No menu items!

காமராஜர் பற்றி விவாதங்கள் தவிர்ப்போம் – மு.க.ஸ்டாலின்

காமராஜர் பற்றி விவாதங்கள் தவிர்ப்போம் – மு.க.ஸ்டாலின்

“கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர். காமராஜரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்.” என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்.

காமராஜரை ‘பச்சைத்தமிழர்’ என்று போற்றியவர் பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் அண்ணா. காமராஜர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர். உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து அவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு!

அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும். சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி சிவா பேசியது என்ன? சென்னையில் நேற்று முன்நாள் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திருச்சி சிவா, “காமராஜர் மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் கண்டனக் கூட்டம் நடத்தினார். காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்குகிற அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய உத்தரவிட்டார். கலைஞரின் பெருந்தன்மையை பார்த்து நெகிழ்ந்து போன காமராஜர், உயிர் போவதற்கு முன்பு, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். “காமராஜர் குறித்து இழிவாக பேசியதற்காக திருச்சி சிவாவை திமுக தலைமை கண்டிக்க வேண்டும்; திருச்சி சிவாவின் செயலுக்காக அவரும். திமுக தலைமையும் தமிழ்நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று பாமக தலைவர் அன்புமணி கூறியிருந்தார்.

“தனது இறுதி மூச்சு வரை, மக்களுக்காகவே வாழ்ந்த கர்மவீரர் ஐயா காமராஜர் குறித்துப் பேச, திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை.” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில், “முதல்வராக அரசினர் விடுதியில் தங்கியிருந்தபோது வெப்பம் அதிகமாக இருந்தால், மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். அவர் ஏ.சி இல்லாமல் தூங்க மாட்டார் என்று திருச்சி சிவா எம்.பி கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது.

காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் காழ்ப்புணர்ச்சியில் பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. காமராஜர் வாழ்ந்த வீட்டுக்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. அது அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு. காமராஜருக்கு எதிராக பரப்பப்படுகிற கட்டுக்கதைக ளுக்கு பதிலடி கொடுக்காமல் இருந்தால், காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது.” என்று கூறியிருந்தார். விளக்கம் கூறிய திருச்சி சிவா – இந்நிலையில் திருச்சி சிவா அளித்த விளக்கத்தில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் பணியாற்றும் நான், மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல. நாட்டு விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, தியாகத் தழும்பேறி, முதல்வராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி, எல்லோர் மனதிலும் தனித்த இடம் பிடித்த பெருந்தலைவர் காமராஜர் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான். இந்த விளக்கத்தினை எல்லோரும் அன்புகூர்ந்து ஏற்று என் உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

ஆனாலும், காமராஜர் தொடர்பான கருத்துக்கு கடுமையான எதிர்வினைகள் கிளம்பிய நிலையிலும், ஆங்காங்கே திமுக, திருச்சி சிவாவை எதிர்த்து போராட்டங்கள் நடக்கும் நிலையிலும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின், “கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர். காமராஜரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்.” என்று அறிவுரை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...