மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சத்யராஜ், மகிமா நம்பியார் நடிக்கும் படம் ‘மண்டாடி.’.
இயக்குனர் வெற்றிமாறனிடம் பல ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர் மதிமாறன். இவர் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘செல்பி’
படத்தை இயக்கியவர். இந்த படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்றுகிறார். ஆர்.எஸ். இன்போடெயின்ட்மென்ட் தயாரிக்கிறது.
அது சரி, மண்டாடி என்றால் என்ன அர்த்தம் என்று இயக்குனரிடம் கேட்டால், ‘‘ராமநாதபுரம் கடற்புர கிராமங்களில் நடக்கும் ஒருவித பாய்மர படகு போட்டியை மையமாக வைத்து இந்த படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறேன். இதற்காக பல மாதங்கள் அந்த ஏரியாவில் தங்கியிருந்து அந்த போட்டி, அந்த மனிதர்கள், அங்கே நிலவும் சூழ்நிலை, ஸ்லாங் குறித்து ஆராய்ச்சி செய்து, இந்த ஸ்கிரிப்டை உருவாக்கினேன். ஒரு குழுவாக அந்த பாய்மர படகு போட்டியில் கலந்துகொள்வார்கள். அந்த குழுவை வழிநடத்துபவர் அல்லது அந்த குழு தலைவனுக்கு மண்டாடி என்று பெயர்.
இதில் சூரி மண்டாடியாக வருகிறார். சத்யராஜ்க்கு வித்தியாசமான வேடம். கடலோர கவிதைகள் மாதிரி இதிலும் கலக்குவார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படிதான் படம் இருக்கும் என்று ஒரு பைலட் பிலிமை உருவாக்கினோம். அதுவும், படத்தின் பர்ஸ்ட் லுக்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ’’ என்றார்
சூரி பேசுகையில் ‘‘விடுதலை படத்தின் மூலம் என் வாழ்க்கையை மாற்றியவர் வெற்றிமாறன். இந்த படத்திலும் அவருடன், அவர் டீமுடன் இணைந்து இருக்கிறேன் . விடுதலையை தயாரித்த நிறுவனமே மண்டாடியை தயாரிக்கிறது. இயக்குனர் சுசீந்திரன் மூலம் சினிமாவில் வளர்ந்தேன். பின்னர், பல இயக்குனர்கள் என்னை வளர்ந்தனர். கருடன், கொட்டுக்காளி என எனக்கு வித்தியாசமான கதைகள் கிடைக்கின்றன. இந்த படமும் அப்படி. அடுத்த மாதம் நான் கதைநாயகனாக நடித்த மாமன் திரைக்கு வருகிறது. ஒன்றும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தேன். இப்ப, நல்லா இருக்கிறேன். சக்திக்கு மீறி சம்பாதித்து விட்டேன். இனி, நல்ல படங்கள் பண்ண வேண்டும் என்பது என் ஆசை.
வெற்றிமாறன் படப்பிடிப்புதளத்தில் இந்த பட இயக்குனர் மதியை பார்த்து இ ருக்கிறேன். கடும் உழைப்பாளி. இந்த பட வேலைகள் பல நாட்கள் நடந்து இருக்கிறது. நீங்க நடித்தால் நல்லா இருக்கும்னு என்னிடம் வந்து சொன்னாங்க, மறுக்காமல் நடிக்க வந்தேன். நான் மதுரையில இருக்கிறேன். அங்கே இருந்த 150 கிலோ மீட்டர் துாரத்தில் இருக்கிற ராமநாதபுரத்தில் இந்த வீர விளையாட்டு நடக்கிறது. உயிரை பயணம் வைத்து அதை செய்கிறார்கள். அதை வெளியுலகிற்கு சொல்ல வருகிறது மண்டாடி. சத்யராஜ் இந்த படத்தில் நடிப்பது எங்களுக்கு பெருமை. கருடன் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க விரும்பினேன், மாமன் படத்துக்கும்
விரும்பினேன். அது நடக்கவில்லை. மண்டாடிக்குதான் நடந்து இருக்கிறது. இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் டீசரிலேயே அவர் மிரட்டி இருக்கிறார்” என்றார்.