ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறாராம். ஆனால் இதற்கு சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. இதனால் அவர் முதல்வர் மீது வருத்தத்தில் இருக்கிறார் என்கிறார்கள்”.
“பாவம் பொதுச் செயலாளர்.”
“அதே நேரத்தில் எ.வ.வேலு, அக்கட்சியில் ஏக செல்வாக்குடன் இருக்கிறார். தன்னை பார்க்க வரும் கட்சிக்காரர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் தன்னால் முடிந்ததை உடனே செய்து கொடுக்கிறாராம். சக அமைச்சர்களுக்கு தன்னிடம் வரும் கோரிக்கை மனுக்களை அனுப்புவதோடு, உடனே செய்து தரச் சொல்லி வருகிறாராம். இது மாவட்டச் செயலாளர்கள் அளவில் பேசப்படுகிறது. சில நாட்களுக்கு முன் முதல்வர் நடத்திய அமைச்சரவை கூட்டத்தில், எ.வ.வேலு நடத்திய கட்சி நிகழ்ச்சியைப் பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார். அதனால் முதல்வரிடம் அவருக்கு உள்ள செல்வாக்கு தெரியவர, அவரது சிபாரிசுடன் யாராவது வந்தால், அமைச்சர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்களாம்.”
“ஓஹோ?’
“அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத் துறையினர் கடந்த 2 தினங்களுக்கு முன் சுமார் 6 மணிநேரம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னால் உளவுத்துறை அதிகாரியான ஜாபர் சேட்டின் மனைவிக்கு 2 கிரவுண்ட் நிலத்தை ஒதுக்கியது தொடர்பாக அப்போது விசாரித்ததாக சொல்லப்படுகிறது”
“இதுபோன்ற தொல்லைகள் எதிர்காலத்தில் வராமல் இருக்கத்தான் மத்திய அரசோடு திமுக ஒத்துப்போகிறதோ?”
“சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி 35 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். அப்போது அதிகாரி நடராஜன் இந்தப் பணமெல்லாம் அமைச்சருக்கு போக வேண்டியது என்று சொன்னதாக பரவலாகப் பேசப்பட்டது அதனைத் தொடர்ந்து அமைச்சரின் இலாகா மாற்றப்பட்டது. நடராஜன் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டார். ஆனால் இப்போது சமூக ஆர்வலர்கள் ஊழல் தடுப்பு காவல் துறை நடராஜன் மீது எடுத்த நடவடிக்கை என்ன தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கடிதம் எழுதி கேள்வி கேட்டிருக்கிறார்கள். கடிதம் எழுதியவர்கள் எல்லோரும் பொதுநல வழக்குப் போடுபவர்கள் என்பதால் உடனே நடராஜன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்து சமாளித்து விட்டதாம் அரசு. நடராஜன் மீது நடவடிக்கை எடுத்ததெல்லாம் சரி. அமைச்சர் மீது எப்போது நடவடிக்கை என்ற கேள்வி விரைவில் வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்”
“டி.ஆர் சிகிச்சை முடித்து திரும்பிவிட்டாரே?”
“ஆமாம். முன்பு இருந்ததைவிட உற்சாகமாக இருக்கிறராம். கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் திமுகவில் சேரலாமா என்று அவர் யோசித்து வருவதாக சொல்கிறார்கள். அப்படி அவர் மீண்டும் வருவதாக இருந்தால், அவரை சேர்த்துக்கொள்ள ஸ்டாலினும், உதயநிதியும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் கட்சியின் இரண்டாம்கட்ட தலைவர்கள்தான் மீண்டும் எதற்காக அவரை கட்சியில் சேர்க்கவேண்டும் என்று முணுமுணுக்கிறார்கள்” என்றபடி போனை கட் செய்தார் ரகசியா.