இந்த வருடம் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாகி இருக்கிறது விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவர இருக்கும் .லியோ’. அக்டோபர் 29-ம் தேதி வெளியாக இருப்பதால், இம்மாதம் 30-ம் தேதி லியோவின் இசை வெளியீட்டு விழாவை திட்டமிட்டு வருகிறார்கள்.
நேரு விளையாட்டு உள்ளரங்கத்தில் இசை வெளியீட்டு விழாவை வைப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில்தான் சமூக வலைதளத்தில், லியோ இசை வெளியீட்டு விழாவை நேரு விளையாட்டு உள்ளரங்கத்தில் நடத்துவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இதற்கு காரணம் லியோ படத்தின் சென்னை செங்கல்பட்டு, வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு விநியோக உரிமையை ரெட் ஜெயிண்ட்டுக்கு கொடுக்கவில்லை. அதனால்தான் அனுமதி கொடுக்கப்படவில்லை என்று பதிவிட்டு இருக்கிறார்கள்.
இந்த தகவல் தவறு என்று உடனடியாக லியோ படத்தயாரிப்பாளர் லலித் பதிலளித்து இருக்கிறார். இருந்தாலும் சமூக வலைதளத்தில் இப்பிரச்சினை புகைந்து கொண்டுதான் இருக்கிறது.
உண்மையில் என்ன நடக்கிறது என்று விசாரித்தால், லியோ படத்தின் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு விநியோக உரிமையை ரெட் ஜெயிண்ட் கேட்டதாகவும், ஆனால் விஜய் தரப்பில் இதற்கு வாய்ப்பில்லை என்று சொன்னதாகவும் ஒரு தகவல்.
ஆனால் ரெட் ஜெயிண்ட் யாரிடமும், உங்கள் படத்தை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் விநியோகம் செய்கிறோம் என்று கேட்பது இல்லை. தங்களைத் தேடி வரும் தயாரிப்பாளர்களின் படங்களை மட்டுமே விநியோகம் செய்து வருகிறது என்றும் சினிமா வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
இந்த விநியோக உரிமை பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும், ’வாரிசு’ படத்தின் விநியோக உரிமையை ஒரு சில இடங்களுக்கு கடைசி நேரத்தில் கொடுத்தது போல் ‘லியோ’ பட விஷயத்திலும் நடக்கலாம். அதனால் விநியோக உரிமை பிரச்சினை மட்டுமே இந்த கிசுகிசுக்கு காரணம் இல்லை என்கிறார்கள்.
அப்படியானால் என்ன பிரச்சினை என்று கேட்டால், படம் வெளியாகும் நாளில் அதிகாலை காட்சிக்கு இப்போது அனுமதி இல்லை. ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘ஜெயிலர்’ படத்திற்கும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல் உதயநிதி நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ படத்திற்கும் அதிகாலை காட்சி அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் லியோ படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி வேண்டுமென விஜய் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறதாம்.
பெரும் பட்ஜெட் என்பதால், அதிகாலை காட்சி இருந்தால் டிக்கெட் விலையை உயர்த்தி, முதல் நாளிலேயே பெரும் தொகையை வசூல் செய்துவிடலாம் என்ற வியாபார கணக்கே இப்போதைய புகைச்சலுக்கு காரணம் என்கிறார்கள்.
ரெட் ஜெயிண்ட்டுக்கு விநியோக உரிமையைக் கொடுக்கவில்லை என்பதால் ‘லியோ’ இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுப்பு என்ற தகவல் பரவினால், அது விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக குரல் கொடுப்பார்கள். இதைப் பார்க்கும் போது ஆளுங்கட்சி வேண்டுமென்ற அனுமதி மறுப்பது போல் தெரியும். இதனால் உண்டாகும் நெருக்கடியைத் தவிர்க்க, அதிகாலை காட்சிக்கு அனுமதி வாங்கி விடலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது.
ஆனால் அதிகாலை காட்சிக்கு வாய்ப்பு என்பதே இல்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இப்போதைக்கு வேறு வாய்ப்பே இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
தமிழ்நாட்டில் இப்படியொரு பிரச்சினை ஓடிக்கொண்டிருக்க, இப்போது கேரளாவிலும் #KeralaBoycottLEO என்ற ஹேஷ்டேக்கை பரவ விட்டிருக்கிறார்கள் மோகன்லால் ரசிகர்கள்.
சமூக வலைதளத்தில் விஜயும் மோகன்லாலும் சேர்ந்து நடித்த ‘ஜில்லா’ படத்தில் விஜயின் நடிப்பைப் பற்றி மோகன்லால் ரசிகர்கள் கமெண்ட் அடித்தது, விஜய் ரசிகர்கள் மத்தியில் சூட்டைக் கிளப்பியது. இதனால் விஜய் ரசிகர்கள் மோகன்லால் நடிப்பைப் பற்றி எதிர் கமெண்ட்கள் அடிக்க, இந்தப் பிரச்சினை கேரளாவில் லியோ படத்தைப் புறக்கணிப்போம் என்று ஹேஷ்டேக் போடுமளவிற்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது.