No menu items!

லோகேஷ் கனகராஜ் – கமர்ஷியல் ‘மா[ன்]ஸ்டர்’,

லோகேஷ் கனகராஜ் – கமர்ஷியல் ‘மா[ன்]ஸ்டர்’,

அவியலில் ’களம்’ கண்ட இவர் பக்கம்தான், இப்போது நட்சத்திர குவியல்

நீங்கள் சினிமா ப்ரியாராக இருந்தால், இந்த ஒன்லைனை படித்தப்பிறகும் அந்த ’இவர்’ ‘யாரென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், மொத்தம் 5 வாய்ப்புகள்தான் இருக்கின்றன.

ஒன்று நீங்கள் டாய்லெட்டுக்கு போகும் போதும் கூட யூட்யூப் பக்கம் ஒதுங்காதவராக இருக்கவேண்டும்.

இரண்டு, ஃபேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் போடும் எந்த பதிவையும் படிக்காமலேயே பரபரவென கமெண்ட்டுகளையும், லைக்குகளையும் தட்டிவிட்டபடியே அன்றைய பொழுது நன்றாக கழிந்தது என மதிய உணவுக்கோ அல்லது இரவு உணவுக்கோ வேகவேகமாக கிளம்புவராக இருக்க வேண்டும்.

மூன்று, நீங்கள் இன்றைய இளசுகள் புகுந்து விளையாடும் இன்ஸ்டா, ட்விட்டர் வகையறாக்களைப் பற்றிய ஐடியா எதுவும் இல்லாத டிஜிட்டல் சந்நியாசியாக இருக்கவேண்டும்.

நான்கு, நீங்கள் திருமணமானவராக இருந்தால் உங்கள் குடும்பத்தில் கணவரையோ அல்லது மனைவியையோ கண்டுக்கொள்ளாமல், குழந்தைகளையும் நினைக்காமல் பார்க்கிற வேலையோடு குடும்பம் நடத்துபவராக இருக்கவேண்டும்.

ஐந்து, இப்பொழுதெல்லாம் ஐசியு பற்றி கூட பலருக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் இன்றைக்கு செம பாப்புலராக இருக்கும் ’எல்சியு’ பற்றிய, பொது அறிவு அதிகம் இல்லாத ஒரு அப்பாவியாக நீங்கள் இருக்கவேண்டும்.

ஒருத்தரைப் பற்றி சொல்ல இவ்வளவு பில்டப் தேவையா என்று நீங்கள் கேட்கலாம்.

கண்டிப்பாக தேவைதான். காரணம் இன்று இவர் எடுக்கும் படத்திற்கு ஒவ்வொரு நாளும் அப்படியொரு ப்ரமோஷன் நடக்கிறது. அந்தளவிற்கு சோஷியல் மீடியாவின் ஆதிக்கம் பற்றி தெரிந்திருக்கும் இவருக்கு கமர்ஷியல் சினிமாவின் நுணுக்கமும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. இதனால்தான் இவரை இன்று ’தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்ட்டட் டைரக்டர்’ ஆக நட்சத்திரங்களும், ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள்.

அவர்…

கமர்ஷியல் சினிமாவின் ‘மா[ன்]ஸ்டர்’, லோகேஷ் கனகராஜ்.

யார் இந்த லோகேஷ் கனகராஜ்?

குசும்புக்கு பெயர் பெற்ற கோயம்புத்தூரில் இருக்கும் கிணத்துகடவுதான் இவரது சொந்த ஊர். வயது இப்பொழுது 37. திருமணமாகிவிட்டது. மனைவி ஐஸ்வர்யா. மகள் ஆத்விகா.

லோகேஷ் படித்தது, வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூரில்தான். கொங்கு நாட்டில் பிரபலமான பிஎஸ்ஜி காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் & சயின்ஸ் தயாரிப்பு இவர்.

எல்லோரையும் போலதான் இவரும் படித்தார். அப்படியே கல்லூரி படிப்பை முடித்ததும் ஒரு வேலைக்கும் போனார். வேலைக்குப் போனது வங்கியில் வேலைப் பார்த்த நான்கைந்து வருடங்களாக ஒரே மாதிரியான வேலை. லோகேஷூக்கு போரடித்துவிட்டது.

அப்பொழுதுதான் அவர் வேலைப் பார்த்த நிறுவனத்திற்காக ஒரு ஷார்ட் ஃப்லிம் பண்ணும் வாய்ப்பு. தைரியமாக ஷூட் செய்தார். கடைசியில் முதல் பரிசும் இவருக்குதான்.

அடுத்து ‘அச்சம் தவிர்’ என்று ஒரு குறும் படமொன்றை இயக்கினார். இது நடந்தது 18 டிசம்பர் 20212-ல்.

அப்போது ருத்திராட்ச மாலையையும், காட்டன் சினோக்களையும், வி நெக் பனியன்களையும் அள்ளிப் போட்டுக்கொண்டு சென்னைக்கு வந்தவர்தான் இன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆக அறியப்படுகிறார்.

லோகேஷ் கனகராஜ், இதுவரையில் எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியது இல்லை. ஆனால் இவரது குரு போல் இருந்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ‘அவியல்’யில் மொத்தம் 6 கதைகள். அதில் ஒன்றுதான் லோகேஷ் இயக்கிய ‘களம்’. இந்த ஒரு குறும்படம் இவரை, அப்படியே கோலிவுட்டுக்கு ஜாகை மாற்றியது.

கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனம் மூலம் லோகேஷ் கனகராஜூவுக்கு ஒரு குறும்பட இயக்குநர் என்று ஒரு எண்ட்ரீயை கொடுத்தாலும், சினிமாவில் அவருக்கு அடுத்தப்படியை முன் நீட்டியவர் எஸ்.ஆர். பிரபு.

லோகேஷ் கனகராஜ் யார் என்றே தெரியாத சூழலில், அவர் இயக்கிய படமொன்றை கையில் வைத்து கொண்டு இருந்தார். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் வியாபாரம் ஆகாமல் இருந்தது , அதை எப்படியாவது வியாபாரம் செய்துவிட வேண்டுமென்று தனக்கு தெரிந்த நண்பர்களிடம் எஸ்.ஆர். பிரபு இந்த படத்தின் ட்ரெய்லரை போட்டு காண்பித்த சம்பவங்களும் இருந்தன.

பிறகு எஸ்.ஆர். பிரபுவின் பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் ‘மாநகரம்’ படத்தை 2017-ல் வெளியிட, ஆஹா ஓஹோ என வசூலை அள்ளாவிட்டாலும், விமர்சன ரீதியாக நல்ல பெயரைப் பெற்றது ‘மாநகரம்’.

லோகேஷ் கனகராஜின் வெற்றிக்கு இரண்டாம் படிக்கட்டை அமைத்து கொடுத்த, அதே எஸ்.ஆர். பிரபுதான் மூன்றாவது படிக்கட்டையும் உருவாக்கி கொடுத்தார். அதுதான் ‘கைதி’.

லோகேஷ் கனகராஜ் கதை சொன்ன விதத்தை வைத்து, கார்த்தியும் கமிட்டானார். ’கைதி’ ரிலீஸானதும் வெற்றியின் சுதந்திரக் காற்றை சுவாசித்ததுதான் லோகேஷின் ஆரம்பம்.

இரண்டாவது கியரில் முறுக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்தது பட்டென்று டாப் கியருக்கு போவார் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது நடந்தது. இன்று கமர்ஷியல் ஹீரோவாக பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டுவதில் மன்னன் என்று பெயரெடுத்திருக்கும் விஜயுடன் ‘மாஸ்டர்’ படத்தில் கைக்கோர்த்தார்.

கோவிட் தாக்கம் மிக அதிகமிருந்த காலத்தில், திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன. மக்களும் தங்களது வீட்டில் இருந்தபடியே ஒடிடி-யில் பல்வேறு ரசனைகளிலான படங்களைப் பார்த்து பாத்து பழகி போயிருந்தனர்.

இதனால் கோவிட் தாக்கம் குறைந்த பின்பும் கூட மக்கள் திரையரங்குகளுக்கு வரவில்லை. தமிழ் சினிமா இனி அவ்வளவுதான் என சமூக ஊடகங்களில் ஒப்பாரி வைத்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் ‘வாத்தி கம்மிங்’ என்று எண்ட்ரீ ஆன ‘மாஸ்டர்’. கோவிட்டுக்கு பிறகு வந்த முதல் ப்ளாக் பஸ்டர்.

இந்த வெற்றிதான் அவரை லோகேஷை கமர்ஷியல் இயக்குநராக முன்னிலைப்படுத்தியது.

அடுத்து கமலுடன் ‘விக்ரம்’.

தனது முதல்படைப்பான் ‘களம்; குறும்படத்தில் ஒரு குறும்பட இயக்குநரின் உணர்வுப்பூர்வமான தருணங்களை அழகாய் படம்பிடித்திருப்பார் லோகேஷ் கனகராஜ். அந்த குறும்பட இயக்குநரின் ஷார்ட் ஃப்லிம் சிடி மற்றும் பென் டிரைவை ஒரு பிக் பாக்கெட் அடித்துவிட, அதை அடிப்படையாக வைத்து ஆக்‌ஷனில் விறுவிறுப்பை ஏற்றியிருப்பார். அதில் கமல் ஹாசனின் ‘நம்மவர்’ மீதான காதல் கொண்டிருக்கும் ரசிகனாக ஒரு டச் வைத்திருப்பார்.

இந்த ’டச்’ விக்ரமில் நன்றாகவே வொர்க் அவுட் ஆனது. விக்ரம் படத்தை இரண்டு வெற்றிகள் கொடுத்த இளம் இயக்குநராக லோகேஷ் இயக்கவில்லை.

தனது ஹீரோ கமலின் ஆதர்ச ரசிகனாகவே படம் முடிவடையும் வரையில் இருந்தார்.

சரியாக குறி வைத்தால், எவ்வளவு பெரிய டார்கெட்டாக இருந்தாலும், ஒரே அடியில் சாய்த்துவிடலாம் என்பதற்கு சமீப காலத்தில் மிகச் சரியான உதாரணம் லோகேஷ் கனகராஜ் என்ற எம்பிஏ பட்டதாரிதான்.

மார்கெட்டில் தனது புதிய தயாரிப்பை கொண்டுவந்து, ஏற்கனவே இருக்கிற கில்லாடிகளுக்கு மத்தியில் எப்படி பிரபலப்படுத்துவது, அதை வியாபாரம் பண்ணுவதற்கு என்ன யுக்திகள் தேவை. என மார்கெட்டிங் ஸ்ட்ரட்டெஜியை சினிமாவிலும் செயல்படுத்தியதுதான் லோகேஷின் வெற்றிக்கு முக்கிய காரணம்,

சந்தையில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் பிராண்டை கையகப்படுத்துவது அல்லது ஏற்கனவே வலுவான செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது, ஒரு பிராண்ட்டுக்கான வரவேற்பை சரியான விளம்பரம் மூலம் மக்களிடையே உருவாக்குவது. இந்த சந்தை விதிகளைதான் தனது படங்களுக்கும் பயன்படுத்தினார்

’விக்ரம்’ படத்திற்கு ரிலீஸ் முன்பாகவே கிடைத்த வரவேற்பு லோகேஷ் கனகராஜின் விளம்பர யுக்தி.

நான்காண்டுகளாக சினிமாவுக்கு வி.ஆர்.எஸ். கொடுத்து காணாமல் போயிருந்த கமலை வைத்து ஆக்‌ஷனை காட்ட, கமல் இதுவரையில் ருசிக்காத கமர்ஷியல் வெற்றியைப் பெற்றது ‘விக்ரம்’, தன்னுடைய பழைய கடன்களையெல்லாம் கூட கமல் அடைப்பதற்கு இந்த ’விக்ரம்’ கைக்கொடுத்தார்.

தனது இரண்டாவது படமான ’கைதி’ படத்தின் காட்சிக்கேற்ற வகையில், வசனத்தில் ‘கோஸ்ட்’ என்று ஒரு வார்த்தையை வைத்திருப்பார்.

அந்த மாயமான அசுரன் யார் என்பது யாருக்கும் தெரியாது. கைதியின் திரைக்கதையின் படி அந்த கோஸ்ட் யார் என்று தெரியவேண்டிய அவசியமும் இல்லை. அதனால் கதையின் போக்கிலேயே காட்சிகளைப் பார்த்தபடியே கைதியை பல லட்சம் பேர் ரசித்துவிட்டார்கள்.

அந்த ’கோஸ்ட்’ ஒரு வார்த்தையை நினைவில் வைத்து கொண்டு அதை தனது நான்காவது படத்தில் பக்காவாக பயன்படுத்தியதை பார்த்துதான் லோகேஷ் கனகராஜை கண்டு மிரண்டுப் போனது கோலிவுட்.

அட இதுதான் ‘எல்சியு’ என்றார்கள்.

விஜய் சேதுபதி, சூர்யா என இரு பெரும் நட்சத்திரங்களை ஒரே படத்தில் கொண்டுவர ’லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸூக்கு’ ஒரு தனி அடையாளம் உருவானது.

இந்த சூழலில்தான் விஜயுடன் மீண்டும் இணைந்து ‘லியோ’வை களமிறங்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இவரது விளம்பர யுக்தியினால் இப்படம் ஷூட்டிங் போவதற்கு முன்பாகவே சேட்டிலைட் உரிமை பெரிய விலைக்குப் போயிருக்கிறது. இப்பொழுதே இதுவரை போட்ட முதலீட்டை தயாரிப்பாளர்கள் எடுத்திருப்பார்கள் என்கிறார்கள்.

இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜூவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 20 கோடி என்கிறார்கள். அதாவது தனது 5-வது படத்திலேயே ஒரு டாப் க்ளாஸ் இயக்குநர் வாங்கும் சம்பளத்தை வாங்குகிறார்.

லோகேஷ் ‘விக்ரம்’ பட ப்ரமோஷனுக்காக ஹைதராபாத் சென்ற போதே தெலுங்கு ஹீரோக்கள் இவரை முண்டியடித்து கொண்டு வந்து சந்தித்தனர். ஆனால் இதுவரை எந்த தெலுங்குப் படத்திலும் லோகேஷ் கமிட்டாகவில்லை.

காரணம் அடுத்த 5 வருடத்திற்கு லோகேஷ் கனகராஜ் பண்ண வேண்டிய படங்கள் வரிசையில் காத்திருக்கின்றன.

விஜயுடன் ‘லியோ’ படம் முடிந்ததும், மீண்டும் கார்த்தியுடன் இணைந்து ‘கைதி 2’.

அடுத்து யாருமே எதிர்பார்க்காத வகையில். சூர்யாவை வைத்து ‘ரோலக்ஸ்’ படத்தை எடுக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

இதற்கு பிறகு மீண்டும் கமலுடன் இணையும், ’விக்ரம் 3’.

இந்த மூன்று படங்களும் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடங்கும் படங்களாக இருக்கும்.

இந்தப் படங்களுக்குப் பிறகு உச்சகட்ட ஆச்சர்யமாக அடிப்படும் பேச்சு என்னவென்றால், ரஜினி நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதில் லோகேஷூக்கு சம்பளம் சுமார் 65 கோடி என்றும் அதிர வைக்கிறார்கள்.

சினிமா மீதிருக்கும் காதலை மட்டுமே நம்பி வந்தாலும், தனது வியாபார யுக்தியை பயன்படுத்தி லோகேஷ் கனகராஜ் இன்று ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்கி இருக்கிறார்.

இதுவரையில் தமிழ் சினிமாவில் வேறெந்த இயக்குநரும் செய்யாத ஒரு நவீன முயற்சி. இதுதான் இப்போது லோகேஷ் கனகராஜை தொடர்ந்து பரபரப்பாக வைத்திருக்கிறது. அவரைச் சுற்றி பவுன்சர்களோடு வலம் வர வைத்திருக்கிறது.

இந்த வெற்றி ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் இவர்கள் கூட அறிந்திராத ஒரு பாப்புலாரிட்டியை கொடுத்திருக்கிறது.

ஆக சினிமாவுக்கு இருந்த இலக்கணங்கள் தொடர்ந்து தகர்க்கப்பட்டு வருகின்றன. அப்படி தகர்த்து வெற்றியை ருசித்தவர்கள் வரிசையில் இப்போது லோகேஷ் கனகராஜூம் இருக்கிறார்.

வாழ்த்துகள் எல்.கே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...