உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார். நீண்ட நாள்கள் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வு நடக்கிறது.
சில காலமாகவே மூத்த அமைச்சர்கள் உட்பட திமுக முன்னோடிகள் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தார்கள். இது வழக்கமாக நடப்பதுதான். ‘உதயநிதிக்கு அவரது உழைப்புக்கு தகுதியான பொறுப்பு வழங்கிட வேண்டுமென்று கழகத்தினரும் பொதுமக்களும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்’ என்று இன்றைய முரசொலியில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வரிகளுக்கான அடித்தளம் கடந்த சில மாதங்களாகவே கட்டமைக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த ‘வலியுறுத்தலை’ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். உழைப்பவர்களை தேடிப் பிடித்து பதவி கொடுக்கும் கட்சி அதிமுக என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக என்றாலே வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை தொடர்ந்து வைத்து வருகிறார்.
இந்த விமர்சனங்கள் திமுகவுக்கு புதிதல்ல.
திமுக என்றாலே வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்ற குரல்கள் மீண்டும் பலமாக எழும். மு.க.ஸ்டாலினை கலைஞர் கருணாநிதி முன்னிறுத்தியபோதிலிருந்து இந்த விமர்சனக் குரல்கள் எழுந்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் திமுக அதையெல்லாம் தாண்டி இன்னும் பலமான கட்சியாகதான் தமிழ்நாட்டில் இருக்கிறது.
வாரிசு அரசியல் என்று விமர்சனம் செய்யும் கட்சிகளின் வரலாறும் அத்தனை ஆரோக்கியமானதாக இல்லை.
அதிமுகவில் எத்தனையோ மூத்த தலைவர்கள் இருந்த போதும் அவர்களையெல்லாம் ஓரம் கட்டி ஜெயலலிதாதான் முன்னணிக்கு வந்தார், காரணம் அவருக்கு எம்.ஜி.ஆரிடத்தில் இருந்த நெருக்கம்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு கட்சியின் மூத்த தலைவர்கள் முதல்வராகவில்லை. எம்.ஜி.ஆரின் மனைவியாக இருந்த வி.என்.ஜானகிதான் திடீரென்று முதல்வரானார். அவருக்குப் பின் எம்.ஜி.ஆரால் அம்மு என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார், பிறகு முதல்வரானார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றாலும் அவரை நீக்கி ஜெயலலிதாவுக்கு எல்லாவுமாக இருந்த ‘சின்னம்மா’வைத்தான் முதல்வராக அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தார்கள். ஆனால் ’ஆண்டவன்’ விதியால் சசிகலாவால் முதல்வராக முடியவில்லை.
அதன்பிறகுதான் சாமானியனுக்கும் பதவி வரும் என்ற கோஷமெல்லாம் அதிமுகவில். இன்றும் முக்கியப் புள்ளிகளின் மகன்கள், உறவினர்கள் அதிமுகவில் அதிகாரத்தில் இருக்கிறார்கள்.
பாஜகவிலும் அமைச்சர்களின் மகன்கள், முக்கிய தலைவர்களின் வாரிசுகள் கட்சிப் பொறுப்புகளில் முன்னிலையில் இருக்கிறார்கள்.
மக்கள் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதால்தான் வாரிசு அரசியல் குடும்ப அரசியல் என்று ஒரு கட்சியின் மேல் புகார் கூறப்படுவதை அழுத்தமாய் எடுத்துக் கொள்வதில்லை.
உதயநிதிக்கு என்ன அனுபவம்? 2019 தேர்தலிலிருந்துதான் தீவிர அரசியலுக்கு வந்தார். அதற்குள் கட்சியில் இளைஞரணி செயலாளர், அமைச்சர் பதவி… இதெல்லாம் சரியா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ஆனால், இன்று தமிழ்நாட்டு பாஜகவின் தலைவராக அண்ணாமலை இருக்கிறார். அவர் 2020 ஆகஸ்ட் மாதம் பாஜகவில் சேருகிறார். 2021 ஜூலையில் மாநிலத் தலைவர் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அதற்கு முன் அவருக்கு எந்த அரசியல் அனுபவமும் கிடையாது. தமிழக பாஜகவில் எத்தனையோ அனுபவம் பெற்ற மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு வருடம் முன்பு கட்சியில் சேர்ந்த அண்ணாமலை தலைவராகிறார்.
வி.என்.ஜானகி முதல்வரானதும், சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், அண்ணாமலை பாஜகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் எந்த அடிப்படையில் என்று மக்கள் கவனித்துக் கொண்டுதானே இருப்பார்கள். அவர்களுக்கு உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தது உறுத்தாது.
இப்போது உதயநிதிக்கு 45 வயதாகிறது. பார்க்க இளைய தோற்றத்தில் இருப்பதால் சின்னப் பையனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள் என்ற எண்ணம் உருவாகிறது. ஆனால் அப்படியல்ல. முதல் முறையாக ஒரு அமைச்சராக 1967ல் கலைஞர் கருணாநிதி பதவியேற்றபோது அவருக்கு வயது 43. முதல்வரானது 45வது வயதில். மு.க.ஸ்டாலின் முதல் முறையாக அமைச்சராக பதவியேற்ற போது அவர் வயது 53.
இப்படி உதயநிதி பதவியேற்புக்கு ஆதரவாக கருத்துக்களை சொல்லிக் கொண்டே போக முடியும். ஆனாலும் திமுகவும் உதயநிதியும் கவனிக்க வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன.
முதல் அம்சம். கலைஞரும் ஸ்டாலினும் உருவான விதம் வேறு. பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 14 வயதிலேயே அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு அரசியல் பொறுப்புகளுக்கு உயர்ந்தவர். 1957ல் சட்டப் பேரவைத் தேர்தலில் கருணாநிதி போட்டியிடும்போது அவருக்கு வயது 33.அதன் பிறகு பத்து வருடங்கள் கழித்துதான் அவர் அமைச்சர் பொறுப்பை ஏற்கிறார்.
மு.க.ஸ்டாலின் முதல் முறையாக 1984ல் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கு வயது 31. அந்தத் தேர்தலில் அவர் தோற்கிறார். அதன்பிறகு 1989 தேர்தலில் வெல்கிறார். திமுக ஆட்சி அமைக்கிறது. ஆனால் அவருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படவில்லை. அவர் முதல்முறையாக அமைச்சரானது 2006ல் அவர் அமைச்சரானது 53வது வயதில். நடுவில் சென்னை மேயராகவும் பணியாற்றியிருக்கிறார். ஆனால் உதயநிதி திமுகவுக்காக பரப்புரை மேற்கொண்டது 2019 நாடாளுமன்றத் தேர்தலில். போட்டியிட்டது 2021 சட்ட ப்பேரவைத் தேர்தலில் அமைச்சராவது 2022ல். கலைஞர், ஸ்டாலின் மற்றும் உதயநிதி வித்தியாசத்தை உணர்ந்துகொள்ளலாம்.
உதயநிதி அமைச்சராக இல்லாவிட்டாலும் அவருக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அப்படியிருக்கையில் இத்தனை அவசரம் ஏன்? என்ற கேள்வி எழுகிறது. மக்கள் மனதிலும் எழும்.
இனிமேல் உதயநிதி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்வார் என்று கூறப்படுகிறது. அவரது நிறுவனமான ரெட்ஜெயண்ட் திரைப்பட விநியோகங்களை நிறுத்திக் கொள்ளுமா, குறைத்துக் கொள்ளுமா அல்லது இப்போது போன்றே வீரியமாக தொடருமா என்பது தெரியவில்லை.
ரெட்ஜெயண்ட் படங்களை வாங்கி விநியோகிப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாம் கணக்காய் இருக்கிறது. சரியாக பணம் வந்து விடுகிறது. நிம்மதியாக இருக்கிறோம் என்று கமல் உட்பட பல திரைக் கலைஞர்கள் ரெட் ஜெயண்டுக்கு ஆதரவாக கருத்துக்கள் சொல்கிறார்கள்.
ஆட்சி மாறி வேறு ஒரு தலைவரும் அவர் சார்ந்த நிறுவனங்களும் வந்தால் அவர்களுக்கு மேடையிலேயே ‘தைரியலட்சுமி’ என்று இடம் மாறி பாராட்டுவதில் திரைக் கலைஞர்கள் சிறந்தவர்கள். அவர்கள் லாபத்துக்காக அவர்கள் சொல்லுவார்கள். அவர்கள் வசதிக்காக பேசுவார்கள்.
ஆனால் மக்கள் பார்வையில் – ஊடகங்களின் பார்வையில் – மிக முக்கியமாய் சமூக ஊடகங்களில் என்ன சொல்லப்படுகிறது என்பது முக்கியம். எல்லா படத்தையும் உதயநிதியே வாங்குறார் என்பது சாதனையாக பார்க்கப்படாது. அடுத்த தேர்தலுக்கு சறுக்கலுக்கான அம்சமாகதான் மாறும். 2006 – 2011 அனுபவங்களை மறந்துவிடக் கூடாது.
இப்போதே விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் என்ற செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. இதையும் மக்கள் கவனிப்பார்கள்.
உதயநிதியின் பேச்சுக்கள் கலகலப்பாகவும் வெளிப்படையாகவும் இருக்கின்றன. அனைவராலும் வேடிக்கையாக ரசிக்கப்படுகின்றன. ஆனால் எல்லாமே வேடிக்கையாக இருக்காது. லவ் டூடே போன் எக்ஸ்சேஞ் குறித்து உதயநிதி பேசியதை பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கிண்டலடித்திருக்கிறார். உதயநிதியும் விஷாலும் ஒரு மேடையில் அவர்களுடைய கல்லூரி காலத்தைப் பற்றி பேசியதும் சர்ச்சையானது. சமூக ஊடகங்கள் பலமாக இருக்கும் இன்றைய காலத்தில் ஒவ்வொரு கருத்தும் வெட்டி, ஒட்டி, திரிக்கப்படும் நிலை இருக்கிறது. பொறுப்புகள் வரும்போது கவனமாக இருக்க வேண்டியது அதிகரிக்கிறது. இது குறித்து முதல்வரே கட்சிக் கூட்டங்களில் பேசியிருக்கிறார்.
எதிர்க் கட்சியாக இருந்து ஆளும் கட்சியை விமர்சித்து கிண்டலடித்துப் பேசுவது எளிது. செங்கலைக் காட்டி வாக்குகளை ஈர்க்க முடியும். ஆனால் ஆளும் கட்சியாக இருந்து விமர்சனங்களுக்குப் பதில் அளிப்பது எளிதல்ல. நீட் விலக்கு எங்கே சொன்னீர்களே என்பார்கள்…அதற்கு அது வந்து..அது வந்து… என்று இழுத்துக் கொண்டிருக்க முடியாது. வாக்குறுதி கொடுத்த 1,000 ரூபாய் பணம் எங்கே என்று கேட்பார்கள். அதற்கும் பதிலளிக்க வேண்டும்.
இத்தனை சிக்கல்களுக்கு இருக்கும்போது உதயநிதியை அமைச்சராக்குவதில் உள்ள வியூகம் என்ன? அவசியம் என்ன? என்பதுதான் முக்கிய கேள்வி.
திமுகவை நோக்கி இளைஞர்களை ஈர்ப்பதற்கான முயற்சி என்று திமுகவினர் குறிப்பிடுகிறார். கட்சிப் பொறுப்பில் மட்டும் இருந்தால் பல காரியங்களை செய்ய இயலாது. அமைச்சர் என்ற கூடுதல் பலம் கிடைக்கும்போது அது திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்கிறார்கள். அண்ணாமலை போன்ற அதிரடி அரசியல்வாதிளுக்கு சரியான பதிலாக உதயநிதி இருப்பார் என்று கூறுகிறார்கள்.
ஒற்றை செங்கலைக் காட்டியே 2019 நாடாளுமன்றத் தேர்தலை திசை திருப்பினார் என்பது அவர்கள் சொல்லும் உதாரணம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எய்ம்ஸ் செங்கல் கவனத்தை ஈர்த்தது என்பது உண்மை.
உதயநிதிக்கு இன்றைய இளைஞர்கள் மொழியில் பேச முடிகிறது. செய்தியாளர்களை தயக்கமில்லாமல் சந்திக்கிறார். கேள்விகளுக்கு சாமர்த்தியமாக பதிலளிக்கிறார். திரை கவர்ச்சி இருப்பது கூடுதல் சிறப்பு. இன்றைய திமுகவில் மூத்த தலைவர்களாக இருக்கையில் உதயநிதி போன்ற இளைய, நட்பான முகம் தேவைதான். ஆனால் இந்தத் தகுதிகள் மட்டும் போதுமா?
வாரிசுகளுக்கு இருக்கும் ஒரே வசதி அவர்கள் முன்னிலைக்கு வருவது எளிதாக இருக்கும். ஆனால் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வாரிசு என்ற தகுதி மட்டுமே போதாது.
இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினை வாரிசு என்று கிண்டல் செய்தார்கள். விமர்சனம் செய்தார்கள். ஆனால் அவரது தொடர் செயல்பாடுகளால் அந்தக் கருத்துக்களை மாற்றியிருக்கிறார். வாரிசு தகுதியால் நிற்பவன் அல்ல, உழைப்பின் அடிப்படையில் நிற்பவன் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அதுதான் இன்று அவரை இந்த இடத்துக்கு உயர்த்தியிருக்கிறது.
உதயநிதிக்கு அவரது குடும்பத்திலேயே இரண்டு ரோல் மாடல்கள் இருக்கிறார்கள். தாத்தா கலைஞரும் அப்பா ஸ்டாலினும். செய்ய வேண்டியவை எவை, செய்யக் கூடாதவை எவை என்பதை தங்கள் அனுபவங்கள் மூலமாக சொல்லியிருக்கிறார்கள்.
தற்போதைய தென்னிந்திய அரசியலில் வாரிசுகள் அதிகாரமிக்க பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள். ஆந்திராவில் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜகன்மோகன் ரெட்டி முதல்வராக இருக்கிறார். தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகன் ராமராவ் அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். கர்நாடக முதல்வராக இருக்கும் பசவராஜ் பொம்மை முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன்.
அரசியலில் வாரிசுள் பொறுப்புக்கு வருவது ஆச்சர்யமல்ல. அதிர்ச்சி தரும் சம்பவங்களும் அல்ல.