’ரஜினி படமா .. வாய்ப்பு கிடைத்தால் யார்தான் வேண்டாம் என சொல்வார்கள்’, ‘ஒரு தடவையாவது ரஜினி கூட நடிக்கவேண்டும்’, ‘எப்படியாவது கமல் கூட ஒரு காட்சிலாவது நடித்தே ஆக வேண்டும்’ இப்படி சினீயர் ஹீரோக்களுடன் நடிப்பதில் இளம் நடிகைகள் பந்தாவாக பேட்டி கொடுப்பது வழக்கம்.
ஆனால் இந்த மாதிரி பேட்டி கொடுத்த நடிகைகளில் அடுத்தக்கட்டத்திற்கே போனவர் கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்து சிவகார்த்திகேயேன், அடுத்து தனுஷ், அடுத்து விஜய் என கமர்ஷியல் ஹீரோயினாக வளர்ச்சிப்பெற்ற காலத்தில் பல வாய்ப்புகள் தேடி வந்தன.
கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு பிஸியாக இருந்த போதுதான், அவருக்கு ’அண்ணாத்தே’ படத்தில் ரஜினியின் தங்கையாக நடிக்க வாய்ப்பு வந்ததது. ரஜினியின் தங்கை கதாபாத்திரம் என்பதால், பின்னாளில் ஹிட்டடித்த மூன்றுப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இதேபோல் தெலுங்கு சினிமாவிலும் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க ‘போலா சங்கர்’ படத்தில் கமிட்டானார். தமிழ் அஜித் நடித்து ஹிட்டான ‘வேதாளம்’ படத்தின் ரீமேக் என்பதால் ஆர்வத்தோடு கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தப் படமும் ஃப்ளாப்.
இதனால் பெரிய ஹீரோக்களுக்கு தங்கை என்று யாராவது கதை சொல்ல வந்தாலே, கீர்த்தி சுரேஷூக்கு கடுப்பேறிவிடுகிறதாம்.
இனி நயன்தாராவுக்குப் பதிலாக ஹீரோயினை மையமாக கொண்ட கதைகளில்தான் நடிப்பேன். கமர்ஷியல் படங்கள் என்றால் முன்னணி ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று கறாராக கூறுகிறாராம்.
இதனால் ’நீங்க தங்கைக்காகவே வாழ்கிற ஒரு தெய்வம். உங்களுக்கு கீர்த்தி சுரேஷ் மாதிரி ஒரு அந்த அழகான தங்கை’ என்று கதை சொல்லி பெரிய ஹீரோக்களுக்கு கதை சொல்லும் கூட்டம் இனி என்ன செய்வது என ஏமாற்றத்தில் கதை சொல்லாமலே திரும்புகிறதாம்.
பெரியாரைச் சீண்டும் சந்தானம்
இரண்டாவது ஹீரோ அளவிற்கு, சந்தானம் காமெடியனாக நடித்தவரையில் அவருக்கென்று ஒரு மார்க்கெட் இருந்தது. சந்தானம் கால்ஷீட்டை வாங்கிய பிறகே ஷூட்டிங் தேதிகளை முடிவு செய்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இதெல்லாம் சந்தானம் ஹீரோவாக நடிப்பதற்கு முன்புவரைதான்.
நம்முடைய காமெடியை வைத்துதான் ஹீரோக்களின் படங்கள் ஓடுகிறது. நான் இல்லையென்றால் அவர்கள் படங்கள் ஃப்ளாப்தான்.. இப்படி ஒரு கணக்கைப் போட்டு பார்த்த சந்தானம், காமெடியனாக இனி நடிக்க மாட்டேன். இனி நானே ஹீரோ என்று களத்தில் இறங்கினார்.
இவர் ஹீரோவாக நடித்த இரண்டுப் படங்கள் வரவேற்பைப் பெற்றன. ஆனால் அடுத்தடுத்து வந்த படங்கள் எதுவும் ஓடவில்லை.
இந்நிலையில்தான் இப்போது அவர் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அப்போதெல்லாம் இந்த ட்ரெய்லர் எந்த சர்ச்சையையும் கிளப்பவில்லை. ஆனால் இப்போது பெரும் பிரச்சினையாக வெடித்திருக்கிறது.
‘சாமியே இல்லன்னு ஊருக்குள்ள சுத்திகிட்டு இருந்தியே அந்த ராமசாமி தானே நீ’ என்ற ஒரேயொரு வசனம் இப்பொழுது கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வசனம் பெரியாரை கிண்டலடிக்கும் வகையில் இருப்பதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி சர்ச்சை கிளம்பியதுமே சந்தானம் அந்த ட்ரெய்லரை தனது சமூக ஊடக கணக்கிலிருந்து நீக்கிவிட்டார்.
ஆனால் பிரச்சினை இப்போது வேறுவிதமாக திவீரமாகி இருக்கிறது. சந்தானம் குறித்து தமிழ்நாட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ‘தீயசக்தி’ என்று குறிப்பிட்ட வீடியோவும் இப்போது வைரலாகி வருகிறது.
மேலும் இந்தப் படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் தமிழ்நாட்டில் வெளியிட இருக்கிறது. இந்தமாதிரி ஒரு வசனம் வந்தப்பிறகு அப்படம் எப்படியிருக்கும், யாரை சீண்டும் வகையில் வசனம் இருக்கிறது என்று தெரியாமல் அதை ரெட்ஜெயண்ட் வெளியிடலாமா? ரெட் ஜெயண்ட் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று குரல்கள் அதிகரித்து இருக்கின்றன.
உதயநிதி ஹீரோவாக அறிமுகமான போது அவருக்கு திரையில் தோள்கொடுத்தவர் சந்தானம் என்பதால்தான் இப்போது சந்தானம் நடித்த படத்தை ரெட்ஜெயண்ட் வெளியிடுகிறது.
இதனால் அந்த வசனத்தை நீக்கும்படி ரெட் ஜெயண்ட் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுமா என்பதை பொறுத்து முடிவு செய்யலாம் என கோலிவுட் தரப்பில் காத்திருக்கிறார்கள்.
தனுஷை பின்னுக்குத் தள்ளிய சிவகார்த்திகேயன்.
சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயனை, ‘3’ படம் மூலம் பெரியத்திரைக்கு வரவழைத்து அழகுப் பார்த்தவர் தனுஷ். இந்தப் படத்திற்குப் பிறகு ‘எதிர் நீச்சல்’ படம் மூலம் அவரை ஹீரோவாகவும் ப்ரமோஷன் கொடுத்தவர் தனுஷ்.
ஆனால் கால ஓட்டத்தில் இப்போது தனுஷூம், சிவகார்த்திகேயனும் பேசிக்கொள்வது இல்லை.
இப்படியொரு சூழலில், தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ என இந்த இரண்டுப்படங்களும் பொங்கலுக்கு ஒரே நேரத்தில் வெளியாகின. இந்த இருப்படங்களுக்கு இடையேதான் வசூல் போட்டி என்ற சூழல் உருவானது.
பொங்கல் விடுமுறை முடியும் தருவாயில் இருக்கும் சூழலில் யாருடைய படம் அதிகம் வசூல் ஆகி இருக்கிறது என்ற கணக்கைப் போட்டு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த ரேஸில் தனுஷை சிவகார்த்திகேயன் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக கூறுகிறார்கள். ‘அயலான்’ 50 கோடி வசூலாகி இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் ‘கேப்டன் மில்லர்’ வசூல் விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த இருப்படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. இந்தப் படங்களுக்கு அங்கே திரையரங்குகள் அதிகம் கிடைக்கவில்லை. காரணம் சங்கராந்திக்கு அங்கே மகேஷ்பாபு, நாகார்ஜூனா என பெரிய தலைகளின் படங்களின் வெளியாகின.