கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உல்ள ஹரீஷ் கல்யாண் கலந்து கொள்ளும் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுகிறார். இதே போல தினேஷ் கிரிக்கெட் பைத்தியமாக அலைகிறார். தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் வேலையை விட கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால், எந்த ஊரில் கிரிக்கெட் நடந்தாலும் விளையாட கிளம்பி விடுவார். இளைஞர் ஹரிஷ் கல்யாண், சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தாலும், சாதி பாகுபாட்டால் தனது சொந்த ஊர் கிரிக்கெட் அணியால் நிராகரிக்கப்படுகிறார். இதனால், வாய்ப்பு வழங்கும் அணிகளில் கெஸ்ட் வீரராக விளையாடி தனது கிரிக்கெட் ஆர்வத்தை தீர்த்துக் கொள்கிறார்.
இந்த இருவருக்கும் இடையே கிரிக்கெட் மூலம் ஆரம்பிக்கும் ஈகோ மோதல், அவர்களது வாழ்க்கையிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. என்ன தான் பிரச்சனை வந்தாலும் கிரிக்கெட் விளையாடுவதை மட்டும் விடாமல் இருக்கும் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட ஈகோ மோதல் மற்றும் மனிதர்களின் மனதில் இருக்கும் பாகுபாடு, அதே கிரிக்கெட் விளையாட்டு மூலம் எப்படி கலையப்படுகிறது, என்பதை யதார்த்த,மான படப்பிடிப்பில் மனதை கவரும் வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து.
இதுவரைக்கும் லவ்வர் பாய் என்ற அடையாளத்துடன் படங்களில் நடித்து வந்த ஹரீஷ் கல்யாண் இந்த கதையில் தன்னை ஒப்படைத்து கிராமத்து புழுதியை அப்பிக் கொண்டு கதாபாத்திரமாக மாறியிருக்கிறார். தினேஷுடனான ஈகோ மோதலாகட்டும், அவர் ஈகோவை சீண்டிவிட்டு விளையாட வைப்பதாகட்டும் கைதட்டல் வாங்குகிறார் ஹரீஷ் கல்யாண். பெரிய ஹீரொயிசம் இல்லாமல், அதே சமயம் காட்சிகளின் நகர்வில் அந்த பாத்திரத்தை தூக்கிப் பிடிக்கும் திரைக்கதை நுட்பத்துடன் கையாண்டிருக்கிறார் இயக்குனர். இதனால் ஹரீஷ் கேரக்ட்டர் முன்னால் நிற்கிறது.
அவரைப்போலவே தினேஷ்க்கும் இது ஒரு வித்தியாசமான வேடம் மூக்கு நுனியில் நிற்கும் கோபம், மனைவி ஊரில் இல்லாத நாளில் சேலையில் தூங்கும் இடம், நீண்ட நாள் கழித்து வீட்டில் மனைவியைப் பார்க்கும் போது கண்ணீர் வழிய நிற்பதும் கலங்கடிக்கும் காட்சிகள். மனைவியாக வரும் ஸ்வசிகா பல இடங்களில் தன்னை சுற்றியிருக்கும் நடிகர்களை தனது நடிப்பு மூலம் இன்னும் ஜொலிக்க விடுகிறார். பார்வை மூலமாகவே தனது கோபத்தை வெளிக்காட்டுபவர், தனது வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி மூலமாக கதைக்கு வலு சேர்க்கிறார். ஸ்வஸ்திகா மாதிரியான நடிகைக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை.
காளி வெங்கட் உட்பட சின்னச்சின்ன கதாபாத்திரங்களும் வசனங்கள் மூலம் முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்திற்கு பலம். எளிமையான மனிதர்கள் மூலம் அழுத்தமான உணர்வுகளைக் கடத்தியிருக்கிறார் இயக்குனர். ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதிய பாகுபாடு பற்றி கிரிக்கெட் ஆட்டத்தின் மூலம் காட்டியிருக்கும் இயக்குனர் நம்பிக்கை அளிக்கிறார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா கிரிக்கெட் போட்டியும், கதாபாத்திரங்களின் உணர்ச்சியும் சரியாக கடத்துகிறது.