மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி துன்புறுத்தப்படும் வீடியோவை அகற்ற சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல் என்ற செய்தி வந்திருக்கிறது.
தேவையான நடவடிக்கைதான். இந்த வீடியோக்கள் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும், கலவர சூழலை உருவாக்கும் என்பதேல்லாம் சரிதான். ஆனால் அகற்றப்பட வேண்டியது இந்த வீடியோக்கள் மட்டுமல்ல, மணிப்பூரில் இத்தனை நாட்களாக கலவரத்தை அடக்காத அரசையும் அதன் தலைவர்களையும்தான்.
மே 3 ஆம் தேதி மணிப்பூரில் மலைவாழ் மக்களுக்கும் பள்ளத்தாக்கு மக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது. கலவரங்கள் வெடித்தன. 100க் கணக்கானோர் கொல்லப்பட்டனர். 78 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் இன்று மணிப்பூர் அதிர்ச்சி தரும் பூமியாகவே இருக்கிறது. இன்னும் அங்கே அமைதி திரும்பவில்லை.
நேற்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வெளியானது. இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி, அவர்களின் அந்தரங்க உறுப்புகளை தடவிக் கொண்டு ஊர்வலமாய் அழைத்துப் போகும் பதைபதைக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இருந்தன. அந்தப் பெண்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்ற செய்தியும் வெளியானது.
வீடியோ வெளிவந்ததும் இந்தியா அதிர்ந்தது. இந்தியா என்றால் எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா அல்ல, ஒட்டு மொத்த இந்தியா. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள். இத்தனை நாட்கள் கடந்தும் மணிப்பூரில் அமைதியைக் கொண்டு வராததற்கு மத்திய மற்றும் மணிப்பூர் பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
இத்தனை பெரிய கலவரங்கள் நடந்த போதும் அங்கு செல்லாத, மணிப்பூர் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவிக்காத பிரதமர் மோடி இன்று மணிப்பூர் குறித்து பேசிவிட்டார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, “மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் நாகரிக சமூகத்துக்கான அவமானம். இதற்காக நாடு வெட்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டங்களை இயற்றும்படி நான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தச் சம்பவம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், குற்றவாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தப்பக் கூடாது. நான் நாட்டுக்கு உறுதியளிக்கிறேன். சட்டம் அதன் முழு பலத்துடன் தனது கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது” என்று கூறினார்.
மணிப்பூர் மகள்களுக்காக வருத்தப்பட்டு பேசிய பிரதமர் அந்தப் பேச்சில் அரசியலையும் கலந்துவிட்டார். ராஜாஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்கள் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறார். அங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.
மணிப்பூர் பெண்களுக்கு நடந்த கொடூர சம்பவம் நேற்றுதான் பொதுவெளிக்கு வந்தாலும், இந்தக் கொடுமை நடந்தது மே 4ஆம் தேதி என்று கூறப்படுகிறது. ஆனால் இப்போது இந்த வீடியோ வெளிவந்தப் பிறகு நேற்று நள்ளிரவு ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவரை எந்த விசாரனையும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
மணிப்பூர் மாநில முதல்வர் பாஜகவை சேர்ந்த பிரேன் சிங், ’ அந்த வீடியோவைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இது மனித குலத்துக்கே எதிரான குற்றம். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்ய உடனடியாக உத்தரவிட்டேன். மேலும், அந்தக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதிப்படுத்த மாநில அரசு முயற்சி செய்யும். நேற்றிரவு 1:30 மணியளவில் முக்கியக் குற்றவாளியை நாங்கள் கைதுசெய்துவிட்டோம்” என்று கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் மே 4ஆம் தேதி கங்போகி என்ற இடத்தில் நடந்ததாக செய்திகள் சொல்லுகின்றன. பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அலங்கோலமாய் தெருக்கள் வழியே நடத்தி கூட்டி வரும்போது அங்கு மணிப்பூர் மாநில காவல்துறையும் இருந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மணிப்பூர் காவல்துறையினர் இந்தக் கொடூரத்தை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லையாம். இதில் ஒரு பெண்ணின் தந்தையும் தம்பியும் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த இரண்டு பெண்களும் குக்கி பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மெய்தி (Meitei) சமூகத்தை சேர்ந்தவர்கள். மெய்தி சமூகத்தினர் தாக்குதல் நடத்த கிராமத்தை நோக்கி வருகிறார்கள் என்றதும் குகி (Kuki) பழங்குடி இனத்தை சேர்ந்த கிராமத்து மக்கள் கிராமத்தை விட்டு காட்டுப் பகுதிக்குள் ஓடியிருக்கிறார். ஆனால் இந்த இரண்டு பெண்களாலும் அவர்கள் குடும்பத்தாலும் தப்பிக்க முடியவில்லை. கலவரக்காரர்களிடம் மாட்டியிருக்கிறார்கள்.